இணைய வழி மோசடியால் கோடிக் கணக்கில் பணத்தை இழந்த மக்கள்
நாடளாவிய ரீதியாக அண்மைக் காலத்தில் இடம்பெற்ற இணைய வழி பண மோசடி காரணமாக நாடு முழுவதும் பல கோடி ரூபா வரை மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் இதில் நாட்டு மக்கள் பலர் பணத்தை இழந்திருப்பதுடன்,குறிப்பாக வடக்கு மாகாண மக்களும் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
TTK எனப் பெயரிடப்பட்ட போலி நிறுவனமே,வெறுமனே ஒரு மாத காலத்திற்குள் நாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்களை ஏமாற்றி பல கோடி ரூபா வரை பணத்தை மோசடி செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது மேற்படி மோசடிக் கும்பல் தமது இணைய நிறுவனத்திற்கு ஆட்களை பணிக்கு அமர்த்துவது போன்று பாசாங்கு செய்து அந்த ஊழியர்கள் ஒவ்வொருவரையும் 6000 ரூபாய் தொடக்கம் 14இலட்சம் ரூபாய் வரை அவரவர் தகுதிக்கேற்ப முதலீடு செய்ய வைத்துள்ளது.
அவ்வாறு முதலீடு செய்யும் பணத்தை வெறுமனே மூன்று வாரத்திற்குள் திருப்பி ஈட்டிக் கொள்ளும் அதே வேளையில் -தொடர்ந்து ஒரு வருடத்திற்கு அதே வருமானத்தை நிறுவனம் ஊடாக ஈட்ட முடியும் எனவும் ஆசையை காண்பித்து பெருமளவானவர்களை பணம் செலுத்தி இணைய வைத்து ஏமாற்றியுள்ளது.
அத்தோடு ஒரு ஊழியர் மேலும் ஒருவரை புதிதாக நிறுவனத்திற்கு பணம் செலுத்தி ஊழியராக இணைத்தால் மேலதிக வருமானம் மற்றும் சலுகைகளை பெற முடியும் எனவும் தெரிவித்துள்ளது.
இந் நிலையில் 6000 ரூபா பணம் மற்றும் 16,000ரூபா பணம் செலுத்தியவர்களுக்கு இரண்டு வாரங்கள் சிறிதளவு தொகையை வருமானமாக கொடுத்து நம்பிக்கையை வளர்த்து அதிகளவானவன்களை ஈர்த்ததுடன், 50ஆயிரம் ரூபா மற்றும் ஒரு இலட்சத்து எண்பதாயிரம் ரூபா பணம் செலுத்தியவர்களுடைய வார வருமானத்தை நத்தார் பண்டிகை விடுமுறை,வருடப் பிறப்பு விடுமுறை மற்றும் நிறுவனத்தின் ஆண்டு விழா எனக் கூறி மூன்று வாரங்கள் இழுத்தடித்து நான்காவது வாரம் பணத்தை முழுமையாக சுருட்டிக் கொண்டு சென்றுள்ளது.
ஒரு ஸ்மார்ட் தொலைபேசியில் ஒரு பணியாளர் மாத்திரமே பணி புரிய முடியும் என்ற நிலையில் சிலர் பணம் மீதான மோகத்தால் இரண்டு,மூன்று தொலைபேசிகள் ஊடாக இலட்சக் கணக்கில் பணத்தை செலுத்தி ஏமாந்துள்ளனர்.
மேற்படி நிறுவனம் வற்சப் ஊடாக மேற்கொள்ளும் குறுஞ்செய்தி கலந்துரையாடலில் தமக்கும் -அரசாங்கத்திற்கும் தொடர்பு இருப்பதாகவும்-உரிய அனுமதி பெற்றே நிதிக் கையாடல்களை முன்னெடுப்பதாகவும் தெரிவித்து மக்களை நம்ப வைத்துள்ளது.
இந்த மோசடிச் செயற்பாடானது கொரோனா வைரஸை விட வேகமாகப் பரவிச் சமூகத்தில் பலரை ஏமாற வைத்துள்ளது.
படித்தவர் படிக்காதவர் என்ற வேறுபாடு இன்றி பலரும் இந்த மோசடியில் சிக்குண்டு பணத்தை இழந்துள்ள போதிலும் பலரும் தாம் மோசடியில் சிக்குண்ட விடயத்தை வெளிப்படுத்தாமல் இருப்பது எதிர்காலத்திலும் இப்படியான மோசடிப் பேர்வழிகள் தலைதூக்க காரணமாக அமைந்துவிடும் அபாயம் காணப்படுகின்றது.