குடி குடும்பத்தை சீரழிக்கும்…. கவிதை… தெய்வன்

ஒரு குடிகாரனின் மனைவி
எழுதும் டைரி குறிப்பு
பிற பெண்களைப்போலத்தான்
பலவித கனவுகளுடன்…
மணமுடிக்க தயாரானாள்…
மணநாளன்றே இரவு அருந்திய…
மதுவின் கிறக்கம் தெளியாமல்தான்…
மாங்கல்யம் அணிவித்தான்…
மணமகன் வீட்டாரின்
சமாளிப்புகளில் சமாதானமடைந்தாள்…!!
இரண்டாவது குழந்தை பிறந்தபிறகு…
தொழிலில் நஷ்டம்…
துயரம் தாளாமல் குடித்தேன் என்றான்…!!
இரவுகளில் மட்டும் சிறிது
குடித்துவிட்டு தூங்கிக்கொள்கிறேன்..
உடல் அலுப்பு என்றான்…!!
பிள்ளைகளுக்கு முடி இறக்கி காது குத்த…
உறவுகளுக்கெல்லாம் அழைப்பிதழ் கொடுத்து…
ஊரைக்கூட்டி நின்ற சபையில்…
அதீத போதையில் தள்ளாடியபடி
வந்து நின்றான்…
வரம்பில்லாத வார்த்தைகளால்…
ரணகளமாக்கினான்…!!
மகிழ்வாய் மனதில் நிற்கவேண்டிய தருணமது…
கெட்ட சொப்பனம் போல்…
நினைக்கையில் எல்லாம்..
கிலி மூட்டியது…!!!
கையிலிருந்த தொழிலையும்
செல்வத்தையும்
குடித்தே அழித்தான்…
உறவுகளெல்லாம் தள்ளி நின்றன..!!
தோளுக்கு வளர்ந்த பிள்ளைகளின் முன்பு…
படுக்கைக்கு அழைத்தான்..
மறுத்தால்…
தகாத வார்த்தைகளினால் வசை பாடினான்…!!
வாழ்வதற்கென்றிருந்த ஒரே வீடும் பறிபோனது…
குந்தித்தின்றால் குன்றும் மாளும் என்பதை நீரூபித்தபடி…
பிற ஆண்களுடன் இணைத்துப்பேசி…
மனைவியை மனதாலும் உடலாலும் துன்புறுத்தினான்…!!
மாங்கல்யத்தையும் விற்று தீர்த்தான்…
குடிபோதையில்
பிள்ளைகளையும்..
அடித்துப்போட்டான்…!!
கணவனின் ஆயுளுக்காய்
கடவுளிடம் பிரார்த்தித்தவள்…
இவனுக்கு ஒரு சாவு வராதா
என்று வாய்விட்டு கதறினாள்..
மாங்கல்யத்தை கண்களில்
ஒற்றிக்கொண்டவள்…
மருந்து வைத்துக்கொன்றுவிடலாமா என..
மனநோயாளி போலப் பிதற்றுகிறாள்…
மெல்ல எழுந்து கண்ணாடி
பார்க்கிறாள்…
அழகான முகமின்று…
வாங்கிய அடி உதைகளினால்…
உதடு கிழிந்து…
முகம் வீங்கி..கண்கள்
இடுங்கிப்போய்
பார்வையை மறைக்கிறது…!!
தான் வணங்கும் தெய்வங்களின் முன் நின்று..
அழுதபடி முறையிடுகிறாள்…
எப்போதும் போலவே…
புகைப்படங்களில்..
புன்னகைத்தபடி..
கம்பீரமாய் வீற்றிருக்கின்றன..
அவள் வணங்கும் தெய்வங்கள்…!!