இலங்கை

மகிந்தவை கைது செய்தால் அக்கணமே அரசு கவிழும்; எச்சரிக்கிறார் விமல் வீரவன்ச

விடுதலைப் புலிகள் அமைப்பை அழித்த மகிந்த ராஜபக்சவை கைது செய்தால் அரசாங்கம் அக்கணமே கவிழும். யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இந்த மாதத்தில் மகிந்த ராஜபக்சவை நெருக்கடிக்குள்ளாக்குவது முற்றிலும் தவறானது என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

இங்கு அவர் மேலும் பேசுகையில்,

தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் ஏற்பட்ட நட்டத்தை அரசாங்கம் 18 சதவீத மின்கட்டண அதிகரிப்பு ஊடாக பொதுக்கள் மீது சுமத்தியுள்ளது. தரமற்ற நிலக்கரியால் ஏற்பட்ட நட்டத்தை மீள அறவிடுவதற்கு இதுவரையில் முறையான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை. போலியான வாக்குறுதிகளை மாத்திரமே அரசாங்கம் வழங்குகிறது.

2.5 மில்லியன் டொலர் மோசடிக்கு நடந்தது என்னவென்பது தெரியவில்லை. இந்த மோசடி விடயத்தில் அரச அதிகாரிகள் தண்டிக்கப்பட்டுள்ளார்கள். இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க பாதுகாக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக எவ்வித நடவடிக்கைகளும் இதுவரையில் எடுக்கப்படவில்லை.

அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ள நிலையில்,கடந்த கால அரசாங்கங்களின் ஊழல் மோசடிகளுக்கு மாத்திரம் அரசாங்கம் முன்னுரிமை வழங்குகிறது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சொத்து விவகாரம் பற்றி ஆராய்வதில் மாத்திரம் அதிக கவனம் செலுத்தியுள்ளது. புலம்பெயர்ந்து வாழும் தமிழ் விடுதலை புலிகள் ஆதரவாளர்களை மகிழ்விப்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டார்.

புலிகள் அமைப்பை அழித்த மகிந்த ராஜபக்சவை கைது செய்தால் அரசாங்கம் அக்கணமே கவிழும். யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இந்த மாதத்தில் மகிந்த ராஜபக்சவை நெருக்கடிக்குள்ளாக்குவது முற்றிலும் தவறானது.

புலிகள் அமைப்பின் தேவைக்காகவே முப்படைகளின் முன்னாள் உயர் அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். தேசியத்துக்கு எதிராக செயற்பாடுகள் அரசாங்கத்துக்கு எதிரானதாக அமையும் எனவும் தெரிவித்தார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button