முச்சந்தி
வன்முறைகளால் பற்றி எரியும் வங்கதேசம்; இடஒதுக்கீடு அறிவிப்பால் மாணவர் போராட்டம்!… ஐங்கரன் விக்கினேஸ்வரா
தென்னாசிய பொருளாதர வளர்ச்சியில் இந்தியாவுக்கு மேலாக உயர்ந்து வரும் வங்கதேசத்தின் ஒவ்வொரு நகரிலும், ஒவ்வொரு வீதியிலும் கொழுந்து விட்டு எரிகிறது கலவர நெருப்பு.
மாணவர் தீவிர போராட்டம் :
வங்கதேசம் பெருமைகளுடன் திகழும் இந்த மக்களாட்சி நாடு, தற்போது பற்றி எரிந்து வருகிறது. இயற்கையின் பெரும் வளங்களையும் வீர தீரம் மிக்க வரலாறையும் தன்னகத்தே கொண்டுள்ள தெற்காசிய நாடு.
தற்போது வங்கதேசம் வன்முறைகளால் பற்றி எரிகிறது. இந்தப் பரபரப்புக்கெல்லாம் காரணம், மாணவர் உரிமைப் போராட்டமே ஆகும். மாணவர் போராட்டத்தால் வெடித்த தாக்குதலும், இதைத் தொடர்ந்த வன்முறையுமே முக்கிய காரணமாகும்.
வங்கப் பிரிவினை:
இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு, தனி நாடாக இயங்கியது பாகிஸ்தான். மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் என்று சொல்வழக்கில் அறியப்பட்டது. அப்போது, கிழக்கு பாகிஸ்தான் முழுவதும் வங்க மொழி பேசும் மக்களே வசித்தனர்.
ஆனால், இந்தப் பகுதியை பாகிஸ்தான் அரசு புறக்கணித்தது. தேர்தல் முடிவுகளிலும் குளறுபடிகளைச் செய்தது. இதனால் பாகிஸ்தான் அரசுக்கெதிராக தொடங்கிய கிளர்ச்சி, விடுதலைப் போராக மாறியது. இந்தப் போராட்டத்தை ஆதரித்தது இந்திரா காந்தி தலைமையிலான இந்திய அரசு. விடுதலைப் போருக்காக படைகளை அனுப்பியது. 1971 டிசம்பர் 16 ல் இந்தியா மற்றும் முக்தி – பாஹினி கூட்டுப்படைகளின் முன்பு சரணடைந்தார் பாகிஸ்தான் ராணுவ ஜெனரல். இந்தப் போரின் முடிவு, வங்கதேசம் என்ற புதிய தேசம் உருவாக வழிவகுத்தது.
1971 இல் இனி கிழக்கு பாகிஸ்தான் அல்ல, சுதந்திர வங்கதேசம் என இன்றைய பங்களாதேஷ் விடுதலை அடைந்தது. இந்திய வரைபடத்தில் பார்த்தால், இந்தியாவுடன் சேர்ந்தே இருக்கும் ஒரு மாநிலம் போலவே தெரியும். மேற்கு வங்கம் என்ற மாநிலத்தின் பெயரே, வங்கப் பிரிவினையின் பின்னர் பங்களாதேஷ் விடுதலை பெற்றது வரலாறு.
இந்தப் போரில் 5 லட்சம் பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என கணக்கிடப்பட்டது. ஏராளமானோர் காணாமல் போயினர். விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தோரின் தியாகத்தைப் போற்றும் விதமாக, அவர்களின் சந்ததிகளுக்கு வேலைவாய்ப்பில் 30 வீத இடஒதுக்கீடு வழங்கியது வங்கதேசம் அரசு. பின்னர் 2018 ல் வெடித்த மாணவர்கள் புரட்சியின் காரணமாக, இந்த இட ஒதுக்கீட்டு முறை ரத்து செய்யப்பட்டது.
இடஒதுக்கீடு அறிவிப்பும், எதிர்ப்பும்:
தற்போது வங்கதேசத்தில் ஆட்சியில் இருக்கும் அவாமி லீக் கட்சி, விடுதலை வீரர்களின் சந்ததிகளுக்கு 30 வீத இடஒதுக்கீடு வழங்குவதென முடிவு செய்துள்ளது. இதை எதிர்த்து, தொடரப்பட்ட வழக்கில், தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது அந்நாட்டு உச்சநீதிமன்றம்.
இந்த நிலையில்தான், இட ஒதுக்கீட்டு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தன்னெழுச்சியாக போராட்டங்களில் குதித்துள்ளனர் மாணவர்கள். இவர்களை, ஆளுங்கட்சியின் மாணவர் அமைப்பான பங்களாதேஷ் சத்ரா லீக் அமைப்பினர், தாக்கி வருகின்றனர். போராட்டத்தை முடக்கும் விதமாக, அவர்கள் தாக்குதல் நடத்தி வருவதால், வன்முறைக் களமாகியுள்ளது வங்கதேச வீதிகள்.
தலைநகர் டாக்கா மட்டுமல்ல, ராஜ்ஷாஹி, குல்னா, சட்டோக்ரம் உள்ளிட்ட ஒவ்வொரு நகருமே வன்முறைகளால் வதைபட்டு வருகின்றன. இதுவரை மாணாக்கர் 67 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 700க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
வங்கதேச அரசின் நிலை :
பங்களாதேஷில் இப்போது மிகப் பெரிய வன்முறை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்குப் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட நிலையில், அப்படி ரத்து செய்யப்பட்டது செல்லாது என்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 30 சதவீத இட ஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும் என்றும் கடந்த ஜூன் 5 ஆம் திகதி அந்நாட்டின் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுவே மாணவர்களின் போராட்டத்திற்குக் காரணமாகும்.
பங்களாதேஷில் சமீப காலமாக வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வரும் நிலையில், அரசு வேலைகளில் இந்த இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்றே போராட்டம் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த போராட்டத்தில் ஆளும் தரப்பினர் திடீரென தாக்கியுள்ளனர். இதில் பலர் காயமடைந்தனர்.
பங்களாதேஷ் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் ஒதுக்கீட்டு முறையில் சீர்திருத்தம் கோரி வருகின்றனர். தாங்கள் எந்த அரசியல் கட்சிகளையும் சேர்ந்தவர்கள் இல்லை என்றும் அனைவருக்கும் நியாயமான தகுதி அடிப்படையில் வேலை கிடைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை மாணவர்கள் நடத்தி வரும் நிலையில், டாக்கா பல்கலைக்கழகம் மற்றும் சிட்டகாங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வங்க தந்தை முஜிபுர் ரெஹ்மான் :
பங்களாதேஷின் தந்தை என அறியப்படும் ஷேக் முஜிபுர் ரெஹ்மான் 1972 ஆம் ஆண்டில் ஒரு இட ஒதுக்கீட்டு முறையை அறிமுகப்படுத்தினார். 1971ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இருந்து சுதந்திரப் போரில் போராடியவர்களின் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு அரசு வேலைகளில் இட ஒதுக்கீட்டை வழங்கினார்.
அதன்படி முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு அரசு வேலைகளில் 44 வீதம் பொது பிரிவினருக்கு நிரப்பப்படும். மீதமுள்ள 56 வீதம் குறிப்பிட்ட சமூகங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர்களின் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு 30 வீதம் ஒதுக்கப்படுகிறது.
மேலும், பெண்களுக்கு 10 வீதம், பின்தங்கிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு 10 வீத ஒதுக்கீடு, சிறுபான்மை இன மக்களுக்கு 5 வீதம், மாற்றுத்திறனாளிகளுக்கு 1 வீதம் ஒதுக்கப்படுகிறது.
விடுதலைப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு வழங்கப்படும் 30 வீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்களின் கோரிக்கையாக உள்ளது. அதேநேரம் இன சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீட்டை அவர்கள் எதிர்க்கவில்லை.
மாணவர் குரல் அடக்கப்படுகிறதா ?
இந்த வாரம், தலைநகர் டாக்கா உட்பட பல வங்கதேச நகரங்களில், ஒதுக்கீட்டு எதிர்ப்பு இயக்கத்தின் ஆதரவாளர்களுக்கும், குறிப்பாக பங்களாதேஷ் சத்ரா லீக் (BCL) என அழைக்கப்படும் ஆளும் கட்சியான அவாமி லீக்கின் மாணவர் பிரிவினருக்கும், அவர்களை எதிர்ப்பவர்களுக்கும் இடையே மோதல்கள் நடந்தேறின.
பங்களாதேஷ் பிரதமராக இருக்கும் ஹசீனா அவர்களை “ரஜாக்கர்கள்” என்று குறிப்பிட்டு விமர்சித்துள்ளார். இதனால் ஆளும் தரப்பைச் சேர்ந்த மற்ற கட்சித் தலைவர்களும் அமைச்சர்களும் போராட்டக்காரர்களைத் தேச விரோதிகள் என்று சாடி வருகின்றனர்.
பங்களாதேஷில் 1971 போரில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்தவர்களை ரஜாக்கர்கள் என்று குறிப்பிடுவார்கள். அதை வைத்தே இட ஒதுக்கீட்டிற்கு எதிராகப் போராடும் மாணவர்களை பங்களாதேஷ் பிரதமர் விமர்சித்துள்ளார்.
பொதுச்சொத்துக்கள் தீக்கிரையாகி வருகின்றன. இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹஸினா, “வீட்டையும் குடும்பத்தையும் மறந்து நாட்டுக்காக உயிர்நீத்தவர்களின் பிள்ளைகளை அரசு ஆதரிப்பதும் கௌரவிப்பதும் அவசியம்” என்று குறிப்பிட்டுள்ளார்.