உலகம்

லெபனானில் இலக்கு வைக்கப்படும் ஊடவியலாளர்கள்; முன்னெச்சரிக்கையின்றி இஸ்ரேல் தீவிர தாக்குதல்

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் ஒரு வருடத்திற்கும் மேலாக நீடிக்கும் நிலையில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட அப்பாவி பொதுமக்களோ தினம் தினம் கொன்று குவிக்கப்படுகிறார்கள்.

மத்திய கிழக்கில் நிலவும் போர் தீவிரத்தால் காசா மயான பூமியாக மாறிவரும் அவல நிலையை வார்த்தைகளால் விபரிக்க முடியாது. தரைவழியாகவும் வான்வழியாகும் நாளுக்கு நாள் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில், லெபனான் மீதான போர் தொடர்பில் செய்தி சேகரிக்கும் ஊடகவியலாளர்கள் மூவர் உயிரிழந்துள்ளனர். லெபனானின் தெற்கு ஹஸ்பையா பகுதியில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை சர்வதேச செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளன.

ஊடகவியலாளர்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு முன்னதாக இஸ்ரேல் இராணுவம் எந்த எச்சரிக்கையும் விடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு காசாவின் ஜபாலியா அகதிகள் முகாமில் குடியிருப்புக் கட்டிடங்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலால் பெருமளவிலான உயிரிழப்புகள் பதிவாக கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த 48 மணித்தியாலங்களில் லெபனான் முழுவதும் இஸ்ரேலிய தாக்குதல்களால் 20 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு நாளுக்கு நாள் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இதேவேளை, வடக்கு காசாவின் பெய்ட் லாஹியாவில் உள்ள கமல் அத்வான் மருத்துவமனையை இஸ்ரேலிய இராணுவம் முற்றுகையிட்டதால்150 இற்கும் மேற்பட்ட நோயாளர்கள் மற்றும் பணியாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இஸ்ரேலிய இராணுவம் மருத்துவமனையின் மீது ஷெல் தாக்குதல் மேற்கொண்டதாகவும் ஒக்ஸிஜன் நிலையம் மீது குண்டு தாக்குதல் மேற்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் இறப்பு எண்ணிக்கை இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

வடக்கு காசாவில் தாக்குதலிலிருந்து தப்பியிருந்த சில மருத்துவ வசதிகளில் கமல் அத்வான் மருத்துவமனையும் ஒன்றாக காணப்பட்ட நிலையில் தற்போது அங்கும் பாரிய தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.பலஸ்தீனியர்கள் உணவு, நீர் மற்றும் அடிப்படை வசதிகளின் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

காசாவிலிருந்து சற்று விலகி லெபனான் மீது கவனம்

தற்போது லெபனான் மீது அதிக கவனம் செலுத்தி இஸ்ரேல் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் லெபனான் முனையில் போர் விரிவடைவது குறித்து உலகத் தலைவர்கள் கவலை வெயிட்டு வருகின்றனர். ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை இதில் தலையிடுவதற்கு பிரான்ஸ் மற்றும் எகிப்து அழைப்பு விடுத்துள்ளன.

இஸ்ரேலிய எல்லைப் பகுதிகளிலிருந்து ஹிஸ்புல்லாவை பின்தள்ளி அவர்களின் அச்சுறுத்தலை தணிப்பது மற்றும் அவர்களின் உட்கட்டமைப்புகளை அழிக்கும் நடவடிக்கையில் இஸ்ரேலியப் படை ஈடுபட்டிருப்பதாக இஸ்ரேலிய இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மறுபுறம் லெபனான் கிராமங்கள் மற்றும் நகரங்களை அழிக்கும் இலக்குடனான இஸ்ரேலின் திட்டத்தை ஐக்கிய நாடுகள் மற்றும் உலக வல்லரசுகள் தடுக்க வேண்டுமென லெபனான் பிரதமர் நஜீப் மிகாதி வலியுறுத்தியுள்ளார்.

போருக்கான தொடக்க புள்ளி

கடந்த வருடம் ஒக்டோபர் ஏழாம் திகதி திகதி ஹமாஸ் அமைப்பு தாக்குதல் மேற்கொண்டது.

இதன்போது எல்லை பகுதியில் இசை கச்சேரியில் பங்கேற்றிருந்த இஸ்ரேல் மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். அவர்களில் ஆயிரத்திற்கும் மேற்டபட்டோர் உயிரிழந்ததுடன் நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக சிறை பிடிக்கப்பட்டனர்.

பெண்களில் சிலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட செய்திகளும் வெளியாகின. சில பெண்கள் நிர்வாணமாக வாகனத்தில் இழுத்து செல்லப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றிருந்தன.

அன்று ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் செய்தார். இந்நிலையில் ஒரு வருடமாகியும் போர் தொடர்கின்றது.

இஸ்ரேல் – ஹமாஸ் மோதலால் 43 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளது.

எவ்வாறாயினும் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கமைய, இஸ்ரேல் பணய கைதிகள் சிலரை மீட்டுள்ளதுடன் தொடர்ந்தும் அந்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

பலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. அதேபோன்று, ஏமன் நாட்டில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களும் இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ஹிஸ்புல்லா மீது இஸ்ரேலும் தொடர்ச்சியாக தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.

போர்நிறுத்த பேச்சு வார்த்தை

கெய்ரோவில் எகிப்திய அதிகாரிகளுடன் கடந்த வியாழக்கிழமை (24.10.2024) காசா போர் நிறுத்தம் தொடர்பான யோசனைகள் மற்றும் முன்மொழிவுகளை கத்தாரில் தோஹாவை தளமாகக் கொண்ட தலைமைத்துவ குழு விவாதித்ததாக ஹமாஸின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு உறுதியளிக்குமானால் அதற்கு ஹமாஸ் தயாராக உள்ளதென்று ஹமாஸின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

காசா பகுதியிலிருந்து இஸ்ரேல் இராணுவம் வெளியேற வேண்டும் என்றும் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்திற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் ஹமாஸ் தெரிவித்துள்ளது. மேலும் காசாவுக்குள் மனிதாபிமான உதவிகளை அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் காசாவில் போர்நிறுத்தத்திற்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு சர்வதேச தலைவர்கள் கத்தாரின் தலைநகரில் ஒன்றுகூடுவார்கள் என கத்தாரும் அமெரிக்காவும் அறிவித்துள்ளது.

இதற்காக இஸ்ரேலிய தூதுக்குழு ஞாயிற்றுக்கிழமை (27.10.24)தோஹாவுக்குச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.