இலக்கியச்சோலை

ஏழு தசாப்த காலமாக உடன் பயணித்த முருகானந்தனும் விடைபெற்றார்!… முருகபூபதி

தொலைவிலிருந்து கண்ணீர் அஞ்சலி!!....

முருகபூபதி

தொலைவிலிருந்து கண்ணீர் அஞ்சலி!!….

பாடசாலைப் பருவம் பசுமை நிறைந்த நினைவுகளை உள்ளடக்கியிருக்கும்.
எனது வாழ்வில், 1954 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டுவரையில் மூன்று பாடசாலைகளில் எனது பெரும்பாலான பொழுதுகள் கழிந்திருக்கின்றன.

இக்காலப்பகுதியில் தினமும் என்னோடு பாடசாலைக்கு வந்தவரும், அந்தப்பருவத்தின் அனைத்துக் குழப்படிகளிலும் இணைந்திருந்தவருமான எனது தாய்மாமனார் மகன் முருகானந்தன், தமிழ்நாடு கோயம்புத்தூரில் இம்மாதம் 28 ஆம் திகதி அதிகாலை மறைந்துவிட்டார் என்ற துயரமான செய்தியுடன் எனக்கு பொழுது விடிந்தது.
மறுமுனையில் மச்சான் முருகானந்தனின் மூத்த புதல்வி நர்மதா அழுது கதறியவாறு இத்துயரத்தை என்னிடம் தொலைபேசியில் பகிர்ந்துகொண்டபோது, அவருக்கு ஆறுதல் சொல்லித்தேற்றுவதற்கும் வழிதெரியாமல் கலங்கிப்போனேன்.
இந்த ஜூலை மாதம் ஏன் இவ்வாறு தொடர்ந்தும் துயரச்செய்திகளுடன் கடக்கிறது…? புரியவில்லை. !

அடுத்தடுத்து எனது நெஞ்சத்துக்கு நெருக்கமானவர்கள் விடைபெற்றுக்கொண்டிருக்கிறார்கள்.
அதனால் மனதில் வெறுமை குடிகொள்கிறது. அந்த வெறுமையை நிரப்புவதற்கு, மறைந்துகொண்டிருப்பவர்களின் நினைவுகளைத்தான் ஆதாரமாகக் கொள்ளவேண்டுமா..?

நானும் மச்சான் முருகானந்தனும் 1951 ஆம் ஆண்டுதான் நீர்கொழும்பில் பிறந்தோம்.
அவர் ஏப்ரில் மாதமும் நான் ஜூலை மாதமும் பிறந்தோம்.
இருவரது வீடுகளும் ஒரே வீதியில்தான். அந்த கடற்கரை வீதியில்தான் ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்திற்கு முன்பாக விருட்சமாக எழுந்து நின்ற அரச மர நிழலில்தான் அந்தப்பாடசாலை 1954 இல் உதயமாகியது.

1963 ஆம் ஆண்டு முதல் தவணை வரையில் அங்கேயே ஆரம்பக்கல்வியை கற்றபின்னர், எதிர்பாராதவகையில் யாழ்ப்பாணம், அரியாலையில்  நாவலர் வீதியில் அமைந்த  அன்றைய ஸ்ரான்லிக்கல்லூரியில் நாம் இருவரும் பிரவேசிக்க நேர்ந்தது.
அதற்குக்காரணம் அக்காலப்பகுதியில் நடந்த புலமைப்பரிசில் பரீட்சையில் எங்கள் ஊரில் நாம் இருவர் மாத்திரமே சித்திபெற்றிருந்த தமிழ் மாணவர்கள். அதற்கு முன்னர் கொழும்பு றோயல் கல்லூரியில் அனுமதி பெறுவதற்கான பிரவேசப் பரீட்சைக்கும் நாம் இருவரும் சென்றிருந்தோம். எங்கள் வீட்டில் ஒரு பகுதியில் குடியிருந்த இராமலிங்கம் மாஸ்டர்தான் எம்மை அந்தப்பரீட்சைக்கு அழைத்துச்சென்றார்.
அன்றைய தினம் காலையில்தான் முருகானந்தனுக்கு ஒரு தங்கை பிறந்தாள். அவள் பெயர் இந்திராணி. நாம் றோயல் கல்லூரிக்கு தெரிவாகவில்லை. எனினும் புலமைப்பரிசில் பரீட்சையில் தேர்வாகி யாழ்ப்பாணம் சென்றோம்.
எனது அப்பா அக்காலப்பகுதியில் ஒரு தனியார் நிறுவனத்தில் வெளியூர் விநியோகஸ்தராக (Sales Representative) பணியாற்றியமையால் என்னையும் முருகானந்தனையும் , இவரது அண்ணன் ஶ்ரீஸ்கந்தராஜாவையும் ( இவர் அச்சமயம் யாழ். இந்துக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். ) தமது கம்பனி வாகனத்தில் அழைத்துச்சென்றார்.
முருகானந்தன் உறவு முறையில் எனக்கு மச்சான் என்பதற்கு அப்பால், நாம் இருவரும் இணைபிரியாத தோழர்கள்.  நாம் சிறுவயதில் செய்த குறும்புத்தனங்கள் அநேகம்.
வீட்டிலே அடிக்கடி,  “ உன்னாலே அவன் கெட்டான், அவனாலே நீ கெட்டாய்  “ என்று நற்சான்றிதழ் தருவார்கள்.

நானும் முருகானந்தனும் அடிக்கும் லூட்டிகளை பொறுக்கமுடியாத எமது பெற்றோர்,  “ இவனுகளையும் போர்டிங்கில் விட்டுத்தான்  படிக்கவைக்கவேண்டும். அப்போதுதான் அடங்குவான்கள்   “ என்று தமக்குள் தீர்மானித்துக்கொண்டவர்கள்.

அவர்களது எண்ணத்திற்கு ஏற்ப எமக்கு முதலில் ஸ்ரான்லிக்கல்லூரி என்ற பெயரில் விளங்கிய கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயத்தில் அனுமதியும் அங்கிருந்த ஆண்கள் விடுதியில் தங்கியிருந்து படிப்பதற்கும் வாய்ப்புக்கிடைத்தது.  எமக்குரிய அன்றைய காலத்து அரிசிக்கூப்பன் புத்தகத்தையும் எடுத்துச்சென்றோம்.

புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வரும்போது 1963 ஆம் ஆண்டு இரண்டாம் தவணை  ஆரம்பமாகிவிட்டது.  அப்போது நாமிருவரும் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தோம்.
யாழ்ப்பாணம் செல்லத் தயாரானோம்.

எமது  முன்னாள் தலைமை ஆசிரியர் பண்டிதர் க. மயில்வாகனம் அதற்கு ஒரு சில  மாதங்களுக்கு முன்னர்தான் மாற்றலாகி தமது சொந்தவூர் சித்தங்கேணிக்கு சென்றுவிட்டிருந்தார். அவர்தான் எம்மை குறிப்பிட்ட புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயார் செய்தவர். எமது பெற்றோர்களிடமிருந்து புலமைப்பரிசில் முடிவுகள் பற்றி முதலில் தகவல் சென்றதும் பண்டிதருக்குத்தான்.  அவரும்  “ அழைத்து வாருங்கள். நான் பார்த்துக்கொள்வேன்  “ என்று பதில் அனுப்பிவிட்டார்.

எமது பாடசாலையில் அப்போதிருந்த தலைமை ஆசிரியர் கந்தசாமி மற்றும் ஆசிரியர்களின் கால்களை பணிந்து வணங்கி விடைபெற்றோம்.  அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு வழங்கினோம்.  எமது வகுப்பு மாணவர்கள் எம்மிருவருக்காகவும் பணம் சேகரித்து ஒரு  சுடுநீர் குடுவை              ( Thermos Flask  ) வழங்கினார்கள். வெளியூர் செல்கிறோம். அதுவும் வாகனத்தில் செல்கிறோம் என்பதில் நான் மிகவும் புளகாங்கிதத்துடன் இருந்தோம்.

சிலாபம், புத்தளம், அநுராதபுரம் கடந்து  ஏ 9  பாதையில் பயணித்து, வவுனியாவைக் கடக்கும்போது பனைமரங்களை பார்த்து வியந்தோம். அதற்கு முன்னர் நாம் பனைமரங்களை பார்த்திருக்கவில்லை. அநுராதபுரத்திற்கு அப்பால் சென்றதுமில்லை.
எமது வாழ்வில்  அதுவரையில் பனை மரங்களை பாடப்புத்தகங்களில்தான் பார்த்திருக்கின்றோம் .   எங்கள் ஊர் சந்தைக்கு எப்போதாவது வரும் பனம் பனாட்டு வாங்கி நானும் முருகானந்தனும் சுவைத்திருக்கிறோம்.   இனிமேல் யாழ்ப்பாணத்தில் பனை நுங்கு, பனாட்டு, புழுக்கொடியல் எல்லாம் அடிக்கடி சாப்பிடலாம் என்று எமது உள்ளம் பூரிப்படைந்திருந்தது.

எமது வகுப்பில் பயின்ற ஆண்கள் விடுதியில் எம்மோடு இருந்த உரும்பராயைச்சேர்ந்த மாணவர் சரச்சந்திரன் ( இவர் பின்னாளில் பொலிஸ் இலாகாவில் பணியாற்றினார் ) ஒரு விடுமுறை நாளில் என்னையும் முருகானந்தனையும் யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச்சென்று ராஜா தியேட்டரில் The Longest Day ,  வெலிங்டன் தியேட்டரில் நானும் ஒரு பெண் முதலான திரைப்படங்களை காண்பித்தார்.

ஒரே நாளில் முற்பகல், மதியம் இரண்டு படங்கள் பார்த்தோம். அப்போது வெலிங்டன் தியேட்டர் தகரக்கொட்டகையாக இருந்தது. வெள்ளிக்கிழமை  மாலையில் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்குச்செல்வோம். அங்கே கச்சான் கடலை வாங்கி வழியில் கொரித்துக்கொண்டே நடந்து விடுதிக்கு வந்து சேருவோம். யாழ்ப்பாணம் பாடசாலைகளுக்கிடையே விளையாட்டுப்போட்டி ஒரு தடவை யாழ். பரமேஸ்வரா கல்லூரியில் நடந்தது.  அப்போது ஈட்டி எறிதல் போட்டியில் ஒரு மாணவன் எறிந்த ஈட்டி மத்தியஸ்தராக கடமையாற்றிய ஒரு ஆசிரியரின் வயிற்றை பதம் பார்த்து, அவர் இறந்தார். பாடசாலைகள் அவரது மறைவை முன்னிட்டு துக்க தினம் அனுட்டித்தன.

ஒரு தடவை கொக்குவில் இந்துக்கல்லூரியுடன் எமது வித்தியாலயம் கிரிக்கட் விளையாட்டில் மோதியது. கொக்குவில் இந்துக்கல்லூரியில் மெட்ச் நடந்தது. அந்த மைதானம் சுற்றளவில் சிறியது. எமது வித்தியாலய மாணவன் ஒருவர்  அடித்த சிக்ஸரை இன்றளவும் மறக்கமுடியாது.  அவர் அடித்த பந்து மைதானத்திற்கு மேலாகச்சென்று அடுத்த காணியிலிருந்த ஒரு வீட்டின் கூரையை பிய்த்துக்கொண்டு  உள்ளே சென்று சமையலறையில் வீழ்ந்து அடுப்பில் வெந்துகொண்டிருந்த இறைச்சிக்கறியை பதம் பார்த்தது.
ஆண்கள் விடுதியின் பொறுப்பாசிரியர்களாக மயில்வாகனம், நடராஜா ஆகியோர் எமது காலத்தில் இருந்தனர்.  மயில்வாகனம் அவர்களின் திருமணம் அக்காலத்தில்தான் ஒரு இரவு வேளையில் புங்கன்குளத்திலிருந்த மணப்பெண்ணின் வீட்டு முற்றத்தில் பந்தல் அமைத்து நடந்தது அதற்கு விடுதி மாணவர்கள் அனைவரும்  சென்றிருந்தோம்.

அவரைத்திருமணம் செய்தவர் சங்கீத ஆசிரியை . பின்னர் எமது ஆண்கள் விடுதியில் எமது படுக்கைகளையெல்லாம் ஒரு மூலையில் வைத்துவிட்டு, அந்த மண்டபத்தை அலங்கரித்து மணமக்களை பூரண கும்பம் வைத்து வரவேற்று உபசரித்தோம். அதில் அந்த சங்கீத ரீச்சரை பாடச்சொன்னோம். இனிமையான குரலில் பாடினார். பெண்கள் விடுதி மாணவிகளும் வருடாந்த ஒன்றுகூடலை இராப்போசன விருந்துடன் நடத்தும்போது எம்மையும் அழைப்பார்கள். எமது மேல்வகுப்பு ஆண் மாணவர்களுக்கு அவ்வேளையில் கிளுகிளுப்பு தோன்றும்.  அச்சந்தர்ப்பத்திலாவது மாணவிகளுடன் பேசுவதற்கு சந்தர்ப்பம் கிட்டாதா..?  என்ற ஏக்கமும் வரும்.

எமக்கு போர்டிங் மாஸ்டராக இருந்த நடராஜா மாஸ்டர்,  பிற்காலத்தில் இலங்கை பனம்பொருள் அபிவிருத்திச்சபையின் தலைவராகவும் பதவி வகித்தார்.
இவர்  காலப்போக்கில் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து தற்போது சிட்னியில் வசிக்கிறார். இங்கு அவர் தமிழ் பிரமுகராக புகழ்பெற்று விளங்குகிறார். எனது நூல்களின் வெளியீட்டு அரங்கிலும் மற்றும் கலை இலக்கிய நிகழ்வுகளிலும் கலந்துகொள்கிறார்.
கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தில் நானும் முருகானந்தனும் வாழ்ந்த வாழ்க்கையை மறக்கவே முடியாது. அங்கு எம்முடன் கற்றவர்களையும் மேல் வகுப்புகளில் கற்றவர்களையும் என்றாவது ஒரு நாள் சந்திக்க நேர்ந்தால், பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ என்ற வார்த்தைக்கு உயிர் கிடைக்கும்.

எங்கள் வித்தியாலய பிரதான மண்டபத்தில் நடந்த கலைமகள் விழாவில் வித்துவான் வேந்தனார், பண்டிதர் சோ. இளமுருகனார் ஆகியோர் உரையாற்றியுள்ளனர்.
ஒரு தடவை எழுத்தாளர் டொமினிக் ஜீவாவையும் எமது வித்தியாலய ஆண்கள் விடுதியின் சார்பாக அழைத்து அந்த மண்டபத்தில் பேசவைத்தார்கள். அவரது அந்தப்பேச்சை முதல் முறை நான் கேட்டபோது எனக்கும் முருகானந்தனுக்கும் பன்னிரண்டு வயது.
பெற்றவர்கள், சகோதரர்களை விட்டு தொலைதூரத்திற்கு படிக்க வந்த தனிமைத்துயரமும் ஊர்ப்பாசமும், மீண்டும் என்னையும் முருகானந்தனையும் ஊருக்கு அழைத்தது.
நாமிருவரும் விடைபெறும்போது திரு. பத்மநாதன் அதிபராக பணியாற்றினார். ஊர் திரும்பிய  பின்னர் அங்கே தரமுயர்த்தப்பட்டிருந்த அல் – கிலால் மகா வித்தியாலயத்தில் கல்வியை தொடர்ந்து நிறைவு செய்தோம்.

இங்கு கற்ற காலத்திலும் எமது குறும்புத்தனங்களும் குழப்படிகளும் குறைவின்றி தொடர்ந்தன.
1970 இற்குப்பின்னர் முருகானந்தன் இலங்கை விமானப்படையில் இணைந்து பயிற்சி பெறுவதற்காக தியத்தலாவைக்கும் , திருகோணமலைக்கும் சென்றார்.
நான் பத்திரிகையாளனாகினேன். “ பூபதி, உங்கள் கையில் பேனை, எனது கையில் துப்பாக்கி “ என்று வேடிக்கையாக முருகானந்தன் சொன்னார்.

சிறிதுகாலத்தில் மத்திய கிழக்கிற்கு சென்றார். திருமணமாகி குடும்பத்துடன் தமிழ் நாடு கோயம்புத்தூரில் நிரந்தரமாகியிருந்தார். முருகானந்தன் – மாலினி தம்பதியரின் மூத்த புதல்வி நர்மதா தனது கணவர் ரவி மற்றும் குழந்தைகளுடன் அவுஸ்திரேலியா சிட்னிக்கும் மகன் ரிஷி, தனது குடும்பத்துடன் அமெரிக்காவிற்கும் புலம்பெயர்ந்தனர். முருகானந்தன் – மாலினி தம்பதியர் சில வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவுக்கும் வந்தனர். மீண்டும் இந்த வருடம் வரவிருந்தனர். முருகானந்தன் நான் பிறந்த காலப்பகுதியில் பிறந்து, என்னோடு படித்து, இளம்பராயம் முழுவதும் ஒன்றாக பயணித்து, குடும்பஸ்தர்களானதன் பின்னர் நாடுவிட்டு நாடு சென்று பிரிந்து வாழ நேரிட்டாலும், அடிக்கடி தொடர்பிலிருந்தவர்.
எனது நினைவுக்கோலங்கள் கதைத் தொகுப்பிலும் இவர் ஒரு சிறுகதையில் இடம்பெறுகிறார். மற்றும் ஒரு புனைவு சாரா பத்தி எழுத்திலும் இவரும் இவரது பேரன் வீவானும் இடம்பெறுகின்றனர்.

நான் எழுதும் பதிவுகளை படித்துவிட்டு, உடனுக்குடன் தனது கருத்துக்களையும் எழுதிவந்தவர்.
இறுதிக்காலத்தில் ஆன்மீக ஈடுபாட்டுடன் தல யாத்திரைகளும் சென்றார். பெங்களுரில் புட்டபர்த்திக்கு அடிக்கடி சென்று அங்கே தொண்டராகவும் செயல்பட்டார். தியானங்களில் ஈடுபட்டார்.

ஜனனமும் பூமியில் புதியது இல்லை,
மரணத்தைப் போலொரு பழையதும் இல்லை,
இரண்டும் இல்லாவிடில் இயற்கையும் இல்லை,
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை!

என்ற வாக்கினை ஏற்று என்னை நானே தேற்றிக்கொண்டு தொலை தூரத்திலிருந்து, எனது தோழனும் மச்சானுமான முருகானந்தனுக்கு எனது கண்ணீர் அஞ்சலியை சமர்ப்பிக்கின்றேன்.

—0—

letchumananm@gmail.com, முருகபூபதி

Loading

One Comment

  1. Great Expression! Great Service to Tamil World with Great Courage Enthusiasm Dedication Happiness Hardwork Devotion Vision etc! Great Human! Great Hindu! Great Tamil! Murugananthan too! God bless his soul & family!
    You are the Best storyteller in the recent times! Keep in touch my friend! Write Ur biography in a blogg or youtube! Youtube gives more reality & Natural Expression too!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.