500 மில்லியனை வைத்து யாழில் படம் காட்டாதீர்

வடக்கு, கிழக்கை அபிவிருத்தி செய்வதென்றால் ஆகக் குறைந்தது அங்கு தேவைகளை கண்டறியக்கூடிய முழுமையான ஆய்வுகளை செய்த பின்னரே நிதி ஒதுக்கீட்டை செய்ய வேண்டும் என்றும், அதனை விடுத்து அரசாங்கமே முடிவுகளை எடுப்பதால் அங்கே உண்மையான அபிவிருத்தியை அடைய முடியாது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கான ஒதுக்கீடு மீதான இரண்டாம் நாள் குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அதன்போது கஜேந்திரகுமார் எம்.பி மேலும் தெரிவிக்கையில்,
யாழ். மாவட்டதிற்காக ஒதுக்கப்பட்டுள்ள 500 மில்லியன் ரூபா விசேட நிதி ஒதுக்கீட்டை எவ்வாறு செலவு செய்ய வேண்டும் என்று கடந்த மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் அமைச்சர் சந்திரசேகரன் யோசனை கோரியிருந்தார். ஆனால் இதுவல்ல முறை, போரால் பாதிக்கப்பட்டு 35 வருடங்களுக்கு பின்னால் உள்ள பிரதேசத்தில், மக்களின் பொருளாதாரம் பலவீனமாக இருக்கும் இடத்தில் முழுமையான திட்டமிடல் ஒன்று இருக்க வேண்டியது அவசியமாகும். அதன்படி ஆராய்ந்து நிதி ஒதுக்கப்பட வேண்டும். அதனை விடுத்து கூட்டமொன்றில் அதனை எப்படி செலவு செய்யப் போகின்றீர்கள் என்று கூறுவது முறையல்ல. அங்கு வரும் பதில் சரியானதாக இருக்காது என்று தெரிந்துகொண்டு அந்த நிதியை தாங்கள் விரும்பியபடி பயன்படுத்தக் கூடிய வகையில் மட்டுமே அந்தக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு போரால் பாதிக்கப்பட்ட பிரதேசம். அந்த பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதென்றால் ஆகக் குறைந்தது முழுமையான தேவைகளை கண்டறியக்கூடிய முழுமையான ஆய்வுகளை செய்த பின்னரே நிதி ஒதுக்கீட்டை செய்ய வேண்டும். அதனை செய்யாமல் நாங்கள் முடிவுகளை எடுத்தால் அந்த மக்களின் உண்மையான அபிவிருத்தியை அடைய முடியாது. கிடைக்கும் நிதியை எப்படி பயன்படுத்தப் போகின்றோம் என்று மக்களுக்கு படம் காட்டும் வகையில் கூறி மக்களை ஏதோவொரு வகையில் சமாளித்து மிகப்பெரிய நிதியை வேறு வேறு இடங்களுக்கு கொண்டு சென்று பயணிப்பதற்காக மட்டுமே நிதி ஒதுக்கீடு நடக்கின்றதே தவிர அந்த பிரதேசத்தை உண்மையிலேயே கட்டியெழுப்பி அந்த மக்களின் பொருளாதாரத்தை பாதுகாத்து பலப்படுத்தும் முயற்சியாக இருக்கப் போவதில்லை என்றார்.
![]()