அமெரிக்க நகரங்களில் ஜனாதிபதி டரம்ப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள்!

வொஷிங்டன், டி.சி. மற்றும் அமெரிக்கா முழுவதும் சனிக்கிழமை (05)ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஒன்று கூடி ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்துக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்தனர்.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரது பில்லியனர் கூட்டாளியான எலோன் மஸ்க் ஆகியோர் அரசாங்கத்தை மாற்றியமைக்கவும் ஜனாதிபதி அதிகாரத்தை விரிவுபடுத்தவும் விரைவான முயற்சியைத் தொடங்கியதிலிருந்து அவர்களுக்கு எதிராக ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய போராட்டமாக இது அமைந்தது.
சமூகப் பிரச்சினைகள் முதல் பொருளாதாரப் பிரச்சினைகள் வரை ட்ரம்பின் நிகழ்ச்சி நிரலில் உள்ள குறைகளை போராட்டக்காரர்கள் மேற்கோள் காட்டி போராட்டத்தை முன்னெடுத்தனர்.
உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான நாடுகள் மீது அமெரிக்கா இறக்குமதி வரிகளை விதிக்கும் என்று ட்ரம்ப் அறிவித்த சில நாட்களுக்குப் பின்னர், லண்டன், பாரிஸ் மற்றும் பெர்லின் உட்பட அமெரிக்காவிற்கு வெளியேயும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
ட்ரம்பின் ஆதரவுடன் பில்லியனர் எலோன் மஸ்க்கின் அரசாங்கத் துறையின் செயல்திறன் குழு, அமெரிக்க அரசாங்கத்தில் 2.3 மில்லியன் கூட்டாட்சி பணியாளர்களில் 200,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை, உள்நாட்டு வருவாய் சேவையில் 20,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யத் தொடங்கியது.
கடந்த ஜனவரி 20 ஆம் திகதி மீண்டும் ஜனாதிபதியாக பெறுப்பேற்ற ட்ரம்பின் நிகழ்ச்சி நிரலின் பெரும்பகுதி, அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்தல், குடியேறிகளை நாடு கடத்துதல், திருநங்கைகளின் உரிமைகளை மாற்றியமைத்தல் மற்றும் சர்வதேச நாடுகளுக்கான வரி விதிப்பு போன்றவற்றினால் பெரும் விமர்சனங்களையும், கண்டனங்களையும் சந்தித்து வருகின்றார்.