கலைவாணித் தாயே காத்தருள வேண்டும்!…. கவிதை…. ஜெயராமசர்மா
கலையாத கல்வியும் கசடற்ற கல்வியும்
நிலையாக நிற்க நீயருள வேண்டும்
வலையாக மூடம் வழிதொடரா வண்ணம்
கலைவாணித் தாயே காத்தருள வேண்டும்
வறுமையிற் கிடந்தாலும் வாடியே நின்றாலும்
பொறுமையுடன் கல்வியை கற்றிடுவேன் தாயே
சபையிடையே நானும் தலைநிமிர எனக்கு
நிலையான கல்வியைத் தந்தருள்வாய் தாயே
கல்வியைக் காசாக்கி நிற்கிறார் தாயே
கல்வியிலே அறமதனை அழிக்கிறார் தாயே
கல்வியது அறமாக இருக்கின்ற நிலையில்
அறமழித்து அநியாயம் செய்கின்றார் தாயே
பட்டத்தைக் காசாக்கி விற்கிறார் தாயே
பலகல்வி நிறுவனங்கள் பணமுழைக்க வந்திருக்கு
இட்டமுடன் கல்வியைக் காசாக்கி உழைக்கின்றார்
கொட்டமதை அடக்கிவிடு குறைவில்லா சரஸ்வதியே
ஆசான்கள் பலபேரும் அகவொழுக்கம் தவறுகிறார்
மாசகற்றும் மாபணியை மறந்தவரும் நிற்கின்றார்
காசினியில் கற்பிப்பார் கண்ணியத்தை உணருதற்கு
கைகூப்பிக் கேட்கின்றேன் கருணைபுரி கலைவாணி
நலந்தரும் கல்வி நாடெல்லாம் பெருகவேண்டும்
நாநில மாந்தர் நற்கல்வி பெறவேண்டும்
கசடறக் கற்று கடவுளை நினைந்து
அனைவரும் வாழ அருளிடு வாணியே
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண், அவுஸ்த்திரேலியா