பிரசன்ன விதானகேயின் Paradise திரைப்படம்!… முருகபூபதி
இலங்கை பொருளாதார நெருக்கடியின் பின்னணியில்,
இராமாயண ஐதீகத்தைப் பேசும் உலக சினிமா !!
பூலோகத்தின் சொர்க்கம் என வர்ணிக்கப்பட்ட இலங்கைக்கும் இராமாயணத்திற்கும் தொடர்பு இருப்பதை ஐதீகக் கதைகள் மூலம் அறிகின்றோம். இராமாயணத்தில் வரும் இராவணன் தமிழனாகவும் இராமன் ஆரியனாகவும் சித்திரிக்கப்படுகிறார்கள். இந்த இரண்டு பாத்திரங்களின் குணவியல்புளை வைத்து இன்றும் பட்டிமன்றங்கள் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
வால்மீகி இராமாயணம் – கம்பராமாயணம் ஆகியன குறித்தும் மாறுபட்ட கதைகள் தொடருகின்றன. இந்தியாவில் உத்தரபிரதேசம் அயோத்தியில்தான் இராமர் பிறந்தார் என்று சொல்லிக்கொண்டு 32 வருடங்களுக்கு முன்னர் ( 1992 – டிசம்பர் 06 இல் ) ஆயிரத்து ஐநூறு வருடங்கள் பழைமை வாய்ந்த பாபர் மசூதியை இந்துத்துவா கரசேவர்கள் இடித்துத் தரைமட்டமாக்கினர்.
இது இவ்விதமிருக்க, தாய்லாந்தில்தான் இராமர் பிறந்தார் என நம்புகின்றவர்கள், அங்கே அவருக்கு கோயில் அமைத்து வழிபடுகிறார்கள். இந்தோனேஷியாவின் ஆளுகைக்குள்ளிருக்கும் பாலித்தீவில்தான் அவர் பிறந்தார் என நம்புகின்றவர்கள், அங்கே அவருக்கு சிலைகள் எழுப்பியிருக்கிறார்கள். இவ்வாறு இராமாயணக் கதைகள் பலவுள்ளன.
ஆனால், அவன் மனைவி சீதையை கடத்தி வந்து இலங்கையில் அசோகவனத்தில் சிறை வைத்த இராவணன் இலங்கை மன்னன் என்பதனால் இவனுக்கு இலங்கேஸ்வரன் எனவும் பெயர் உண்டு. குறிப்பிட்ட அசோகவனம் அமைந்துள்ள இடத்தில் நாம் சீதையம்மன் கோயிலை பார்க்க முடியும். சிங்கள மக்களும் வழிபடும் இவ்விடத்திற்கு சீதா எலிய என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. அத்துடன் வெளிநாட்டவர்களை பெரிதும் கவரும் இயற்கை எழில் சூழ்ந்த பிரதேசமாகவும் இவ்விடம் காணப்படுகிறது.
இலங்கை இராவணன் இன்னமும் உறங்கிக்கொண்டிருக்கிறான், ஒரு நாள் எழுந்துவந்து இந்த பூலோக சொர்க்கத்தை காப்பாற்றுவான் என நம்பிக்கொண்டிருக்கும் மக்களும் இருக்கிறார்கள்.
பிரபல திரைப்பட இயக்குநர் பிரசன்ன விதானகேயின் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வௌியாகி சில சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்றிருக்கும் Paradise இன் திரைக்கதை , இந்தப்பதிவில் சொல்லப்பட்டிருக்கும் சீதையம்மன் ஆலயம் அமைந்துள்ள சீதா எலிய பிரதேசத்தை பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.
அம்மு என செல்லமாக அழைக்கப்படும் அமிர்தாவும், தொலைக்காட்சித் தொடர் இயக்குநரான கேசவ்வும் தங்கள் திருமணத்தின் ஐந்தாவது வருட நிறைவை ( Wedding Anniversary ) மகிழ்ச்சியோடு கழிப்பதற்கு தேர்வுசெய்து வரும் சுற்றுலாத்தலமாக குறிப்பிட்ட இயற்கை எழில் கொஞ்சும் மலையகம் சித்திரிக்கப்படுகிறது.
கேரளத்திலிருந்து குதூகலத்துடன் வரும் இந்த இளம் தம்பதியினரின் தாய்மொழி மலையாளம்.
இவர்கள் வரும்போது , எரிபொருள் – மின்சார தட்டுப்பாடு , விலைவாசியேற்றம் முதலான பாரிய பொருளாதார நெருக்கடியில் இலங்கை அவதியுற்று , அதிபர் கோத்தபாய ராஜபக்ஷவை எதிர்த்து “ கோத்தா கோ “ போராட்டம் எழுச்சிகொண்ட காலப்பகுதி தொடங்கிவிடுகிறது.
இல்லறவாழ்வில் ஐந்தாண்டு நிறைவுற்ற வசந்த காலத்தை சுற்றுலாவில் கொண்டாட வந்த இந்த இளம் தம்பதியர் தாம் எதிர்பார்த்தவாறு கொண்டாடினார்களா..? என்பதை கேள்வியாக முன்னிறுத்தி சமூக அரசியலோடு சொல்லும் திரைப்படம்தான் Paradise.
இயக்குநர் பிரசன்ன விதானகேயின் திரையுலக நண்பர் இயக்குநர் மணிரத்தினம் அவர்களின் மெட்ராஸ் டோக்கீஸ் இத்திரைப்படத்தை தயாரித்திருக்கிறது. ஒன்றரை மணிநேரம் ஓடும் இத்திரைப்படத்தை எனக்கு அண்மையில்தான் பார்க்க நேரம் கிடைத்தது.
ஏற்கனவே பிரசன்ன விதானகேயின் சில திரைப்படங்களை பார்த்து ரசித்திருக்கின்றேன். வியந்திருக்கின்றேன். இவரது புரஹந்த களுவர ( Pura Handa Kaluwar ) – Death On A Full Moon Day என்ற சிங்களத் திரைப்படம் பற்றி ஏற்கனவே விரிவான விமர்சனம் எழுதியிருக்கின்றேன். ( நூல்: சினிமா – பார்த்ததும் கேட்டதும் ) இந்த விமர்சனம் ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளது.
பிரசன்ன விதானகே எப்பொழுதும் சமூகப்பிரக்ஞைகொண்ட திரைப்படங்களையே உருவாக்கி வந்திருப்பவர்.
பாத்திரங்களின் உணர்வுகள் மூலம் தனது திரைக்கதைகளை நகர்த்துபவர். இந்த கதை சொல்லும் உத்தியை ருஷ்ய இலக்கிய மேதைகள் லியோ ரோல்ஸ்ரோய், தாஸ்தா வெஸ்கி ஆகியோரிடம் தான் கற்றுக்கொண்டதாக ஒரு நேர்காணலிலும் சொல்லியிருப்பவர்.
இவரது புதிய திரைப்படமான Paradise , இளம் தம்பதியரான கேசவ் ( ரோஷான் மத்தியூ ) அமிர்தா ( தர்ஷனா ) வாகன சாரதியும் வழிகாட்டியுமான அண்ரூ ( சியாம் பெர்னாண்டோ ) சார்ஜண்ட் பண்டார ( மகேந்திர பெரேரா ) ஶ்ரீ ( சுமித் இளங்கோ ) இக்பால் ( இஸாம் சம்சுதீன் ) முதலான சில பாத்திரங்களைச்சுற்றி அன்றைய ( 2022 ) இலங்கை நெருக்கடியின் பின்னணியில் நகருகின்றது.
பசுமையும் பனிப்புகாரும் போர்த்தியிருக்கும் இலங்கை மலையகத்தில் ஏகாந்தமாய் உலாவித்திரியும் மான்குட்டியும் தமது வருவாய்க்காக மலைக்காடுகளில் புளிக்கொய்யா பறித்து விற்கும் தோட்டத் தொழிலாளர் வர்க்கத்தின் குழந்தைகளும் மனைவி அமிர்தாவை பெரிதும் கவருகின்றனர்.
தனது புதிய தொலைக்காட்சித் தொடரை நெட்.ஃபிலிக்ஸ் நிறுவனம் விலைகொடுத்து வாங்கிவிட்டது என்ற செய்தி இந்த உல்லாசப்பயண வேளையில் வந்திருக்கும் பெருமிதத்தில் மனைவி அமிர்தாவை, கணவன் கேசவ் கட்டி அணைத்து கொஞ்சுகிறான்.
இவர்களை தனது வாகனத்தில் சுற்றுலாவுக்கு அழைத்துச்செல்லும் வழிகாட்டி அண்ரூவுக்கு இராமாயணம் குறித்து சொல்வதற்கு பல கதைகள் இருக்கின்றன. ஆனால், எழுத்தாளராகவும் வலைப்பதிவு ஊடகராகவும் இயங்கும் அமிர்தா இராமாயணத்தை ஒரு பெண்ணிய நோக்கில் பார்க்கும் இயல்பினைக் கொண்டவள். மலைப்பாங்கான ஒரு பிரதேசத்தில் கற்குகையை காண்பித்து, “ இங்கே உறங்கிக்கொண்டிருக்கும் இராவணன் ஒருநாள் எழுந்து வருவான் “ என்று வழிகாட்டி அண்ரூ சொல்லும்போது, “ தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து இந்த சொர்க்கத்தை ( Paradise ) காப்பாற்ற அந்த இராவணன் எழுந்து வரமாட்டானா..? “ எனக்கேட்கிறாள் அமிர்தா.
ஐந்து வருடகாலம் இல்லற வாழ்வில் ஈடுபட்டாலும் கேசவ் – அமிர்தா தம்பதியர் பல
விடயங்களில் ஒத்த கருத்தோட்டம் கொண்டவர்கள் இல்லை என்பதையும் பிரசன்ன விதானகே மிகவும் நுட்பமாக காண்பிக்கின்றார். இம்மூவருக்குமிடையே தொடரும் முரண்பாடுகள் மென்மையான உணர்வுகளின் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது.
ஒரு நடு இரவில் அந்தத் தம்பதியரின் தாம்பத்திய உறவையடுத்து நடக்கும் சம்பவம் கதையை முற்றாகவே திசை திருப்பிவிடுகிறது.
அவர்கள் உறங்கும் அறைக்குள் திடுதிப்பென பிரவேசிக்கும் திருடர்கள், ஆயுத முனையில் அவர்களிடமிருந்த கைத்தொலைபேசிகள், மடிக்கணினி, ஐபேர்ட் முதலானவற்றை பறித்துக்கொண்டு மாயமாகிவிடுகின்றனர். பொலிஸார் அவர்களைத் தேடிப் பிடித்து தனது உடமைகளை மீட்டுத்தராது விட்டால், தான் இலங்கையிலிருக்கும் இந்தியத் தூதரகத்தில் முறையிடப்போவதாக கேசவ், பொலிஸ் சார்ஜண்ட் பண்டாரவை அச்சுறுத்துகிறான்.
பொருளாதார நெருக்கடியில் சிக்கி நாடே திக்குமுக்காடும்போது, வெளிநாட்டு உல்லாசப்பயணிகளின் ஊடாக சீர் செய்யப் பார்க்கலாம் என்று அரசு முனைந்திருக்கும் வேளையில் , அந்த பொலிஸ் சார்ஜண்ட் மலையக தமிழ் தொழிலாளர் வர்க்கத்தைச்சேர்ந்த சிலரை பிடித்து வந்து அடித்து துன்புறுத்துகிறார்.
அதில் ஒருவர் கடும் தாக்குதலினால் படுகாயமடைந்து மூச்சுத்திணறலுக்குள்ளாகிறார்.
அவரை பொலிஸ் வாகனத்தில் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லும்போது , அந்த வாகனம் டீஸல் பற்றாக்குறையினால் பாதி வழியில் நின்றுவிடுகிறது. அந்த பொலிஸ் வாகனத்தை பின்தொடரும் உல்லாசப்பயணிகளின் வாகனத்தில் அந்தத் தமிழ்க் கைதியும் பொலிஸாரும் செல்லவேண்டிய சூழ்நிலை வருகிறது. இந்த நகை முரணுக்குள், அவர்கள் பிரவேசிக்கும் ஆஸ்பத்திரியில் ஒரு இளம்தாய் தனது குழந்தையை சரியான மருத்துவப்பராமரிப்பின்றி இழந்து, கதறிக்கொண்டு வெளியே ஓடிவருகின்ற உருக்கமான காட்சி.
மூச்சுத்திணறலுடன் அனுமதிக்கப்படும் அந்தத் தமிழ்க்கைதி ஆஸ்பத்திரியில் மின் வெட்டினால், ஒட்சிசன் ஏற்றுவதில் நேர்ந்த சிக்கலினால் இறந்துவிடுகிறான்.
பொலிசாரின் அராஜகத்தினால் கொல்லப்பட்ட தனது கணவனுக்கு நீதி கிடைக்காமல் அவனது சடலத்தை பொறுப்பேற்க முடியாது என ஊர் மக்களை திரட்டிக்கொண்டு மனைவி போராடுகிறாள்.
மலைக்காடுகளில் ஏகாந்தமாக வலம் வரும் மான்களை வேட்டையாட வேண்டாம் என்று காரூண்யம் பேசும் இந்திய சுற்றுலாப்பயணி அமிர்தா, அந்தக்கைதியின் அகால மரணத்தையடுத்து, சார்ஜண்ட் பண்டாரவிடம், “ மனித உயிர்களுக்கு பெறுமதியே இல்லையா..? “ எனக் கேட்கிறாள். அதற்கு அந்த சார்ஜண்ட், “ இருக்கிறது மெடம் . தேர்தல் காலத்தில் மனிதர்கள் ஒவ்வொருவரும் வழங்கும் ஒரு வாக்கிற்கு அந்தப்பெறுமதி இருக்கிறது . “ என்கிறார்.
தமிழ்க்கைதியின் மரணத்துடன் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையே மோதல் வெடிக்கிறது. பொலிஸாரின் துப்பாக்கிகள் வேட்டுக்களை தீர்க்கின்றன.
சார்ஜண்ட் கோடரி வெட்டுக்கு இலக்காகிறார்.
அம்ரிதாவின் கணவன் கேசவ், பொலிஸ் அரஜாகத்திற்கு எதிராக போராடும் தமிழர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்கிறான். அதனைக்கண்டு வெகுண்டு எழும், அம்ரிதா மற்றும் ஒரு துப்பாக்கியால் கணவனை சுட்டுத்தள்ளுகிறாள். அனைத்து உயிர்கள் மீதும் நேசம் கொண்டிருக்கும் அம்ரிதாவின் கரத்தினாலே அவளது காதல் கணவன் கேசவ் மாண்டு போகின்றான்.
ஐந்தாண்டு இல்லற வாழ்வின் நிறைவை கொண்டாடுவதற்காக இனிய கனவுகளுடன் அவள் வருகை தந்த பூலோகத்தின் Paradise என வர்ணிக்கப்பட்ட இலங்கையில் , இராமாயணத்தில் வரும் சீதை, சிறை வைக்கப்பட்ட அசோகவனம் இருக்குமிடத்தில் அமைந்துள்ள சீதையம்மன் ஆலயத்தைக் கடந்து, அவள் பயணிக்கும் வாகனம் கடந்து செல்கிறது.
அத்துடன் திரைப்படம் முடிவடைகிறது.
காட்சி மொழியின் ஊடாக இலங்கையின் அண்மைக்கால அரசியல் செய்தியையும் சொல்லி, இதில் மூவின மக்களையும் நடிக்க வைத்து , இலங்கை – இந்திய திரைக்கலைஞர்களையும் இதில் இணத்து சிறந்த உலக சினிமாவை வழங்கிய இயக்குநர் பிரசன்ன விதானேகே அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.
letchumananm@gmail.com – முருகபூபதி
Very well illustrated the individual characters and their values of a loved couple and acts differently even when they see the injustice events in their live which leads to a disaster in their life.