முச்சந்தி

ஜெனிவா செல்லும் அமைச்சர் விஜித தலைமையிலான சிறப்பு குழு

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் பொறுப்புக்கூறல் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத் தலைமையிலான இராஜதந்திர சிறப்பு குழு எதிர்வரும் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஜெனிவாவுக்கு விஜயம் செய்கிறது.

இலங்கைக்கு எதிரான போர் குற்றச்சாட்டுகள் குறித்து விசேட அறிக்கையை இலங்கை தரப்பு சமர்பிக்க உள்ளதுடன்,

சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாக்க புதிய அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பான நீண்ட தெளிவுப்படுத்தலை முன்வைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள நிலையில், மனித உரிமை பேரவையின் அமர்வில் சமர்ப்பிக்கப்படும் எந்த தீர்மானத்தின் 51/1 நகல்வடிவையும் இலங்கை தொடர்ந்து எதிர்க்கவும்,

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற போர் குற்றங்கள் குறித்து ஆதாரங்களை சேகரிக்கும் வெளிப்புற பொறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கும் தீர்மானத்தை நிராகரிக்கவும் ஜனாதிபதி அநுர குமார திசாநயக்க தலைமையிலான அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் இறுதி அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தின் நகல்வடிவை நிராகரிப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி கூடிய அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இதேவேளை உள்நாட்டு பொறிமுறை மூலம் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்படுவதாக உறுதியளித்துள்ளது. ஆனால் ஜெனிவா தீர்மானத்தில் உள்ள பல விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

புதிய அரசாங்கத்தின் முன்னெடுப்புகளுக்கு சர்தேசத்தின் ஒத்துழைப்புகளை ஜெனிவாவில் கோரவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

குறிப்பாக தமிழ் மக்களின் பிரச்சனைகள் குறித்து அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மையை பிரதிபலிக்கும் வகையிலேயே சிறப்பறிக்கை அமைய உள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத் குறிப்பிட்டிருந்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button