இலங்கை

ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி- அநுரவிடம் நாட்டை ஒப்படைக்கின்றேன்: ரணில் விக்கிரமசிங்க

தான் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

தற்போது நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின் படி, புதிய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அவருக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி தனது விசேட ஊடக அறிக்கையின் ஊடாக குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில்,

“அநுர திஸாநாயக்க ஜனாதிபதி அவர்களே,

நான் அன்பு வைத்துள்ள இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையினை உங்களிடம் ஒப்படைக்கிறேன்.”

– முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

கடந்த 21 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின்படி, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும், அவருக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட ஊடக அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை எனும் அன்புக்குரிய குழந்தையினை சவால்மிகு தொங்குபாலத்தின் ஊடாக தான் இதுவரை பாதுகாப்பாகக் கொண்டுவந்துள்ளதாகவும், தற்போதைய ஜனாதிபதி அந்தக் குழந்தையை இன்னும் பாதுகாப்பாக தொங்குபாலத்தின் ஊடாகக் கொண்டுவர முடியும் என நம்புவதாகவும் ஜனாதிபதி தமது அறிவிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முழு உரையும் வருமாறு,

வணக்கம்

அன்புள்ள பிரஜைகளே,

செப்டம்பர் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இந்த நாட்டின் பெரும்பாலான மக்கள் தீர்மானமொன்றை வழங்கியுள்ளனர். நாம் அந்தத் தீர்மானத்திற்கு மதிப்பளிக்க வேண்டும். அந்தத் தீர்மானத்தின் பிரகாரம் இலங்கை அரசின் நல்லிருப்பினை உறுதிப்படுத்த வேண்டும்.

இற்றைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வங்குரோத்து அடைந்து, பொருளாதார நெருக்கடி காரணமாக கடுமையாக வீழ்ச்சிடைந்திருந்த, மிகவும் கடினமானதொரு சூழ்நிலையில் நான் இந்த நாட்டைப் பொறுப்பேற்றேன்.

அந்த சவாலுக்கு முகங்கொடுக்கின்ற அளவிலான ஆத்ம சக்தி பெரும்பாலானோருக்கு இல்லாதிருந்த சந்தர்ப்பத்திலேயே நான் அந்தப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டேன்.

வரலாறு எனக்கு வழங்கிய அந்தப் பொறுப்பினை நான் சிறப்பாக நிறைவேற்றினேன்.

இரண்டு வருட குறுகிய காலப்பகுதியினுள் என்னால் இந்த நாட்டினை வங்குரோத்து நிலையிலிருந்து மீட்டெடுக்க முடிந்தது.

எனது அரசியல் வாழ்வில் எனது நாட்டுக்காக செய்யக் கிடைத்த பெறுமதியான கடமைப் பொறுப்பு அதுவாகும் என நான் நம்புகிறேன்.

நான் நாட்டைப் பொறுப்பேற்கும் சந்தர்ப்பத்தில் நூற்றுக்கு எழுபது வீதமாகக் காணப்பட்ட பணவீக்கத்தினை பூச்சியம் தசம் ஐந்து (0.5%) வரை என்னால் குறைக்க முடிந்தது.

இருபது மில்லியன் அமெரிக்க டொலராகக் காணப்பட்ட இந்நாட்டின் வெளிநாட்டுக் கையிருப்பினை ஐந்து தசம் ஏழு பில்லியன் அமெரிக்க டொலராக என்னால் அதிகரிக்க முடிந்தது.

அத்துடன் டொலருடன் ஒப்பிடுகையில் முன்னூற்று எண்பதாகக் காணப்பட்ட ரூபாயின் பெறுமதியை முன்னூறு ரூபாய் வரை குறைத்து, பலமான நிலையான பெறுமதிக்கு என்னால் அதனைக் கொண்டு வர முடிந்தது.

அத்துடன் மறை ஏழு தசம் மூன்றாக (-7.3%) காணப்பட்ட பொருளாதார வளர்ச்சியை நேர் இரண்டு தசம் மூன்று (2.3%) வரை அதிகரிப்பதற்கு நான் நடவடிக்கை மேற்கொண்டேன். அதுபற்றியும், எனது அந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க அரசியல் கடமைப் பொறுப்பு பற்றியும் இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினர் உரிய மதிப்பீடொன்றை வழங்குவார்கள் என நம்புகிறேன்.

இந்த நாட்டின் ஆட்சியாளர் என்ற வகையில் வரலாற்றில் எனக்கு உரித்தான இடம் இன்று அல்லாமல் எதிர்காலத்திலேயே தீர்மானிக்கப்படும் என்பதை நான் அறிவேன்.

நான் சரியான பாதையில் சென்று மக்களின் துயரங்களை முடிந்தளவு நீக்கினேன். புதிய ஜனாதிபதி அவர்களும் அவருக்குக் கிடைத்த மக்கள் ஆணையின் பிரகாரம் சரியான பாதையினைத் தெரிவு செய்து மக்களின் துயரங்களை நீக்குவார் என நான் எதிர்பார்க்கிறேன்.

மிகவும் சவால் மிகுந்த தொங்குபாலத்தில் இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையினை நான் முடிந்தளவு அதிகபட்ச தூரம் பாதுகாப்பாகக் கொண்டு வந்தேன்.

தொங்குபாலத்தின் முடிவிடம் கண்களுக்கு மிகவும் எட்டும் தூரத்தில் இருக்கும் சந்தர்ப்பத்தில் அந்த பாசம் மிகுந்த குழந்தையினை அனுர குமார திஸாநாயக்க அவர்களிடம் ஒப்படைப்பதற்கு நாட்டு மக்கள் தீர்மானித்துள்ளனர்.

அனுர ஜனாதிபதி அவர்களே, நீங்களும் நானும் அன்பு வைத்துள்ள இலங்கை எனும் பாசம் மிகுந்த குழந்தையை நான் மிகவும் கருணையுடன் உங்களிடம் ஒப்படைக்கிறேன். இந்தக் குழந்தையை நான் கொண்டு வந்தததை விடவும் பாதுகாப்பாக தொங்குபாலத்தின் முடிவிடத்திற்கு கொண்டு செல்லும் ஆற்றல் உங்களுக்குக் கிடைக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.

அதிகாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், பதவிகளை வகித்தாலும் வகிக்காவிட்டாலும் இந்த நாட்டு மக்களுக்கு நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகளை ஏற்புடைய சந்தர்ப்பங்களில் எந்தவிதமான தயக்கமும் இன்றி நான் நிறைவேற்றுவேன்.

அத்துடன், எனது ஆட்சிக் காலத்தினுள் அதற்காக ஒத்துழைப்பு வழங்கிய, வழங்காத அனைவருக்கும், இந்த நாட்டின் சகல பிரஜைகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

– முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

Oruvan

Oruvan

Oruvan

Oruvan

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.