சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து தப்பிப்பதாக நினைத்து மரணத்தின் பிடியில் சிக்கிய இளையர்கள்

மலேசியாவில் கடும் வெயிலிலிருந்து தப்பிக்கும் நோக்குடன் ஆற்றில் குளிக்கச் சென்ற பலர் மூழ்கி மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

2024ஆம் ஆண்டில் இதுவரை 162 பேர் இவ்வாறு உயிரிழந்துவிட்டதாக மலேசிய அதிகாரிகள் கூறினர்.

அவர்களில் 19 பெண்களும் அடங்குவர். “மாண்டோரில் பலர் 40 வயதுக்கும் குறைவானவர்கள். இவ்வாண்டு இளையர்கள் பலர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். இது மிகுந்த மன வேதனைக்குரியது,” என்று மலேசியாவின் தீயணைப்பு, மீட்புப் பணித்துறை தலைமை இயக்குநர் நூர் ஹிஷாம் முகம்மது தெரிவித்தார்.

தங்கள் பிள்ளைகள் எங்கு செல்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதை பெற்றோர் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

குறிப்பாக, அவர்கள் நண்பர்களுடன் வெளியே செல்லும்போது அவர்கள் எத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்று பெற்றோருக்குத் தெரிய வேண்டும் என்றார் அவர்.

2024ஆம் ஆண்டில் இதுவரை ஒவ்வொரு மாதமும் காட்டுத் தீ, ஆற்றில் மூழ்கி மரணமடைதல் ஆகியவை தொடர்பாக சராசரியாக 10,000 அழைப்புகள் கிடைத்ததாகத் திரு நூர் ஹிஷாம் கூறினார்.

ஜூலை மாதத்தில் மட்டுமே 2,000 காட்டுத் தீ சம்பவங்கள் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டது.

2024ஆம் ஆண்டில் ஒவ்வொரு மாதமும் சராசரியாக 20 பேர் ஆற்றில் மூழ்கி மாண்டதாகவும் தெரியவந்துள்ளது.

பெரும்பாலான காட்டுத் தீ சிலாங்கூர், ஜோகூர், பேராக், சாபா ஆகிய மாநிலங்களில் நிகழ்வதாக திரு நூர் ஹிஷாம் கூறினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button