கட்டுரைகள்

“சின்னிவிரலை” நீட்டி “நேசம்” போடக் கேட்கின்றனர்! …. நியூசிலாந்து சிற்சபேசன்.

“சின்னிவிரலை” நீட்டி “நேசம்” போடக் கேட்கின்றனர். ஆனால்,
மறுபக்கத்தில் “சின்னிவிரலைக்” காணமுடியவில்லையோ?

தேசிய மக்கள் சக்தியின் எழுச்சி பரவலாகக் கொண்டாடப்படுகின்றது. மாற்றம் எனச் சிலாகிக்கப்படுகின்றது. தேர்தல் முடிவுகளையும், ஆட்சி மாற்றத்தையும் மட்டுமே கவனத்தில்கொண்டு தீர்க்கமான முடிவுக்கு வரமுடியாது. பொங்கலின் சுவை உண்ணும்போதே தெரியும் என்பார்கள். அதேபோன்று, புதிய ஆட்சியாளரின் செயற்பாடுகளே மாற்றத்தின் சாட்சியாகலாம்.

தேர்தலுக்கு முன்னர், தேசிய மக்கள் சக்தியின் ஊழலுக்கு எதிரான கோஷம் வானைப் பிளந்தது. பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கு எதிரான குரல்கள் காதைக் கிழித்தன.

தேர்தலுக்குப் பின்னர், தேசிய மக்கள் சக்தியின் தொனியில் மாற்றத்தைக் காணமுடிகின்றது.

முன்னைய ஆட்சியாளர்களின் வாகனங்களைக் காலிமுகத்திடலில் காட்சிப்படுத்தியதோடு ஊழல் தொடர்பான ஆர்ப்பரிப்பு அடங்கிவிட்டது. அதன்பின்னர், ஊழலுக்கு எதிரான புளித்துப்போன பிரசங்கங்களை மட்டுமே கேட்க முடிகின்றது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்துக்கு எதிரான குரலின் சாயலைக்கூட காணமுடியவில்லை. மாறாக, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை, எவ்வாறு உரியமுறையில் பயன்படுத்தலாம் என்னும் வியாக்கியானங்களையே கேட்கமுடிகின்றது.

பொருளாதாரப் பிரச்சினையே தேசம் எதிர்கொள்ளும் முக்கிய சவாலாகக் கட்டமைக்கப்படுகின்றது. எல்லாப் பிரச்சினைகளுக்குமே “தாய்” என்று சொல்லக்கூடிய இனப்பிரச்சினை மறைக்கப்படுகின்றது. அஃது “பூனை கண்ணை மூடிக்கொள்கின்ற” மனநிலையை நினைவுபடுத்துகின்றது. இனப்பிரச்சினை தொடர்பிலே மாற்றுச்சிந்தனை ஏற்படாதவரையில், நிலைபேறான மாற்றம் என்பது வெறும்கனவாகவே கலைந்துபோகலாம்.

1948க்குப் பின்னர் இனப்பாகுபாடு ஆரம்பமாகியது. கல்வியில் தரப்படுத்தல், வேலைவாய்ப்பில் பாகுபாடு, குடியேற்றத்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறுவகையான நிராகரிப்புகள் ஆரம்பமாகின. இனக்கலவரங்களில், ஆட்சியிலிருப்பவர்களின் பங்கு துல்லியமாக வெளிப்பட்டது. பேசித்தீர்க்க எடுத்த முயற்சிகள் யாவும் விழலுக்கு இறைத்த நீராகின. அதனாலே, தமிழ் சமூகம் விரக்தியின் விளிம்புக்குத் தள்ளப்பட்டது. அதுவே ஆயுதப்போராட்டத்துக்கான துண்டுதலாகியது. ஆக, அதன்பின்னர் ஏற்பட்ட யுத்தம் விளைவு மட்டுமேயாகும்.

பெளத்த-சிங்களப் பேரினவாதத்தினால், நேரடியாகவும் தொடர்ச்சியாகவும் தமிழ்ச்சமூகம் பாதிக்கப்படுகின்றது. முள்ளிவாய்க்கலுக்குப் பின்னர் பதினைந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனாலும்கூட, யுத்தத்தின் வடுக்களைச் சுமந்துகொண்டு எண்ணிலடங்காதோர் இன்றும் வாழ்ந்து கொண்டுள்ளனர். அத்தகையோரை ஆற்றுப்படுத்துவது தொடர்பான சமிக்ஞைகளை புதிய ஆட்சியாளரிடம் காணமுடியவில்லை. மாறாக, ஜேவிபியின் பொதுச்செயலாளர், வெளிவிவகார அமைச்சர் போன்றோர் உதிர்க்கின்ற ஞானமொழிகள் நம்பிக்கையை நறுக்குகின்றன.

புதிய அரசியலமைப்பு, 13வது திருத்தம், மாகாணசபை, சமஷ்டி போன்றவையெல்லாம் வழிமுறைகள் மட்டுமேயாகும். அடிப்படையில், இனப்பிரச்சினையின் ஆழத்தையும், ஏழு தசாப்தங்களாக “நிராகரிக்கப்பட்ட” உணர்வுடன் வாழ்ந்துகொண்டுள்ள ஒரு மக்கள் கூட்டத்தின் உணர்வுகளையும் புரிந்துகொள்ளவேண்டும். அதனூடாக, “நம்பிக்கை” கட்டியெழுப்பப்படவேண்டும். அஃது ஏற்படாதவரையில், “தூய இலங்கை” என்பது, “வியத்கம”, “வடக்கின் வசந்தம்” போன்றவற்றின் தொடர்ச்சியாகிவிடலாம்.

மறுவளத்தில், தமிழ் மக்களின் மனநிலையில் நெகிழ்வு ஏற்பட்டிருக்கின்றது.

தமிழ் கட்சிகளுக்கு மட்டுமே தமிழ் மக்கள் வாக்களிப்பது வழமையாகும்.

தென்னிலங்கைக் கட்சிகளுக்கெனத் தமிழ் மக்கள் வாக்களிப்பதில்லை. மாறாக, தென்னிலங்கை கட்சியின் சின்னத்தில் போட்டியிடுகின்ற உள்ளூரில் செல்வாக்கு உள்ளவருக்கே வாக்களித்துள்ளனர். ஆனால், 2024ல் தேசிய மக்கள் சக்தி என்னும் கட்சிக்காக வாக்களித்துள்ளனர்.

அதுமட்டுமல்ல, இலங்கையின் பிறபகுதிகளின் வாக்களிப்பு மனநிலைக்கு நேரெதிரான மனநிலையையே 2009க்குப் பின்னர் வளர்த்துக்கொண்டிருந்தனர். அதனுடைய சாயலை 2024ல் காணமுடியவில்லை. தாயகம், தேசியம், சுயநிர்ணயம், அரசியல்கைதிகள், காணிவிடுவிப்பு போன்றவைகளுக்கு அப்பால், வெளிப்படையாகச், சிந்திக்கத் துணிந்தனர்.

ஜேவிபியின் கடந்தகாலம் தமிழருக்கு விரோதமானது. அஃது ஊரறிந்த இரகசியமாகும். அதனைக்கூட “டிரங்குப்” பெட்டியில் பூட்டிவைத்தனர்.

அதனாலேயே, தேசிய மக்கள் சக்திக்கு வாய்ப்புக் கொடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில், ஐம்பது விழுக்காடு ஆசனங்களை தேசிய மக்கள் சக்திக்கு அளித்தனர்.

வட்டுக்கோட்டை, பருத்தித்துறை, காங்கேசன்துறை போன்ற பிரதேசங்கள் பாரம்பரியத் தமிழ்க்கட்சிகளின் கோட்டை எனலாம். அங்கேகூட, தேசிய மக்கள் சக்தி கணிசமான வாக்குகளைப் பெற்றிருக்கின்றது.

பிற கட்சிகளில் அறிமுகமான வேட்பாளர்கள் காணப்பட்டனர். ஆனால், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் பரவலாக அறியப்பட்டவர்கள் அல்லர். இருந்தாலும்கூட, அவர்களுக்கே வாக்களித்தனர். அஃது, தேசிய மக்கள் சக்திக்கு அளிக்கப்பட்ட வாக்குகளாகும்.

இவ்வாறாகத் தமிழ் மக்கள் வெளிப்படுத்திய நல்லெண்ண சமிக்ஞைக்கு, ஜேவிபியின் பிரதியுபகாரமே கவனிப்பைப் பெறுகின்றது.

அதிலே நல்லெண்ண “சிலமனைத்” தேடவேண்டியிருக்கின்றது.

வடக்கிலிருந்து தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு அமைச்சுப் பொறுப்புக் கொடுக்கப்படவில்லை. பிரதி அமைச்சுப் பொறுப்புக்கு கூடவா தகுதியற்றவர்கள் என்னும் கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை.

அப்படியாயின், வடக்கில் தமது பிரதிநிதிகளாகத் தேசிய மக்கள் சக்தியினால் அடையாளம் காட்டப்பட்டோர் “செல்லாக்காசா” என்ற கேள்வியும் எழுகின்றது.

அனுபவக்குறைவு ஒரு காரணமாகச் சொல்லப்படுகின்றது. அப்படியானால். தெற்கில் அனுபவக்குறைவானோருக்கு முக்கிய பொறுப்புக்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றனவே. அப்படியெனில், வடக்கும் தெற்கும் ஒரே தராசில் போடமுடியாதோ? என்ற நினைப்பும் தூண்டப்படுகின்றது.

இங்கு முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது, “அமைச்சுப்பதவி” வழங்கப்படாதமையல்ல. மாறாக, வடக்கு மக்கள் வெளிப்படுத்திய நல்லெண்ணத்துக்கு, தேசிய மக்கள் சக்தி வழங்கிய பதிலேயாகும்.

வாராது வந்த மாமணியாகத் “தேசமாகத் திரள” தமிழ்மக்களும் எத்தனிக்கின்றனர். அதனுடைய சமிக்ஞையாகவே, 2024 தேர்தல் வாக்களிப்பு மனநிலையைக் கருதவேண்டும். “சின்னிவிரலை” நீட்டி “நேசம்” போடக் கேட்கின்றனர். ஆனால், மறுபக்கத்தில் “சின்னிவிரலைக்” காண முடியவில்லையோ?

Loading

One Comment

  1. Thanks Sabes for starting healthy conversation to achieve a tangible solutions to people who have been suffering for years, because of these politicians who should get whatever possible to develop the areas while fighting for remaining rights, Jaffna Tamils are not trusted by sinhalese mass because of their caste racism and discriminative attitudes, if we purify our heart we will be trusted by everyone and the world

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *