அமரர் ஆர். சம்பந்தன் பயன்படுத்திய உத்தியோகபூர்வ இல்லம்: இன்னும் ஒப்படைக்கப்படவில்லை
மறைந்த முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவருமான அமரர் ஆர். சம்பந்தன் உயிரிழக்க முன் பயன்படுத்திய எதிர்க்கட்சி தலைவரின் பங்களாவை எதிர்வரும் மாதம் 17ஆம் திகதி அரசாங்கத்திடம் ஒப்படைக்கவுள்ளதாக அவரின் மகள் நீதி, அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபை, உள்ளூராட்சி மற்றும் தொழிலாளர் அமைச்சுக்கு கடிதமொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டில் எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்த போது அமரர் ஆர். சம்பந்தனுக்கு இந்த உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்பட்டது.
கடந்த 2018ஆம் ஆண்டில் எதிர்க்கட்சி தலைவர் பதவி இழக்கப்பட்ட பின்னரும் கூட அந்த உத்தியோகபூர்வ இல்லத்தில் வசிக்க அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
நல்லாட்சி அரசாங்கத்தின் போது அப்போதைய காணி அமைச்சராக செயற்பட்ட கயந்த கருணாதிலகவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியமையே அதற்குக் காரணம் ஆகும்.
ஆர். சம்பந்தன் கடந்த ஜூலை மாதம் 1ஆம் திகதி உயிரிழந்தார்.
உயிரிழந்து மூன்று மாதங்கள் கடந்த போதிலும் இன்னும் குறித்த உத்தியோகபூர்வ இல்லம் அவரின் குடும்ப உறவினர்களின் பொறுப்பிலேயே காணப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த உத்தியோகபூர்வ இல்லத்தை அமரர் சம்பந்தனுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கிய அமைச்சரவை பத்திரத்தை மாற்றவும் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
குறித்த உத்தியோகபூர்வ இல்லத்தின் நீர் கட்டணம், மின்சாரக் கட்டணம், தொலைபேசிக் கட்டணம் மற்றும் பராமரிப்பு செலவுகள் , பணியாளர்களுக்கான சம்பளம் போன்றவை அரசாங்கத்தின் மூலமே வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.