முச்சந்தி

எமது கடல் வளத்தையும் எமது மீனவர்களையும் பாதுகாக்க அரசாங்கம் எப்போதும் செயற்படும்

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு முடிந்தளவு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது என்றும், எமது கடல் வளத்தையும் எமது மீனவர்களையும் பாதுகாப்பதற்காக அரசாங்கம் எப்போதும் செயற்படும் என்றும் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

வடக்கு கடலில் மீனவர் மோதல் தொடர்சியாக இடம்பெறுகின்றது. நேற்றும் (நேற்று முன்தினம்) மோதல் நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. கடற்படையினருடன் மோதல் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் யாழ்ப்பாண வைத்தியசாலையில் இருக்கின்றனர். இந்த மோதல்கள் இராஜதந்திர பிரச்சினைகள் என்று நீண்ட காலமாக கூறிவந்தாலும் அதற்கு இதுவரையில் தீர்வுகள் கிடைக்கவில்லை. தற்போதைய அரசாங்கம் இதனை தீர்ப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கும் என்று அமைச்சரவை பேச்சாளரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.

அதன்போது பதிலளித்த அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறுகையில்,

இது நீண்ட காலமாக இழுத்துக்கொண்டு போகும் பிரச்சினையாக இருக்கின்றது. இராஜதந்திர ரீதியில் அடிக்கடி இது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த இரண்டு மாதங்களில் இலங்கை கடற்படையினரால் கைதுகள் மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்காக நாங்கள் முடிந்தளவு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். இது யாழ்ப்பாண மீனவர்களுக்கு பாதிப்பான மற்றும் அநீதியான  விடயங்கள் என்பதனால் தீர்க்க முயற்சிக்கின்றோம்.

ஆனால் இது இராஜதந்திர ரீதியிலான பிரச்சினை மட்டுமல்ல. தென்னிந்திய மீனவர்களின் தமது தொழில் தொடர்பான மோதலும் உள்ளது. இராஜதந்திர ரீதியில் எந்தளவு பேச்சுவார்த்தைகளை நடத்தினாலும் எமக்கு இந்தப் பிரச்சினையை முழுமையாக சுகப்படுத்த முடியும் என்று நினைக்கவில்லை. எமது கடல் வளத்தையும் எமது மீனவர்களையும் பாதுகாப்பதற்காக நாம் எப்போதும் இது தொடர்பில் தலையிட்டு வருகின்றோம். இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் நடத்தப்படுகின்றன என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.