விடுதலைக்கான புதிய பாதையில் வானில் தெரியும் நம்பிக்கை நட்சத்திரம்!… -கலாநிதி இ.நா.ஸ்ரீஞானேஸ்வரன்
தமது சுயநிர்ணய உரிமைக்காக, சுதந்திரத்திற்காகப் போராடும் ஐரோப்பிய இனங்களின் போராட்டங்களை உள்ளடக்கி “தேசிய சுயநிர்ணயமும் ஐரோப்பிய சிறுபான்மை இனங்களும்” என்ற ஐங்கரன் விக்கினேஸ்வராவின் புத்தகமானது வெளியாகின்றது.
ஜீவநதியின் 356 ஆவது வெளியீடாக ஐங்கரன் விக்கினேஸ்வரா எழுதிய ‘தேசிய சுய நிர்ணயமும் ஐரோப்பிய சிறுபான்மை இனங்களும்’ நூல் தாயகத்தில் வெளியாகி உள்ளது.
தமது ஆயுதப் போராட்டத்தின் ஊடாக தமது சுதந்திரத்தைப் பெற்றுவிட முடியும் என்ற அசையாத ஈழத்தமிழர்களின் நம்பிக்கையைப் பன்னாட்டு அரசியல், இராணுவ தந்திரோபாய உதவிகளுடன் ஸ்ரீலங்கா அரசு இனப்படுகொலையை நிகழ்த்தி அழித்த பதினைந்தாவது ஆண்டைக் கடக்கும் இக்காலத்தில் இப் புத்தகம் வெளியாவது ஈழத்தமிழர்களுக்கு மிக முக்கியமானது.
இந்தப் பூமிப்பந்தில் ஈழத்தமிழர்களாகிய தாங்கள் மட்டுமே சுதந்திரத்திற்காகப் போராடுபவர்கள் அல்ல, உலகில் மிக வளர்ச்சியடைந்து, மனித உரிமைகளில் முன்னிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ள நாடுகளிலும் தமது சுயநிர்ணய உரிமைக்காக மக்கள் தொடர்ந்து போராடுகின்றார்கள் என்ற செய்தியைச் சொல்லியிருக்கும் இந்தப் புத்தகம் தமிழர்களுக்குத் தரும் மன உறுதியும் உந்து சக்தியும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் கட்டலோனியா, பாஸ்க், அப்காசியா, தெற்கு ஒசத்தியா, நாகோர்னா காராபாக், ஆர்மேனியா, செச்சினியா, திரான்ஸ்னிஸ்ட்ரியா, கொசோவா, சைப்ரஸ், வட- அயர்லாந்து, ஸ்கொட்லாந்து ஆகியவற்றில் நிகழும் விடுதலைப் போராட்டங்களின் பல்வேறு தகவல்கள் மிகக் கச்சிதமான சொற்கூட்டுக்களால் உருவாக்கப்பட்ட கட்டுரைகளிலிருந்து அறிவு பிரவாகித்து வழிவது எமக்கு உந்து சக்தியே.
இரண்டு அரசுத் (தேசம்) தீர்வுக்காகப் போராடும் சைப்ரஸ் நாட்டின் போராட்டம் வேண்டிநிற்கும் தீர்வானது ஈழத்தமிழினம் வேண்டிநிற்கும் தீர்வுக்கு ஒப்பானது என்னும் தகவல் நாம் கற்பனைகளை அடிப்படையாகக் கொண்டு போராடவில்லை என்ற தகவலை எமக்குச் சொல்லிச் செல்கிறது.
இக்கட்டுரைகளை வாசித்து முடித்த பின்னர் எமது தமிழ்த் தேசிய விடுதலைக் கோரிக்கையின் நியாயப்பாடுகளை கொண்டு சேர்க்க வேண்டிய எம்மையொத்த பல்தேசிய மக்கள் யார்? என்ற கேள்விக்கான பதில் சுழுவாகின்றது. அப்பதிலின் ஊடாக நாம் எமது போராட்ட நியாயத்தை அம்மக்களிடம் எடுத்துச்செல்ல வேண்டும் என்ற அரசியல் நடவடிக்கையொன்றும் புலனாகின்றது.
விடுதலைக்கான புதிய பாதைகளிற் பயணிக்கவேண்டிய காலத்தில் வானிற் தெரியும் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒன்றாகப் புலப்படுகின்றது “தேசிய சுயநிர்ணயமும் ஐரோப்பிய சிறுபான்மை இனங்களும்” எனும் நூலாகும்.
-கலாநிதி இ.நா.ஸ்ரீஞானேஸ்வரன்