புனித சம்பத்தரிசியார் கல்லூரி நினைவுச் சாரல்…. எட்வேட் அருள்நேசதாசன்

புனித சம்பத்தரிசியார் கல்லூரி மாணவர்களின் எதிர்கால கனவு இல்லம். அழியாத நினைவுகளின் காட்சியகம் எனக்கும் கல்லூரிக்குமான உறவின் ஞாபகம் தாலாட்டுகிறது.
அழகிய நினைவுகளால் இதயம் பூரிக்கிறது. நினைவுச் சாரல் அடிக்கிறது. என் எதிர்காலக் கனவுக்கு ஓர் மையப்புள்ளியாக விளங்கிய அறிவாலயத்தை நெஞ்சில் இருத்தி மீட்டிப் பார்க்கிறேன்.
ஆரம்பக்கல்வியை நிறைவு செய்த எனக்கு உயர்கல்விக்கு கரம் கொடுத்தது, புனித சம்பத்தரிசியார் கல்லூரி. பழகிய நண்பர்கள் கற்பித்த ஆசிரியர்களை பிரிகின்ற பரிதவிப்பு.
கனவுகளுடனும் தேடல்களுடனும் கல்லூரிக்குள் நுழைகின்றேன். கல்லூரிக்கதவுகள் அகலத்திறந்து என்னை வரவேற்கிறது. புதிய முகங்கள் புதிய சூழல் எப்படியாகுமோ என்று ஓர் அச்சம்.
வகுப்பு 6ல் ஆண்டில் என் உயர்கல்வியை ஆரம்பித்தேன். நாள் செல்ல செல்ல நட்பு வட்டமும் அதிபர் ஆசிரியர்களின் கவனிப்பும் கண்டிப்பும் கற்பிக்கும் முறையும் என் இதயத்தை தொட்டது. தன்னம்பிக்கையுடன் பயனித்தேன்.

என் பயனத்தின் முதல் மைல்கல் கணிதமேதை ஆசிரியர் அகஸ்ரின் அவர்கள். அவரின் கைபட்டு நான் துலங்கினேன். அவரின் நுண்ணறிவும் இலகுவாகக் கற்பிக்கும் முறையும், கனிவான அணுகுதலும் என்னைக் கணிதத்தின்பால் ஈர்த்தது. ஆண்டுகள் செல்ல செல்ல இன்னும் பல கணித ஆசிரியர்களின் கற்பித்தலினாலும், வழிகாட்டுதலினாலும் நான் கற்றுத்தேர்ந்தேன். அவர்களின் கற்பித்தலின் வழிகாட்டலில் நானும் ஆசிரியனானேன். கிளிநொச்சி மாவட்டத்தில் எனது ஆசிரிய பணியில் உருவாக்கப்பட்ட மாணவன் முதல் பொறியியலாளராக வெளிவந்தார். இந்தப்பெருமைகள் என்னை நெறிப்படுத்திய அகஸ்ரின் மாஸ்ரர் உட்பட ஏனைய கணித ஆசிரியர்களையே சாரும். இன்று நான் அவுஸ்திரேலியாவில் ஒரு பொறியியலாளராகப் பணியாற்றுகிறேன் என்றால் அத்தனை பெருமையும் என் ஆசிரியர்களுக்கே சமர்ப்பனம். கற்பித்தலில் தொட்ட அகஸ்ரின் மாஸ்ரரின் உறவு குடும்ப உறவாக மாறியது. முதுமையிலும் என் தந்தை ஒவ்வொரு கிழமையும் அகஸ்ரின் மாஸ்ரரின் வரவுக்காக காத்திருப்பார். இன்று அவர் இல்லை அவர்pன் நினைவு அழியாது எங்கள் குடும்பத்துடன் வாழுகின்றது. அவரின் ஆன்மா அமைதி பெற வேண்டுகினறேன்.

எனது கல்விப் பயணத்தில் ஆரம்பநிலை, ஆண்டு ஏழில் யாழ்மாவட்ட ரீதியிலான பேச்சுப்போட்டிக்கான மாணவர் தேடலுக்கான சுற்றுநிருபம் ஆசிரியர்களைச் சென்றடைந்தது. வயதுக்கட்டுப்பாடில்லை, எங்கள் கல்லூரி மட்டத்தில் மாணவர் தேடல் இடம்பெற்றது, அப்போட்டிகளின் முடிவில் மாவட்ட ரீதியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கல்லூரி சார்பாக எனக்கு கிடைத்தது. அதிபர் மதுரநாயகம் அடிகளாரினதும் ஆசிரியர் ஊ.சு.யோசவ் அவர்களினதும் பயிற்சியும் அர்ப்பணிப்பும் எனக்கு உந்து சக்தியாக அமைந்தது. பேச்சுப் போட்டியில் யாழ் மாவட்டத்தில் முதல் மாணவனாக வெற்றியீட்டி கல்லூரிக்கு பெருமை சேர்த்தேன். வெற்றியீட்டிய என்னை அரவணைத்து, உச்சிமுகர்ந்த அதிபர்கள் ஆசிரியர்களின் உயரிய பண்பு என் உள்ளத்தை பாதித்தது, காலம் கடந்தும் காலாவதியாகிவிடாத அதிபர்கள் ஆசிரியர்களின் அன்பும் பண்பும் கனிவும் கண்டிப்பும் என் வளர்ச்சியின் படிக்கற்களானது, அழியாத நினைவுகளில் தடம்பதித்து, இன்றும் நன்றியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.
முடிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காது, முயற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்று கற்றுத்தந்த கல்லூரித்தாயை நெஞ்சினிக்கும் இனிய நினைவுகளுடன் கரம்கூப்பி வணங்குகிறேன்.


என் கல்விப்பயணத்தின் இறுதி ஆண்டில் ஆங்கில மொழியில் மட்டுமே நடாத்தப்பட்ட ஆங்கில மொழித்தினம் (English day) தமிழ் மொழியிலும் முத்தமிழ் விழாவாக அரங்கேற அங்கீகாரம் கிடைத்தது. உயர் பிரிவு அதிபர் பிரான்சிஸ் அடிகளார், மத்திய பிரிவு அதிபர் றாஜன் அடிகளார், கூட்டுமுயற்சியில் முத்தமிழ் விழா தமிழ் மொழியிலும் மேடை ஏறியது அன்னைத் தமிழை அரங்கேற்ற அனைத்து மாணவர்களும் உற்சாகமாக ஒன்று திரண்டார்கள் தமிழ் மொழியிலான முத்தமிழ் விழாவின் தலைமைப் பணியை ஏற்றுக் கொண்டேன். வரலாறு தாமாக உருவாவதில்லை வரலாற்றை நாம் தாமே உருவாக்க வேண்டும். அன்னைத் தமிழின் முத்தமிழ் விழா கல்லூரியின் வரலாற்றில் பொன் எழுத்தில் பொறிக்கப்பட வேண்டியது. முத்தமிழ் விழாவின் பிரதம அதிதியாக மூத்த தமிழ் அறிஞர் வணபிதா. தனிநாயகம் அடிகளார் கலந்து சிறப்பித்ததும் ஒரு வரலாற்றுப் பெருமை. தனிநாயகம் அடிகளார் கல்லூரி அதிபர்கள் தமிழ் பண்பாட்டின்படி பொட்டிட்டு பூமாலை சூடி ஆராத்தி எடுத்து நாதஸ்வர இசை முழங்க ஆசிரியர்கள் மாணவர்கள் புடைசூழ அரங்குக்கு அழைத்து வரப்பட்ட இனிய காட்சி என்றும் நினைவில் நின்று நிழலாடுகின்றது.

அதிபர்கள் ஆசிரியர்கள் கரம்பற்றி மாணவர்களின் அயராத உழைப்பில் பண்பாட்டு நிகழ்வுகள், பல்சுவை நிகழ்ச்சிகள், இதயம்தொடும் இன்னிசையுடன் அலங்காரங்கள், ஆரவாரங்கள், ஆர்ப்பரிப்புகள் மத்தியில் அன்னையவள் அரங்கேறினாள் பண்பாட்டு உடையில் மாணவர்கள் பட்டாம் பூச்சியாக வட்டமிட ஒட்டுமொத்தக் கல்லூரியே விழாக்கோலம் பூண்டது. இன் நாள் என் வாழ்வின் பொன்னாள். என் கல்விப்பயணத்தின் இறுதி ஆண்டும் கூட. கல்லூரித் தாயை தொட்டு வணங்கி அதிபர் ஆசிரியர்களுக்கு கரம்பற்றி நன்றி கூறி மாணவர்களை ஆரத்தழுவி அன்பு மழை பொழிய கண்ணீர் மல்க கனத்த நெஞ்சுடன் விடைபெற்று எனது எதிர்கால தேடலுக்கு தயாரானேன். துரும்பாக உள் நுழைந்த என்னை புடமிட்ட கல்லூரித் தாயே வாழ்க வளமுடன் வாழ்கவென வாழ்த்திக்கொண்டே இருக்கின்றேன்.

சம்பத்தரிசியார் கல்லூரியில் இருந்து 1980ம் ஆண்டு விடை பெற்ற எனக்கு கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகள கணித ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து 1982ம் ஆண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தொழில்நுட்பவியலாளராகப் பணியாற்றும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. உள் நுழைந்த எனக்கு என் கனவுகளில் ஒன்றான கலையும் கை கொடுத்தது. சம்பத்தரிசியார் கல்லூரியில் புடமிடப்பட்ட நான் ஒலிவாங்கியைக் கையிலெடுத்து ஒலிபரப்பாளனானேன். வானொலி நாடகம், நிகழ்ச்சி தொகுப்பு இப்படி பன்முக சேவையில் பணியாற்றினேன். நாட்டின் அசாதாரன சூழ்நிலையால் புலம்பெயர்ந்து இங்கிலாந்து நாட்டில் என் பட்டப்படிப்பை முடித்து. ஒரு பொறியியலாளனாக வெளி வந்தேன்.
அவுஸ்திரேலியா மெல்போன் நகரில் Pricision circuit technology கம்பனியில் பொறியியலாளராக பணி ஏற்றிட்ட என் வாழ்வில் நான் கடந்து வந்த கலைவாழ்வும் ஒரு அங்கமானது. அவுஸ்திரேலிய இன்பத்தமிழ் வானொலியில் பகுதிநேர அறிவிப்பாளராக பணியாற்றிய நான் வானமுதம் வானொலியில் (88.6FM, 3ZZZ 92,3FM) ஆகிய வானொலிகளில் தடம்பதித்து ஒரு நிகழ்ச்சி தயாரிப்பாளராக பணியாற்றிக் கொண்டிரு க்கின்றேன்.

இந்நிலையில் கிறுக்கல்களை ஆச்சரியக்குறிகளாக்கிய என் கல்லூரிக் கோயிலையும் கல்வெட்டுகளாய் கலங்கரை விளக்கங்களாய் வாழ வழிகாட்டிய மாணவர்களின் எதிர்காலத்துக்கு ஒளியூட்டிய ஆசிரிய பெருந்தகைகளையும் நன்றியுடன் நினைவு கூருகின்றேன்.

வெறும் கல்லாய் இருந்த மாணவச் செல்வங்களை பட்டை தீட்டி nஐhலிக்கும் வைரமாய் மாற்றிய கல்விமான்களை தன்னகத்தே கொண்ட கல்லூரித்தாய் 150 வருடங்களில் அடிபதித்து நிற்கிறாய். தோணியாக ஏணியாக எம்மை தாலாட்டி பாராட்டி பட்டங்கள் பல பெற்றிட படிக்கல்லாய் விளங்கிய எமது கல்லூரியில்; புடமிடப்பட்ட மாணவன் என்று கூறிக்கொள்வதில் பெருமையடைகிறேன் பேருவகை கொள்கிறேன்.
காலங்கள் கடந்தும் நடந்து வந்த பாதையை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன். கண்ணீர் மல்க கரம் கூப்பி நன்றி கூறுகின்றேன். நிஜங்கள் நிலைப்பதில்லை, நினைவுகள் அழிவதில்லை. காலவதியாகிவிடா இனிய நினைவுகள் என்றும் என்னுடன் வாழ என் பயணம் தொடரும்.
வாழ்க தமிழ் வளர்க சம்பத்தரிசியார் கல்லூரி.
எட்வேட் அருள்நேசதாசன்
பழைய மாணவன் புனித சம்பத்தரிசியார் கல்லூரி
மெல்பேண் அவுஸ்திரேலியா