இந்தியா

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை – நாடளாவிய ரீதியில் மருத்துவ சேவைகள் நிறுத்தம்; போராட்டம் ஆரம்பம்

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து பல்வேறு தரப்பிலிருந்தும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இன்று சனிக்கிழமை நாடு முழுவதிலுமுள்ள மருத்துவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று இந்திய மருத்துவர்கள் சங்கம் (Indian Medical Association – IMA) நேற்று முன்தினம் வியாழக்கிழமை அறிவித்திருந்தது.

சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஒகஸ்ட் 17ஆம் திகதி காலை 6 மணி தொடக்கம் 18ஆம் திகதி காலை 6 மணி வரையில், நாடாளாவிய ரீதியில் மருத்துவ சேவைகள் நிறுத்தப்படும்.

அவசர சிகிச்சைப் பிரிவு, விபத்து சிகிச்சைப் பிரிவுகள் தவிர வேறு எந்த மருத்துவ சேவையும் செயல்படாது.

திட்டமிடப்பட்ட சில அறுவை சிகிச்சைகளும் நடத்தப்பட மாட்டாது. மருத்துவர்களுக்கான பாதுகாப்புக்கு அரச அதிகாரிகளே பொறுப்பு’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

கூறியதைப் போல் இன்று அதிகாலை 6 மணிக்கு மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப் போராட்டத்தின் காரணமாக புறநோயாளிகள் பிரிவு மூடப்பட்டுள்ளதோடு, எந்தவொரு விருப்பு அறுவை சிகிச்சைகளும் நடைபெறாது.

அதேவேளை அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் விபத்து சிகிச்சைப் பிரிவுகள் மாத்திரம் வழக்கம்போல் இயங்கி வருகிறது.

நாடளாவிய ரீதியிலான இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தின் மருத்துவ சேவைகள் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இப் போராட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரையில் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி மருத்துவப் பணியாளர்களுக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் ஏதேனும் நடந்தால், 6 மணி நேரத்துக்குள் நிறுவன ரீதியிலான முதல் தகவல் அறிக்கை (First Information Report – FIR) பதிவு செய்யப்பட வேண்டுமென மத்திய அரச மருத்துவமனைகள் மற்றும் நாடளாவிய ரீதியில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்க மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *