இலங்கை

தையிட்டிப் போராட்டம் தொடர்பில் கஜேந்திரன், வேலன் சுவாமிகள் விசாரணைக்கு அழைப்பு!

தையிட்டிப் போராட்டம் தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் மற்றும் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் ஆகியோர் இன்று வியாழக்கிழமை (20) நண்பகல்  பலாலிப் பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான அழைப்பாணைக் கடிதம் நேற்றுப் புதன்கிழமை (19 ) பலாலிப் பொலிஸாரால் இருவரிடமும் நேரடியாகக் கையளிக்கப்பட்டுள்ளது.

திட்டமிட்ட பெளத்த ஆக்கிரமிப்புகளைத் தடுக்கக் கோரியும், தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீளவும் கையளிக்குமாறு வலியுறுத்தியும் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்களின் ஏற்பாட்டில் கடந்த வாரம் தையிட்டியில் பாரியளவில் போராட்டம் நடாத்தப்பட்டிருந்தது. இந் நிலையில் பாரிய போராட்டம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே இருவருக்கும் அழைப்பாணைக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் ஜனநாயக அரசியல் உரிமைகளுக்கு அச்சுறுத்தல் விடுத்து மெளனமாக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் பலாலிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நயனகித்தின் திட்டமிட்ட விசாரணை மற்றும் இனவாதம் மிக்க நடவடிக்கைகளுக்கு எதிராகச் செல்வராசா கஜேந்திரன் நேற்றுப் புதன்கிழமை மாலை 3.30 மணியளவில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்தியப் பணிமனையில் நேரடியாக முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார். அவரது முறைப்பாடு மனித உரிமைகள் ஆணைக்குழுவினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் பலாலிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி விரைவில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்தியப் பணிமனைக்கு அழைக்கப்பட்டு விசாரிக்கப்படுவாரென எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, தையிட்டியில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களில் கலந்து கொள்வோரை அச்சுறுத்தும் வகையில் பலாலிப் பொலிஸார் போராட்ட ஆரம்ப காலம் முதல் பல்வேறு வழக்குகளை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதுடன் விசாரணைகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *