பிரித்தானியாவில் சிறுமிகள் படுகொலை; 17 வயது சிறுவன் நீதிமன்றில்: ஆபத்தான நிலையில் எழுவர்
பிரித்தானியாவில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலின் போது சிறுமிகள் மூவர் உயிரிழந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள சிறுவனை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சவுத்போர்ட்டில் உள்ள ஹார்ட் தெருவில் கடந்த திங்கட்கிழமை ஆறு முதல் 10 வயது வரையிலான ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு கோடை விடுமுறை நடன வகுப்பு நடத்தப்பட்டது.
இதன்போது ஆயுதமேந்திய நபரொருவர் நடனவகுப்பிற்குள் உழ்நுழைந்து தாக்குதல் மேற்கொண்டார்.
இந்த கத்திக்குத்து தாக்குதலின் போது 06,07 மற்றும் 09 வயதுடைய சிறுமிகள் மூவர் உயிரிழந்தனர்.
தாக்குதலுக்குள்ளான மேலும் 08 சிறுவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இவர்களில் ஐவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதென பிரித்தானிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுவர்களைத் தவிர்த்து தாக்குதலில் காயமடைந்த மேலும் இருவரினது நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் தற்போது பேங்க்ஸைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவனொருவன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த சிறுவன் மீது மேலும் 10 கொலை முயற்சி குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.