கதைகள்

பிறப்பொக்கும் …. மா.சங்கீதா, ஆசிரியை

மா.சங்கீதா, ஆசிரியை

கடவுளே, அந்த டீச்சர் வந்துட்டாங்களே, என்னை பாக்குறாங்களா, ஆமா என்னையத்தான் பாக்குறாங்க, என்னைய மட்டும் தானே பாப்பாங்க, இத்தனை புள்ளைங்கள்ல என்னைய மட்டும்தான் அவங்களுக்கு தெரியனுமா, ‘காவியா காவியா’ன்னு எம்பேரை படியா படிப்பாங்க. வேற எதுக்கு என்ன திட்டத்தான்….

“ஏய் காவியா, எத்தன தடவ சொல்றது பக்கத்துல உள்ள பிள்ளைங்க நோட்டை எடுத்து வச்சுக்க கூடாதுன்னு… நோட்ட வேற கிழிச்சுப்புடுற..புத்தகத்தை எல்லாம் ஒளிச்சு வச்சுக்கிற… ஏன் தான் இப்படி இருக்கியோ… இந்தா இரு வரேன்”னு சொல்லி வந்து தலையில நறுக்குனு ரெண்டு கொட்டு வப்பாங்க…

இருந்தாலும் எனக்கு அந்த டீச்சரை ரொம்ப பிடிக்கும். எம் பேர அவங்க சொல்றப்போ எம்மனசுல ஆச வேகமா எழும்பி திரும்ப உக்காந்துக்கிரும்.

என்னை கண்டிச்சுகிட்டேதான் இருக்காங்க. நாந்தான், எனக்கு தான் ஒண்ணுமே புரிய மாட்டேங்குது. நான் என்ன செய்யனும் செய்யக்கூடாதுன்னு வெளங்க மாட்டேங்குது.எம்மூளைல சர்ருன்னு ஏதோ தோணின உடனே எதையாவது செஞ்சுபுடுறேன்..

அந்த டீச்சர் வேற யாரும் இல்ல . எங்க வகுப்பு டீச்சர்தான்..அவங்க சொல்லுவாங்க, “குறுகுறுன்னு திருதிருன்னு முழிச்சுக்கிட்டு, நீ நினைக்கிற எதையாவது செஞ்சுப்புடுற, உன் மூளை எவ்வளவு வேகமாக வேலை செய்யுது பாரு… நான் சொல்றபடி படிக்கணும் எழுதணும்”னு சொல்லி கண்டிப்பாங்க. ஆனா நா அந்த நேரம் மட்டுந்தான் நெனச்சு படிப்பேன் எழுதுவேன், அப்புறம் எப்பவும் போலத்தான்..பழையபடி என் வேலையைத்தான் செய்வேன். என்னால பாத்தெல்லாம் எழுத முடியும். படிக்கத்தான் எழுத்து நினைவுல தங்க மாட்டேங்குது. ஏழாம் வகுப்பு வந்துட்டேன். இன்னமும் எழுத்து கூட்டி படிக்கத் தெரியல. கை கால் கொறைச்சல் இல்ல. உடம்புல எந்த குறையும் இல்ல. என்னன்னே தெரியல படிப்பு மட்டும் மூளைக்கு ஏறவே மாட்டேங்குது.

ஒரு தடவை டீச்சர் சொன்னாங்க, “இவ தங்கச்சி பாப்பா நல்லா படிக்கிறா, இவ தான் இப்படி இருக்கா,இவ மட்டும் ஏன் இப்படின்னு

யோசிச்சு யோசிச்சு பார்க்கிறேன், எனக்கே புரியல.” அப்படின்னு கவலையோடு சொன்னாங்க.

டீச்சர் சில நேரம் பாசமா பேசுவாங்க, நானும் டீச்சரை நம்பி அவங்க கிட்ட பக்கத்துல நின்னுகிட்டு பாசமா அவங்க சொல்றத கேட்டுக்குவேன். கொஞ்ச நேரம் தான், புள்ளைங்க எல்லாம் சேர்ந்து ஏதாவது டீச்சர்ட்ட சொல்லி வச்சு மாட்டி விட்டுடுங்க. என்னோட பின்னாடி பெஞ்சு கவிநிலா, என்னை கண்காணிக்கிறது மட்டுமே வேலையா வச்சிருப்பா போல.. ‘இன்னும் கொஞ்சம் நல்லா படி’ அப்படின்னு டீச்சர் அவள சொல்றதெல்லாம் அவ காதுல நுழையாது. என்ன பாத்து, “டீச்சர் காவியா என்னை கிள்ளுறா, என்ன முறைக்கிறா,என்ன அடிக்கிறா” அப்டின்னு சொல்றதும், அடிச்ச மாதிரி பாவமா மொகத்தை வச்சுக்கிட்டும் இருக்குறப்போ, விசாரணையே இல்லாம தீர்ப்பும் வழங்கப்பட்டு விடும். “காவியா ஒழுங்கா படிக்க வரதுன்னா வா”அப்டின்னு டீச்சர் மிரட்டியதும் அடுத்த நாள் நான் லீவு தான்..

புள்ளைங்க எல்லாம் என்னை கோள் சொல்லி மாட்டி விட்டதும் அவ்ளோ எளகுன மனசா இருந்த எங்க டீச்சர்,”ஏய் காவியா, நான் என்னதான் பண்றது படிப்பு தான் வரமாட்டேங்குது நல்ல பண்புகள் கூடவா இல்ல.மூளை இருக்கா என்ன?” என்று கத்தி கூச்சலிட்டு டீச்சர் தொண்டை கம்மிரும்.. எனக்கு டீச்சர கத்த வச்சுட்டமேன்னு ரொம்ப வருத்தமா இருக்கும். மனசுக்குள்ள என்ன நானே திட்டிக்குவேன். மனசுக்குள்ள மன்னிப்பு கேட்டு உக்கி போட்டுக்குவேன். ஆனா என்னப் போல வேற புள்ளைங்க டீச்சர இந்த அளவு பாசமா நினைக்க மாட்டாங்கன்னும் எனக்குத் தெரியும். இருந்தாலும் எம்மனசு யாருக்கு புரியப் போகுது?

அடிக்கடி நா லீவு போடுறதால காரணம் கேட்டாங்க டீச்சர். நா மாமா கல்யாணம், சித்தப்பா விட்டு கோவில் திருவிழான்னு சொல்வேன்.சில நேரங்கள்ல துக்கத்துக்கு போனேன்னு கூட சொல்லுவேன். உண்மையா நா போனதைத் தான் பொய் சொல்லாம சொல்லுவேன்.ஆனா டீச்சர் தலைல கைவச்சு சோகமா என்ன பாத்தாங்க. எனக்கு அவங்கள அப்படி பாக்க பிடிக்கல. என்னை திட்டுனா கூட பரவால்ல. எனக்கு டீச்சர சோகமா பாக்குறது கஷ்டமா இருந்துச்சு. அப்புறம் திடீர்னு சிரிச்சுட்டாங்க, எனக்கு சந்தோஷமா இருந்துச்சு. அப்பா டீச்சர் கோவமா இல்லாம சிரிச்சுட்டாங்க. நான் சொல்ற காரணங்களுக்குப் புள்ளைங்க எல்லாம்

சேந்து சிரிக்கும். எனக்கு கொஞ்சம் அவமானமா இருந்தாலும் நானும் சேந்து சிரிப்பேன்.

டீச்சர் எல்லா புள்ளங்க கிட்டயும் ஐடியா கேப்பாங்க,”எப்படி இந்த புள்ளையை லீவு போடாம பள்ளிக்கூடம் வர வைக்கலாம், ஆளுக்கு ஒரு ஐடியா எல்லோரும் சொல்லுங்க.” புள்ளைங்க எல்லாம் என்ன மாட்டி விடுற ஐடியாவா சொல்லும். இருந்தாலும் டீச்சருக்காக நானும் ஆர்வத்துல அடுத்த நாள் பள்ளிக்கூடம் வந்துடுவேன். அதுக்கு அடுத்த நாள் லீவு போட்டு மீண்டும் திட்டு வாங்குவேன். எல்லாம் என்னோட மூளையோட வேலையாக்கும்!அது இஷ்டத்துக்கு எனக்கு கட்டளை போட்டுட்டு கம்முனு இருந்துக்கும். திட்டு வாங்குறதும் கொட்டு வாங்குறதும் நாந்தானே!..

நா லீவு போட்டு வீட்ல இருக்கறப்போ எங்க அப்பாயி அது எங்கெல்லாம் போகுதோ அங்கெல்லாம் என்ன கூட்டிட்டு போகும். எங்க அப்பா கெணத்து வேலயில கால்ல இரும்புக்கம்பி குத்தி காச்ச வந்து செத்து போயிட்டாரு. அவரு போனதுக்கு அப்பறம் எங்க அப்பாயி எங்க மேல உசுரா இருந்துச்சு..சொந்தக்காரங்க வீட்டுக்கு, எல்லா விசேஷத்திற்கும் நடந்தும் பஸ் ஏறியும் போவோம். அதுக்கு மட்டும் என் மேல ரொம்ப பாசம். என்ன நெனைக்கும்னு தெரியல. அது கைய புடிச்சுகிட்டு இந்த ஊரையே சுத்தி வருவேன். விசேஷ வீடுகள்ல எனக்கு கறிய அள்ளி வைக்கும். பூ வாங்கி கொடுக்கும்.கலர் பொட்டு, கை குலுங்க வளையல்னு பொண்ணு மாதிரி திரிவேன். இத பார்த்த என்னோட படிக்கிற பிள்ளைங்க எல்லாருக்கும் பொறாம! ‘இந்த காவியா புள்ளைய பாரு, எவ்ளோ அழகான வளையல் போட்டு இருக்கு’ன்னு பெருமூச்சோட சொல்லுங்க. மூன்றாவது பெஞ்ச் புவனா என்னோட கம்மலையே பாத்துட்டு இருப்பா.. ஆனா என்கிட்ட வந்து நல்லா இருக்குன்னு சொல்ல மாட்டாதுங்க. சொன்னா அவங்களுக்கு அவமானம்.. ஏன்னா, என்ன பாத்தாலே அந்த புள்ளங்களுக்கெல்லாம் ஆகாது. எனக்குப் புரியுது, ஆனாலும் என்னோட மரமண்டை நம்ம கிளாஸ் பிள்ளைங்க தானேனு பாசமா இருக்கத் தோணும். நானா போய் பேசுனா புழுவ பாக்குற மாதிரி இல்ல பாக்குதுங்க!!

எங்க வகுப்புல ஒரு சில புள்ளைங்க மூக்குத்தி போட்டு இருக்குதுங்க. அது ஒத்தக்கல் மூக்குத்தி. பாக்க அழகா அம்சமா இருக்கும். எனக்கு மூக்குத்தி போடணும்னு ஆச. சொன்ன ஒடனே எங்க அப்பாயி அதோட மூக்குத்திய மாத்தி அஞ்சு கல்லுல வாங்கி

வந்து மூக்கு குத்தி விட்டுருச்சு.என்னோட மூக்குத்திய பாத்து வகுப்பு புள்ளங்க எல்லாம் ஒரே சிரிப்பு. “ஏய் காவியா புள்ளய பாரு, பழங்காலத்து கெழவி மாதிரி”ன்னு சொல்லி கிண்டல் பண்ணுச்சுங்க.எங்க டீச்சரும் ரொம்ப சிரிச்சுட்டாங்க.

ஒருநா என்ன பண்ணேன்,நாங்க பள்ளிக்கூடம் போயிட்டு இருந்தப்ப என் தங்கச்சிய புடிச்சு இழுத்துகிட்டு திரும்பவும் வீட்டுக்கு ஓடிப் போயிட்டேன். தங்கச்சி அழுதுகிட்டே இருந்தா. நா ஜாலியா எங்க பக்கத்து வீட்டுக்காரங்களோட சோள வயல்ல போய் சோளக் கருதை ஒடச்சு காஞ்சி போன கடலக் கொடிய போட்டு கொளுத்தி சோளக்கருத சுட்டுத் தின்னேன். நானும் தின்னுகிட்டு அவளுக்கும் கொடுத்தேன். அந்த சின்னப் புள்ள கோவத்துல என்ன திரும்பி கூட பார்க்கல. நாளைக்கு பள்ளிக்கூடம் போறப்போ டீச்சர் திட்டுவாங்களேன்னு கொஞ்சம் பயம் வந்துச்சு. இருந்தாலும் பரவாயில்ல, நாளைக்கு தானே பார்த்துக்கலாம்னு சிரிச்சுக்கிட்டே சோளக் கருதை ரசிச்சு சாப்ட்டேன்.

நானும் எந்தங்கச்சியும் லீவு போட்டதுக்கு எந்தங்கச்சியை கூப்ட்டு காரணம் கேட்டாங்க டீச்சர் . அதுக்கு அவ,”நா பள்ளிக்கூடம் வரைக்கும் வந்துட்டேன் டீச்சர். இந்தப் புள்ள தான் என்னைய சப்பு சப்புன்னு அடிச்சு இழுத்துகிட்டு போச்சு, வீட்டுல நா படிச்சா புத்தகத்தை ஒளிச்சு வச்சுக்கும். நோட்டை கிழிக்கும். அம்மா பின்னி விட்ட தலை முடிய அவுத்து விட்டுரும்”, அப்டின்னு கதை கதையா அளந்தா. டீச்சர் என்ன எந்தங்கச்சி முன்னாலயே அதிகமாக திட்டினாங்க.எனக்கு அவமானமும் அழுகையுமா வந்துச்சு.ஒடனே நா வேகமா,” டீச்சர் டீச்சர், இனிமே நா அடிக்க மாட்டேன் டீச்சர், திட்டமாட்டேன் டீச்சர்”னு சொன்னேன். அதற்கு டீச்சர்,”இனிமே உன் தங்கச்சி கிட்ட பாசமா இருப்பியா” என்று கேட்டாங்க. சரின்னேன். ஒடனே எந்தங்கச்சி, “இங்க உங்ககிட்ட இப்படித்தான் டீச்சர் சொல்லும். ஏன் டீச்சர்ட்ட மாட்டி விட்டேன்னு சொல்லி வீட்ல வந்து என்னை அடிக்கும் டீச்சர்”னு சொன்னா பாரு!! வேற என்ன, மீண்டும் அட்வைஸ், திட்டுதான்..

ஒரு தடவை பள்ளிக்கூடம் போய்ட்டு இருக்கப்போ கடலக்கொல்லையில கடலச் செடிய புடுங்கிபுட்டேன்.. பச்சக் கடல.ஆச தாங்க முடியல. சில்லாங்கல்லு ரோட்டுல விளையாண்டுட்டே போன வெற்றி வேல் பய ஓங்கி வந்து பொரடில அடி கொடுத்தான் பாரு, வலி மூளைக்கு போயிடுச்சு. என்ன

நடந்துச்சு நினைக்கிறதுக்குள்ள கன்னத்துல சப்பு சப்புன்னு அறையுறான். அழுகிறேன், அழுகிறேன், “போத்தா வறண்டி நாயே,இரு இரு டீச்சர்ட்ட சொல்றே”ன்னு சொல்லி இன்னம் ரெண்டு அடி கொடுக்கிறான். வலி தாங்க முடியாம நா முதல்ல வந்து டீச்சர்ட்ட சொல்லிட்டேன். டீச்சர் கேட்டா மூஞ்சிய அந்த பக்கம் திருப்பிக்கிட்டான். டீச்சருக்கு விஷயம் தெரிஞ்சு எம்மேல எப்பவும் உள்ள இரக்கம் வந்துருச்சு. டீச்சரோட கோவத்துக்கு முன்னாடி யாரும் நிக்க முடியாது. கொடுத்தாங்க நாலு அடி. பொதுவா டீச்சர் யாரையும் அடிக்க மாட்டாங்க. அன்பாதான் எதையும் சொல்லுவாங்க. அப்படியே இல்லனாலும் கோவமா திட்டி கண்டிப்பாங்க. அன்னக்குத் தான் அவன டீச்சர் அடிச்சுப் பாத்தேன். “ஏன்டா உங்க வீட்டு பிள்ளனா இப்டி அடிப்பியா, பாவம் அது, எதிர்த்து பேசாது,எதுவும் கேட்காதுன்னுதான அடிச்ச”ன்னு சொல்லி கண்டிச்சாங்க. அப்புறமா அவன சமாதானப்படுத்தி அட்வைஸ் பண்ணாங்க. ‘எல்லோர் கஷ்டத்தையும் புரிஞ்சுக்கணும், தப்பு செஞ்சா அன்பா சொல்லணும்’னு உரைக்கிற மாதிரி சொல்லி புரிய வச்சாங்க. அன்னையிலிருந்து என்கிட்டயும் என்னோட வகுப்பு புள்ளங்கள்ட்டயும் எந்த வம்பு தும்பும் பண்ண மாட்டான். நல்லா படிக்க வேற ஆரம்பிச்சுட்டான் அந்த வெற்றி வேல்.

ஒரு நாள் புருவத்தில் உள்ள முடிய பிளேட வச்சு பக்கத்து வீட்டு பிரியா அக்கா எடுத்து கண் மை போட்டு விட்டது. அதுக்கு எங்க டீச்சர், “உன் வயசு என்ன, இதெல்லாம் செய்யலாமா, இதுதான் கடைசி, இனிமே இப்படி எல்லாம் செய்யக்கூடாது”ன்னு சொல்லி ரொம்ப திட்டுனாங்க.ஒடனே அந்த அக்கா அதோட பியூட்டி பார்லரா நினைச்சுகிட்டு இருக்க சின்ன கடைக்கு என்ன வச்சு தான் ட்ரையல் பாக்குதுன்னு டீச்சர்ட்ட சொல்ல முடியல. அந்த அக்காவ நெனச்சு மனசுக்குள்ளே சிரிச்சுக்கிட்டேன். டீச்சரோட மூளையை குழப்புறது தா எம்மூளைக்கு வேலையா போச்சு..

பரீட்சையில வெறும் கேள்வியை மட்டுமே எழுதுன என்ன எங்க இங்கிலீஷ் டீச்சர் “ஏம்மா காவியா இப்டி பண்ணி வைக்கிற”ன்னு கேட்டதுக்கு,தமிழே எனக்கு எப்படி?? ஆங்கிலம் சொல்லவே வேணாம்னு நெனச்சு நா வருத்தப்படறத தவிர வேற வழி எனக்குத் தெரியல.

எங்க வீட்ல போன பொங்கலுக்கு வெறகு எடுக்கயில கையில செங்கொளவி கொத்தி வீங்கிருச்சு. அதுக்கு எங்க அம்மா அடிச்சாங்க

பாரு, காதுல உள்ள திருகாணி போய் சூடான அடுப்பு சாம்பல்ல தெரிஞ்சு விழுந்து காணாம போச்சு. எனக்கு வாய் ஓரமா ரத்தமா வந்து டீச்சர் கேட்டாங்க, சொன்னேன். அதுக்கு டீச்சர் “இப்படி எல்லாமா பெத்த புள்ளைய அடிப்பாங்க” ன்னு சொல்லி டீச்சர் கண்கலங்கிட்டாங்க. எங்க அம்மாவ வர சொல்லி போன் பண்ணாங்க அவங்க கிட்ட தனியா ஏதேதோ பேசி சொல்லி அனுப்புனாங்க. அன்னயிலேர்ந்து எங்க அம்மா என்ன அடிக்கிறதேயில்ல.

அதுக்கப்பறம் ஒரு நாள் வாரா வாரம் பள்ளிக்கூடத்தை விசிட் பண்ற ஆபிசர் சார் வந்தாரு. என்ன வாசிக்க சொல்லி பாத்து மெல்லக் கற்போர் பதிவேட்டுல என்ன சேர்த்தாரு. “படிப்புல மட்டும்தான் ஸ்லோ, மற்றபடி ஆக்டிவிடீஸ் எல்லாம் நார்மல்தான்”ன்னார்.

எனக்குப் படிக்கப் பிடிக்காமல் இல்லை. ஏறாத என் மண்டைய நான் என்ன செய்ய? நானும் டீச்சர் சொன்னாங்களேன்னு ஒரு பக்கம் முழுசா எழுத்துக்கூட்டி படிச்சுப் பாத்தேன். அந்த நேரம் நிக்குது. கொஞ்சம் நேரத்துல மறக்குது! திரும்பவும் எத்தனையோ தடவ படிச்சு படிச்சு பாக்குறேன். படிக்கத் தெரியல. ஒண்ணும் ஏறல. புத்தகத்த வச்சுட்டேன்.படிச்சா தான் வாழ்க்கையா, வெறுத்துட்டேன். அந்த ரூபி புள்ளைய டீச்சர் பாராட்டுற மாதிரி நாமும் எப்படியாவது டீச்சர்ட்ட பாராட்டு வாங்கணும்னு நெனைப்பேன். ஆனா எங்க, நா மட்டும் ஏன் இப்டி இருக்கேன்? கடவுள் ஏன் எனக்கு மட்டும் கொறை இல்லாத இந்தக் கொறையை வச்சாரு? எனக்கு வெளங்கல..

மாதம் ஒரு முறை எங்க பள்ளிக்கூடத்துக்கு வர மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான ஐஇடி டீச்சர் ஒரு நா வந்தாங்க. கை கால் ஊனமா வீட்ல இருக்க எங்க வகுப்பு திவ்யாவை பாக்க எங்க டீச்சரையும் கூட்டிட்டு போனாங்க. கை, கால் சூம்பிப் போய் படுத்த படுக்கையா தலையைக்கூட அசைக்க முடியாத வாய் கோணி வாநீயா ஊத்திட்டுருக்க திவ்யா.. பாவம்.. அவளது தாத்தாவும் பாட்டியும் அவளோட சின்ன சின்ன சிரிப்புகளையும் அவ கை கால் அசைக்கிறதயும் பாத்து சந்தோஷப்படுற அவங்க மனசுல சோகத்தோட இருப்பதையும் பாத்த எங்க டீச்சரும் அந்த ஐஇடி டீச்சரும் ஏதோ பேசிக்கிட்டே பள்ளிக்கூடத்துக்கு வந்தாங்க. திவ்யாவ நெனச்ச எனக்கு, எந்நெலம எவ்ளவோ பரவாயில்லன்னு

தோணுச்சு. அந்த ஐஇடி டீச்சர் என்ன நல்லா புரிஞ்சுகிட்டு, எப்பவும் அன்பா எழுத்துக்கூட்ட சொல்லிக் கொடுத்தாங்க. எனக்கு பாடம் பிடித்ததோ இல்லையோ அந்த டீச்சர புடிச்சு போச்சு…

திவ்யா வீட்டுக்குப் போனதிலிருந்து எங்க டீச்சர் கொஞ்சம் மாறிப்போய்த்தான் இருந்தாங்க..டீச்சர் என்கிட்ட, “காவியா நீ தினமும் மதியம் சாப்பிட்டதும் என்கிட்ட வந்துரு, தமிழ் வாசிக்க கத்துத் தரேன், கணக்கு போட்டுத் தரேன், ஆங்கில வார்த்தைகள படிக்க சொல்லித் தரேன்னு சொல்லி என்னப் படிக்க ஊக்கப்படுத்துனாங்க. எம்மனசுல ஏதோ புது நம்பிக்கை உண்டாச்சு. அதுக்கப்புறம் நா புது தெம்போட படிக்க ஆரம்பிச்சேன்.

சிறகில்லா பறவையா இருந்த என்ன, கொஞ்சம் நடந்து, கொஞ்சம் எம்பி பறக்க வைக்க முயற்சி பண்ணுனாங்க டீச்சர். நா அவங்க கிட்ட மனசால பாசமா இருக்குறது அந்த டீச்சருக்கும் தெரிஞ்சிருக்கும்னு நெனைச்சுக்கிறேன். அதான் நம்ம மேல இவ்ளோ அக்கறையா இருக்காங்கன்னு ஏதோ நினைச்சுக்கிட்டேன். எப்பவுமே டீச்சர் ரொம்ப பொறுப்பானவங்கதான். எப்படியாவது புள்ளங்கல படிக்க வைக்கணும்னு நெனைப்பாங்க. அதனாலதான் அவங்க வகுப்பு பாதிக்கப்பட கூடாதுன்னு அவங்களோட கொஞ்சம் ஓய்வு நேரத்துல எனக்கு சொல்லிக் குடுக்க நெனக்கிறாங்க, நானும் படிக்க ஆரம்பிச்சேன்.

டீச்சர் ஒரு வாரம் ரொம்ப செரமப்பட்டு எழுத்துக்கூட்டி படிக்க கத்துக் கொடுத்தாங்க. மத்த வேலங்க இருந்தாலும் எனக்காக நேரம் ஒதுக்கி பொறுமையா சொல்லிக் கொடுத்தாங்க. அப்ப டீச்சர எனக்கு ரொம்ப புடிச்சது. டீச்சர்ட்ட நெருக்கமா நின்னுகிட்டு, பாசமா, திட்டு வாங்காம கத்துகிறது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு..

ரெண்டு வாரத்துக்கப் பிறகு ஒரு ஒரு பத்தி பத்தியா தமிழ் வாசிக்க சொல்லித் தந்தாங்க. அப்ப வாசிக்கிறது கொஞ்சம் மனசுல நின்னுச்சு.மூளயிலயும் கொஞ்சங் கொஞ்சமா பதிஞ்சது.. அப்பறம் ஒரு பக்கம் வாசிச்சுட்டோம் டீச்சரும் நானும்!

என்ன திட்டுற எங்க டீச்சர் ஒரு நா சொன்னாங்க, “காவியாவுக்கு எல்லாம் கைத்தட்டுங்கன்னு”. புள்ளங்க எல்லாரும் கைத்தட்டுனாங்க.என் வாழ்க்கையில மறக்க முடியாத சந்தோஷம்ன்னா எனக்கு அதுதான்!!! இடையிடையே டீச்சர், “வெரி

குட் காவியா”ன்னு சொல்றது வானத்துல பறக்குற மாதிரி தோணுச்சு, நா வாழ்க்கையில் ஜெயிச்சிட்ட மாதிரி இருந்துச்சு.

டீச்சர் என்ன பாராட்டுனத எங்க அம்மா, அப்பாயி, தாத்தா கிட்ட போய் சொன்னேன். எங்க அம்மா ஒன்னும் சொல்லாம திரும்பிக்கிட்டப்போ அம்மா அழுகுறது தெரிஞ்சிச்சு. எங்க அப்பாயி உருவி எனக்கு முத்தம் கொடுத்துச்சு. எந்தங்கச்சி மொதமொறையா “அக்கா வாக்கா படிப்போம்”னு சொன்னா.

படிப்பறிவு கெடச்சது கொஞ்சம் கொஞ்சமா வானத்துல சுதந்திரமா பறக்குற பறவையா எனக்கு ஊக்கம் கொடுத்துச்சு.

கர்ப்பிணியா இருந்த எங்களோட டீச்சர் ஆறு மாத லீவு முடிச்சு திரும்பவும் பள்ளிக்கூடத்துக்கு வந்தாங்க.. எங்களுக்கெல்லாம் ஒரே ஆசை.. டீச்சர் குழந்தை எப்படி இருக்கும்?? டீச்சர் மாதிரி அழகா இருக்குமா? கருப்பா சிகப்பா,, என்று எங்களுக்குதெரிஞ்சுக்க ஆசையா இருந்துச்சு..

ஒரு வாரம் ஓடிப்போச்சு. டீச்சர் என்னைய இப்ப எல்லாம் திட்றதே இல்ல, தலையில கொட்டு வைக்கிறது இல்ல,

அதுக்கு எதிர்மாறா,என்னை பாசமா பாக்குறாங்க.. என்கிட்ட அன்பா பேசுறாங்க.. ஏய் காவியா,என்ன செய்ற? அது இதுன்னு என்னை திட்டவே இல்ல. இதை பார்த்து எனக்கு ஆச்சரியம் தாங்க முடியல..

ஒரு நாள் டீச்சர்ட்ட என் மனசுல இருந்தத கேட்டேபுட்டேன்.. டீச்சர் டீச்சர், இப்ப எல்லாம் என்னை ஏன் டீச்சர் திட்ட மாட்டேங்கிறீங்க?? இப்போல்லாம் என்ட்ட ரொம்ப பாசமா இருக்கீங்க டீச்சர்.. அப்படின்னு தைரியம் வந்து கேட்டேன்.

உடனே டீச்சர் கண்ணிலிருந்து கண்ணீர் மேஜையில் பட்டு தெறித்து விழுந்தது. டீச்சர் வாயிலிருந்து வார்த்தைகள் அழுகையாய் வெளிவந்தன, “எனக்கும் உன்னை மாதிரி குழந்தை பிறந்து இருக்கும்மா”….

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.