ஜிப்லியில் சிக்கிய நித்தி – உயிருடன் இருப்பது உறுதி!

சாமியார் நித்யானந்தா இறந்துவிட்டதாக தகவல்கள் பரவி வந்த நிலையில் அவர் தோன்றி பேசும் வீடியோவை கைலாசா யூட்யூப் சேனல் வெளியிட்டுள்ளது.
திருவண்ணாமலையை பூர்வீகமாக கொண்ட சாமியார் நித்யானந்தா அங்கே ஒரு மடத்தை நிறுவிய நிலையில், நாளடைவில் அவர் பிரபலமாகி பல நாடுகளில் அவரது மடம் பரவியது. முன்னதாக இவர் ஒரு நடிகையுடன் இருக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து நித்யானந்தா மீது பண மோசடி முதற்கொண்டு பல குற்றச்சாட்டுகள் உள்ளன
நித்யானந்தா மீது தொடரப்பட்ட பாலியல் வழக்கு ஒன்றில் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால் அவர் தலைமறைவானார். அவர் கைலாசா என்ற தீவு நாட்டை உருவாக்கியுள்ளதாகவும், அங்கு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. கைலாசாவுக்கு என தனி கடவுச்சீட்டு போன்றவையும் ட்ரெண்டான நிலையில் அந்த நாடுதான் எங்கிருக்கிறது என தெரியவில்லை.
இந்நிலையில் கைலாசாவில் இருந்து அவ்வபோது தனது சீடர்களிடம் வீடியோ மூலம் பேசி வந்த நித்யானந்தா இறந்துவிட்டதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அது உண்மையில்லை என்று கைலாசா தரப்பில் அறிக்கை வெளியானது.
தற்போது கைலாசா யூட்யூப் சேனலில் நித்யானந்தா 4 மணி நேரம் ஆன்மீக உரையாற்றும் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் அவர் பரம்பொருளின் அருளால் தான் நலமாகவும், ஆரோக்கியமாகவும், பாதுகாப்புடன் ஆனந்தமாக, நிம்மதியாக இருப்பதாக பேசியுள்ளார். உலகின் முதல் ஆன்மீக ஏஐ மாடலை உருவாக்கும் பணிகளில் மும்முரமாக இருப்பதால் அடிக்கடி நேரலையில் வர இயலவில்லை என அவர் பேசியுள்ளார்.