நாவலர் எழுந்தார் நம்சைவம் பிளைத்தது
நற்றமிழ் நடையை நந்தமிழ் பெற்றது
கோவிலைக் களமாய் ஆக்கினார் நாவலர்
காவலர் ஆகியே கருத்துகள் கொடுத்தார்
சைவத்தை விட்டுச் சறுக்கிய மக்கள்
மெய்யாம் சமயத்தை விளங்கிடச் செய்தார்
கைகளைக் கூப்பி கடவுளை வணங்கிட
கருத்தாய் பிரசங்கம் ஆற்றியே நின்றார்
திண்ணையில் படித்தார் தெரிவன தெரிந்தார்
இலக்கியம் இலக்கணம் இங்கிதம் படித்தார்
ஆங்கிலம் படித்தார் வடமொழி படித்தார்
ஆனால் அகமோ சைவம் அமர்த்தினார்
வேதம் அறிவார் திருமுறை அறிவார்
நாதன் நமச்சிவாய நன்றாய் அறிவார்
போதனை செய்வதில் சாதனை காட்டினார்
நல்லூர் நாயகன் நாவலர் பெருமான்
எடுத்த கருமம் சிறப்பாய் அமைய
இல்லறம் நாடா இருந்தவர் நாவலர்
நல்லறம் சைவம் தமிழென எண்ணியே
வாழக்கைப் பாதையை வகுத்தவர் நாவலர்
ஆறு முகமென பெயரவர் பெற்றவர்
நாவின் வன்மையால் நாவலர் ஆகினார்
பாவம் கண்டிடின் கோபம் கொள்ளுவார்
பண்பு குறைந்தவர் பக்கம் சென்றிடார்
கல்வி என்பதை கண்ணாய் எண்ணினார்
கற்று உயர்ந்திட கருமம் ஆற்றினார்
கல்விக் கூடங்கள் எழுந்து நின்றிட
அல்லும் பகலுமே அனைத்தும் ஆற்றினார்
தமிழைச் சைவத்தை பாடம் ஆக்கினார்
அனைத்து அறிவியல் கற்கவும் தூண்டினார்
ஒழுக்கக் கல்வியை உயிராய் எண்ணினார்
தனித்துத் தலைவனாய் விளங்கினார் நாவலர்
கற்றிட நூல்களைத் தானே எழுதினார்
அச்சிட்டு நூல்கள் வெளிவர உதவினார்
அறிவுடை ஆசான்களை பள்ளியில் அமர்த்தி
தெளிவுடன் கற்றிட வழிக்காட்டி ஆயினார்
தத்துவம் புராணம் சமய நூல்கள்
மொத்தமாய் பாடல் ஆகியே இருந்தன
பாமரர் விளங்கா வகையினில் இருந்ததை
பக்குவப் படுத்தினார் நாவலர் பெருமான்
பாடல் அனைத்தையும் வசனம் ஆக்கினார்
படிப்பவர் யாவரும் விளங்கிடச் செய்தார்
விளங்கிய மக்கள் விழித்துமே எழுந்தார்
நாவலர் நோக்கம் நன்மையாய் விரிந்தது
சைவம் காத்தார் தமிழையும் காத்தார்
மெய்மையைப் பேசி மேலாய் உயர்ந்தார்
உய்யும் வழிக்கு இறையே என்றார்
நல்லூர் பிறந்த நாவலர் பெருமான் !
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்திரேலியா