ஆவி புகுந்ததாக கூறி தலைகீழாக கட்டி தொங்கவிடப்பட்ட 6 மாத குழந்தை

ஆவி புகுந்ததாக கூறி 6 மாத குழந்தையை மந்திரவாதி ஒருவர் தலைகீழாக தீயிக்கு மேல் கட்டி தொங்கவிட்ட பெரும் பரபரப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்தியாவில் மத்தியபிரதேச மாநிலம் சிவ்புரி மாவட்டம் கொலரஸ் பகுதியை சேர்ந்த தம்பதிக்கு 6 மாத ஆண் குழந்தை உள்ளது.
அந்த குழந்தைக்கு கடந்த சில நாட்களுக்கு முன் திடீர் உடல் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது.
அதன் காரணமாக குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்துள்ளது. ஆனால், குழந்தையை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லாமல் பெற்றோர் அதே கிராமத்தை சேர்ந்த மந்திரவாதியிடம் காண்பிப்பதற்காக அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது குழந்தையின் உடலில் ஆவி புகுந்துள்ளதாக மந்திரவாதி கூறியுள்ளார். இந்த மூடநம்பிக்கையை உண்மை என நம்பிய பெற்றோர், குழந்தையின் உடலில் புகுந்துள்ள ஆவியை வெளியேற்றுமாறு மந்திரவாதியிடம் வேண்டியுள்ளனர்.
இதையடுத்து, அவர் நேற்று முன்தினம் செங்கல்களை அடுக்கிவைத்து அதில் விறகுகள் கொண்டு தீ மூட்டியுள்ளார்.
பின்னர், குழந்தையின் உடலில் புகுந்துள்ள ஆவியை விரட்டுவதாக கூறி பெற்றோர் கண் எதிரே அந்த தீயின் முன் பச்சிளம் குழந்தையை மந்திரவாதி கட்டி தலைகீழாக தொங்கவிட்டுள்ளார். இதனால் பச்சிளம் குழந்தை தீயின் வெப்பத்தால் அலறி துடித்துள்ளது.
இந்த சம்பவத்தில் பச்சிளம் குழந்தையின் கண் பகுதியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. இதைக்கண்டு பதறிய பெற்றோர் குழந்தையை மீட்டு வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.
குழந்தையின் கண் பகுதியில் கடுமையாக பாதிப்பு இருந்ததை கண்ட வைத்தியர்கள் இது குறித்து பெற்றோரிடம் விசாரித்தனர்.
அப்போது, மூடநம்பிக்கையில் குழந்தையை தீயின்முன் கட்டி தொங்கவிட்டதை பெற்றோர் கூறினர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த வைத்தியர்கள் குழந்தைக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
குழந்தையின் கண் பார்வை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பார்வையை இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் கண் பார்வை குறித்து 2 நாட்களுக்குப்பின் தான் தெரியவரும் என்று கூறிவிட்டனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நவீன காலத்திலும் மூடநம்பிக்கையின் உச்சத்தால் தீயின் முன் 6 மாத குழந்தை தலைகீழாக தொங்கவிடப்பட்டதில் கண்பார்வை பாதிப்படைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.