இந்தியா

தமிழ் ஈழத்தை மீட்டுத் தருவதற்கு தமிழக அரசு முயற்சிக்க வேண்டும்;  முதலமைச்சர் விஜய்யிடம் சட்டப் பேரவையில் வலியுறுத்தல்  

ஈழத்தமிழர்கள் தம்மைத்தாமே ஆட்சி செய்துகொள்ளும் உரிமையை அதாவது தனித்தமிழ் ஈழத்தை மீட்டுத் தருவதற்கு முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.அத்துடன் தமிழீழ விடுதலைக் கனவோடு மாண்டு மடிந்த மாவீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் வகையில் மே 18 அன்று தமிழ்நாடு அரசு இந்த துயரத்தில் பங்கெடுத்து இந்த நினைவு நாளை நினைவுகூர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏ வன்னி அரசு தமிழக சட்டப் பேரவையில் வலியுறுத்தினார்

தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் அரசு மீதான பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்புக்காக நேற்று புதன்கிழமை சட்டப்பேரவை கூடிய போது, வாக்கெடுப்பின் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.எல்.ஏ வன்னி அரசு பேசிய போதே இவ்வாறு வலியுறுத்தியதுடன் இங்கு தொடர்ந்து பேசிய அவர்;

தொப்புள்கொடி உறவுகளான ஈழத்தமிழ் மக்கள் சிங்கள – பௌத்த பேரினவாத அரசுகளின் கீழ் இப்பொழுதும் அல்லற்பட்டு வருகிறார்கள். கால் நூற்றாண்டுக்கும் மேலாக தனித்தமிழ் ஈழ கோரிக்கையை காந்திய வழியில் ஈழத்தந்தை செல்வநாயகம் அறப்போராட்டத்தை நடத்தினார். அதன் தொடர்ச்சியாக வேலுப்பிள்ளை பிரபாகரன் தனித்தமிழ் ஈழ கோரிக்கைக்காக ஆயுதவழியில் அறப்போராட்டத்தை முன்னெடுத்தார். 2009 மே மாதத்தில் முள்ளிவாய்க்காலில் எமது தமிழ்த்தேசிய இனத்தின் உயர்மிகுந்த போராட்டத்தை இந்திய அரசின் உதவியுடன் இனப்படுகொலையை நடத்தி உலகநாடுகள் முடக்கின. ஈழத்தமிழ் விடுதலைக்கு தீர்வுகாண இந்திய அரசு இலங்கை அரசுடன் செய்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.

இந்த சூழலில் இந்த அரசு ஈழத்தமிழர்களின் வலியை உணர்ந்து ஈழத்தமிழர்கள் தம்மைத்தாமே ஆட்சி செய்துகொள்ளும் உரிமையை அதாவது தனித்தமிழ் ஈழத்தை மீட்டுத்தருவதற்கு தமிழ்நாடு அரசு முன்முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

அதுமாத்திரமல்லாது, தமிழீழ படுகொலை இடம்பெற்ற மே 18 சர்வதேச இனப்படுகொலை தினமாக உலகத் தமிழர்கள் முன்னெடுத்து வருகிறார்கள்.அந்த அடிப்படையில் தமிழீழ விடுதலைக் கனவோடு மாண்டு மடிந்த மாவீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் வகையில் மே 18 அன்று தமிழ்நாடு அரசே இந்த துயரத்தில் பங்கெடுத்து இந்த நினைவு நாளை நினைவுகூர நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்துகிறேன்.

அதேபோல்,தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ள ஈழத்தமிழ் அகதிகளுக்காக கடந்த ஆட்சியின் போது நிரந்தர வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டிருந்தன. எனவே தி.மு.க ஆட்சியில் அவர்களுக்காக வழங்கப்பட்ட சலுகைகள் ,வீட்டுத்திட்டங்கள் இந்த ஆட்சியிலும் தொடரவேண்டும். இந்திய குடியுரிமை வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.ஆகவே ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி தமிழ்நாட்டிலுள்ள முகாம்களில் தங்கியிருக்கும் ஈழத்தமிழர்கள் அனைவருக்கும் இந்திய குடியுரிமை பெற்றுத்தருவதற்கு புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button