ஈ. கோலை தொற்றை அடுத்து மெக்டொனால்ட்டின் பங்குகள் பெருமளவு சரிந்தன!
பல அமெரிக்க மாநிலங்களில் துரித உணவு உணவகமான மெக்டொனால்ட்டுடன் (McDonald’s Quarter Pounder hamburgers) தொடர்புடைய ஈ. கோலை (Escherichia coli ) உணவு நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்
மேலும் பலர் நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்று அமரிக்க மத்திய சுகாதார அதிகாரிகள் செவ்வாயன்று (22) தெரிவித்தனர்.
இந்த நோய் தொற்று கடந்த செப்டம்பரில் தொடங்கியது – இதுவரை 10 மேற்கு மாநிலங்களில் குறைந்தது 49 நோய்த்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் (CDC) தெரிவித்துள்ளது.
கொலராடோ மற்றும் நெப்ராஸ்காவில் அதிக எண்ணிக்கையிலான தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அயோவா, கன்சாஸ், மிசோரி, மொன்டானா, ஓரிகான், உட்டா, விஸ்கான்சின் மற்றும் வயோமிங் ஆகிய மாநிலங்களிலும் கணிசமான நோய் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தொற்று பரவலுக்கு காரணமான பொருட்கள் என்ன என்பதைக் கண்டறிய துரித உணவு உணவகம் புலனாய்வாளர்களுடன் இணைந்து செயல்படுகிறது.
எவ்வாறெனினும், செவ்வாய்கிழமை வெளியான செய்தியை அடுத்து நியூயோர்க் பங்குச் சந்தையில் மெக்டொனால்டின் பங்குகள் சுமார் 9% சரிந்தன.
Escherichia coli
Escherichia coli (E. coli) என்பது மனிதர்கள் மற்றும் விலங்குகளின் குடலில் பொதுவாகக் காணப்படும் ஒரு வகை பாக்டீரியா ஆகும். ஈ. கோலையின் பெரும்பாலான திரிவுகள் பாதிப்பில்லாதவை மற்றும் குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகின்றன, சில தீவிரமான உணவுப்பழக்க நோயை ஏற்படுத்தும்.
இதனால் வயிற்றுப்போக்கு, சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள், செப்சிஸ், நிமோனியா மற்றும் பிற நோய்கள் மற்றும் நோய்த்தொற்றுகள் ஏற்படலாம்.
அசுத்தமான உணவு, தண்ணீர் அல்லது விலங்குகளுடன் தொடர்பு கொண்ட பிறகு இந்த நோயால் பாதிக்கப்படலாம். அதாவது வேகவைக்கப்படாத மாட்டிறைச்சி, பச்சை பால், அன்பேஸ்சுரைஸ்டு (unpasteurized) ஜூஸ் மற்றும் அசுத்தமான தண்ணீருடன் தொடர்பு கொண்ட அசுத்தமான உணவு அல்லது தண்ணீரை உட்கொள்வதன் மூலம் இந்த தொற்று அடிக்கடி ஏற்படுகிறது.