இலங்கை

இந்த அரசின் செலவுகள் நாம் வந்ததும் விசாரணை; முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன்

விசாரணைகளுக்காக அரசாங்கம் செலவிடும் மக்கள் பணத்தைக் கணக்கிடுவதற்காக தனியான ஆணைக்குழுவை அமைக்க வேண்டும் என்றும், தமது அரசாங்கம் வந்ததும் அதனை அமைப்போம் என்றும், அப்போது இந்த அரசாங்கம் செய்யும் தவறுகளுக்கும், வீண் விரயங்களுக்கும் நிச்சயமாகப் பதில் சொல்ல வேண்டி வரும் எனவும் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நிதி மோசடி தொடர்பான விசாரணைப் பிரிவுக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ சென்றிருந்த போது, அங்கு சென்றிருந்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

எங்களை விசாரணைகளுக்கு அழைப்பது சாதாரண விடயமே. மக்கள் திரளுவதைப் பார்த்தவுடனேயே பயந்துவிடுகிறார்கள். பயந்த பிறகு விசாரணைக்கு அழைப்பார்கள். இது வெளிப்படையாகத் தெரியும் ஒரு விடயம்.

மக்கள் ஆதரவு தங்களுக்குக் குறைந்து வருவதையும், தங்களது பிரபலத்தன்மை முற்றிலும் சரிந்து வருவதையும் அவர்கள் உணர்கிறார்கள். அப்படி சரிவடையும் போது, இவ்வாறு விசாரணைக்கு அழைக்கின்றனர். எங்களை அழைக்கும் போது நாங்கள் வருகிறோம். சட்டத்திற்கும் விசாரணைக்கும் பயப்படாமல் எதிர்கொள்கிறோம், ஏனெனில் நாங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. தவறுகள் செய்யாததால் பயமின்றி எதிர்கொள்ள முடிகிறது.

நாமல் ராஜபக்ஷ எம்.பி.க்கு ஆதரவாக திரளும் பெருந்திரளான மக்களைப் பார்த்து, அதைச் சகித்துக் கொள்ள முடியாமல் செய்யப்படும் தோல்வியடைந்த முயற்சிகளே இவை. இதுபோன்ற செயல்களைச் செய்யச் செய்ய, இந்த அரசாங்கம் மேலும் சரிவை நோக்கித்தான் செல்லும்.

இன்றும் நாமல் ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெற அவசர விசாரணைக்கு அழைத்துள்ளார்கள். இதெல்லாம் சாதாரணமான விடயமே. குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது, வாக்குமூலம் பெறுவது இதெல்லாம் புதிதல்ல. இந்த அரசாங்கம் வந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. எவ்வளவோ கோப்புகள் இருப்பதாக கூறினார்கள். ஆனால் இன்னும் விசாரணைகள் நடக்கின்றன.

இதுபோன்ற தேவையில்லாத விசாரணைகளுக்குச் செலவழிக்கப்படும் மக்கள் பணத்தைக் கணக்கிடவே தனியான ஆணைக்குழுவை அமைக்க வேண்டும். எதிர்காலத்தில் இந்த அரசாங்கம் செய்யும் இத்தகைய தவறுகளுக்கும், வீண் விரயங்களுக்கும் நிச்சயமாகப் பதில் சொல்ல வேண்டி வரும்.

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவோ, வைத்தியசாலைகள் அல்லது பாடசாலைகளை நிர்மாணிக்கவோ. முடியாதவர்கள், தங்கள் இயலாமையை மறைக்கவே சட்டத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button