இலங்கை

ரணில், மஹிந்தவை பின்பற்றும் அநுர

பொருளாதார கொள்கை விடயத்தில் முன்னாள் ஜனதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும், கடிதங்களில் வைக்கும் கையெழுத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும் அநுரகுமார அரசு பின்பற்றுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட எம்.பி.யும் அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவருமான கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமைஇடம் பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

ரணிலின் பொருளாதார கொள்கையை முழுமையாக மறுசீரமைப்பதாக குறிப்பிட்டுக்கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள் இன்று நாணய நிதியம் விதித்த பரிந்துரைகள் அனைத்தையும் முழுமையாக ஏற்றுக்கொண்டு அதற்கமைய செயற்படுகிறார்கள்.

மத்திய வங்கியின் பிணைமுறி கொடுக்கல் வாங்கலில் மோசடி இடம்பெற்றது என்பது பல ஆணைக்குழுக்களின் அறிக்கைகளிலும், தடயவியல் அறிக்கைகளிலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பான அறிக்கையின் அடிக்குறிப்பில் பல விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆகவே இதனை அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்ளாமல், முறையான விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளருக்கு அரசாங்கம் கடந்த மாதம் 11 ஆம் திகதி கடிதம் ஒன்றை அனுப்பி” விதிக்கப்பட்டுள்ள அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறோம். நிபந்தனைகளின் இலக்குகளை அடைந்துக் கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கடிதத்தில் நிதி பதில் அமைச்சராக அனில் ஜயந்த கையொப்பமிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒருமுறை நாணய நிதியத்துக்கு கடிதம் அனுப்பி வைத்த போது நாட்டில் இருக்கவில்லை. அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் சரத் அமுனுகம குறித்த கடிதத்தில் கைச்சாத்திட்டார். பின்னர் மஹிந்த ராஜபக்ஷ அந்த கடிதத்தில் தான் கைச்சாத்திடவில்லை என்று மக்களிடம் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அநுரகுமாரத திசாநாயக்கவும் தற்போது இவ்வாறே செயற்படுகிறார். நாணய நிதியத்துக்கு கடிதம் அனுப்பும் தினத்தன்று அவர் நாட்டில் இருக்கவில்லை. டுபாய் சென்று விட்டார்.இவரும் தான் கடிதத்தில் கைச்சாத்திடவில்லை என்றே எதிர்காலத்தில் மக்களிடம் கூறுவார்.

2025 ஆம் ஆண்டு பொருளாதார மேம்பாட்டுக்கான அரசாங்கத்தின் திட்டங்கள் என்ன ? வாய்க்கு வந்தப்படி குறிப்பிடுவதை எல்லாம் பொருளாதார கொள்கைகள என்று ஏற்றுக்கொள்ள முடியாது. மொத்த தேசிய உற்பத்தியை இந்தாண்டு 1.6 சதவீதத்தால் அதிகரித்துக் கொள்வதாக குறிப்பிடப்படுகிறது. அதற்கான திட்டங்கள் என்ன? கூட்டுத்தாபன வருமான வரியை 15 ச தவீதத்தால் அதிகரித்துக் கொள்ளவும் அதனூடாக6.8 பில்லியன் ரூபா வருமானத்தை பெற்றுக்கொள்ளவும் எதிர்பார்க்கப்படுகிறது.சிகரெட் மற்றும் மதுபானங்களுக்கான வரியை அதிகரிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான திட்டங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. அனைத்தும் வாய்ச்சொல்லில் மாத்திரம் வரையறுக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் சேவைத்துறைக்கான வரியை 18சதவீதத்தால் அதிகரிப்பதாக குறிப்பிடப்படுகிறது. புகிங். கொம் சேவை ஊடாக முறையான வரி கிடைக்கப்பதில்லை என்று வெளிவிவகாரத்துறை அமைச்சர் கூறுகின்றார் . அமைச்சரை தவறாக வழிநடத்தும் நபரை பார்த்து அமைச்சர் ‘ பைத்தியமா ‘ என்று கேட்க வேண்டும். பொருளாதார விவகாரங்கள் தொடர்பில் கோத்தபாய ராஜபக்ஸவுக்கும் தவறான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இதன் விளைவால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது. ஆகவே தவறான ஆலோசனை கோரலை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

எந்த முறைமையிலாவது அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்வதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. இந்த ஆண்டு 400 பில்லியன் ரூபா அரச வருமானம் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கான மாற்றுத்திட்டங்கள் எதுவும் அரசால் முன்வைக்கப்படவில்லை.நாட்டின் நிதி அதிகாரம் பாராளுமன்றத்துக்கு உண்டு . ஆனால் நாணய நிதியத்துடனான செயற்திட்ட நடவடிக்கைகளை அரசாங்கம் பாராளுமன்றத்துக்கு அறிவிப்பதில்லை என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *