முச்சந்தி

அமெரிக்க துப்பாக்கி கலாச்சார விளைவா ?… ட்ரம்ப் மீதான சூடு உளவுத்துறை கவலையீனமா ?…  ஐங்கரன் விக்கினேஸ்வரா

(டொனால்ட் டிரம்ப் மீதான தாக்குதல் மிகப்பெரும் வல்லரசு நாட்டின் உளவுத்துறையின் பலவீனத்தை காட்டியுள்ளது. தற்போது அனுதாப வாக்குகளிலாயே டொனால்ட் டிரம்ப் வெல்லக்கூடிய சாத்தியங்கள் தற்போது எழுந்துள்ளது என அமெரிக்க ஊடகங்களே தெரிவிக்கின்றன)
உலகிற்கு நீதியை போதிக்கும் அமெரிக்காவில் அரசியல் படுகொலைகளும், கொலை முயற்சிகளும் இது முதற்தடவையல்ல. ஆபிரகாம் லிங்கன், ஜெ எப் கென்னடி, மார்டின் லூதர் கிங் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து டொனால்ட் ட்ரம்ப் வரை, அமெரிக்க ஜனாதிபதிகளின் மீதான படுகொலை முயற்சிகள் மற்றும் சதிகள் ஏராளமாக நடந்துள்ளன.
கொலை முயற்சியில் தப்பிய ட்ரம்ப் :
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பென்சில்வேனியாவில் பட்லர் நகரில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக உரையாற்றிக் கொண்டிருந்த போது அவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் டொனால்ட் ட்ரம்பின் காதுப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. திறந்த மேடையில் உரையாற்றிக் கொண்டிருந்த போது அவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்ட போது இலக்கு தவறி அவரது காது பகுதியில் தாக்கியுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மீது போலீஸார் நடத்திய பதில் தாக்குதலில் அவர் உயிரிழந்தார்.
உடனடியாக சுதாரித்துக் கொண்ட ட்ரம்ப் கீழே குனிந்து தன்னை பாதுகாத்து கொண்டார். உடனடியாக விரைந்த பாதுகாப்பு தரப்பினர் மேலும் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் நிலமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தனர்.
அடுத்த ஜனாதிபதி ட்ரம்ப் ?
துப்பாக்கிச் சூட்டில் மயிரிழையில் தப்பினார் ட்ரம்ப் என்றும், அடுத்த ஜனாதிபதி ட்ரம்ப் உறுதியாகிவிட்டது எனவும் சில ஊடகங்கள் சிலாகித்து எழுதத் தொடங்கிவிட்டன.
அமெரிக்க அரச கட்டமைப்புக்கு புறம்பாக செயற்படுவார் என நம்பபப்பட்ட ட்ரம்ப் நேட்டோவை பலவீனப்படுத்துவார் என்றும் ஊகிக்கப்பட்டது. டொனால்ட் ட்ரம்ப் படுகொலை செய்யப்படலாம் என்ற அச்சம் ஏற்கனவே இருந்து வந்தது.
அத்துடன் ரஷ்யாவுக்கு ஆதரவாகச் செயற்படுவார் என்றும், உக்ரைன் யுத்தத்தை ரஷ்யாவுக்கு ஆதரவாக முடிவுக்கு கொண்டுவருவார் போன்ற காரணங்களால் இவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தப்படலாம் என்ற அச்சமும் நீண்டகாலமாக இருந்தது.
இத்தகைய நிலையில் அனுதாப வாக்குகளிலாயே டொனால்ட் டிரம்ப் வெல்லக்கூடிய சாத்தியங்கள் தற்போது எழுந்துள்ளது என அமெரிக்க ஊடகங்களே தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம்:
அமெரிக்காவில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு துப்பாக்கி கலாசாரம் தற்போது அதிகரித்துக் காணப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் 600-க்கும் மேற்பட்ட பொது இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்திருக்கின்றன.
`வெகுஜன துப்பாக்கிச்சூடு’ (Mass Sooting) என்பதற்கு அமெரிக்கா ஒரு வரையறையைக் கொண்டிருக்கவில்லை என்றாலும், துப்பாக்கி வன்முறைக் காப்பகம் ஒரு வெகுஜன துப்பாக்கிச்சூட்டை நான்கு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்த/கொல்லப்பட்ட சம்பவமாக வரையறுக்கிறது.
அமெரிக்காவில் நூறு குடியிருப்பாளர்களுக்கு 120.5 துப்பாக்கிகள் உள்ளன. துப்பாக்கி வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை வீடுகளிலும், பொது இடங்களிலும் நடக்கும் துப்பாக்கிச்சூடுகளை உள்ளடக்கியிருக்கிறது. இது கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளில் நடக்கும் கொலைகளைவிட கணிசமாக பெரிய விகிதமாகும்.
ஸ்விட்சர்லாந்தைத் தளமாகக் கொண்ட முன்னணி தனியார் ஆராய்ச்சி நிறுவனம், உலகெங்கிலுமுள்ள தனியார் கைகளில் துப்பாக்கிகளின் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்ததில், 390 மில்லியன் துப்பாக்கிகள் புழக்கத்தில் இருந்ததாக மதிப்பிடுகிறது. அத்துடன் கடந்த பல வருடங்களாகத் துப்பாக்கி வைத்திருப்பது குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்திருப்பதாக அமெரிக்காவின் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க வரலாற்றில் படுகொலை:
ஜனவரி 30, 1835 இல், ஆண்ட்ரூ ஜாக்சன் ஒரு படுகொலை முயற்சியை அனுபவித்த முதல் ஜனாதிபதி ஆவார். அப்போது ரிச்சர்ட் லாரன்ஸ் இரண்டு முறை அவரை சுட முயன்றார். லாரன்ஸால் குறி தவறாக சுடப்பட்டதால் அந்த முயற்சி தோல்வியடைந்தது.
வரலாற்றில் அமெரிக்காவின் நான்கு பதவியில் இருந்த ஜனாதிபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். 1865 இல் ஆபிரகாம் லிங்கனை ஜான் வில்க்ஸ் பூத் என்பவர் சுட்டுக் கொன்றார். அதன் பின் இன்னோர் அதிபர் ஜேம்ஸ் ஏ. கார்ஃபீல்ட் 1881இல் சார்லஸ் ஜே. கிடோவால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1901இல் வில்லியம் மெக்கின்லி எனும் ஜனாதிபதியை லியோன் சோல்கோஸ்ஸால் என்பவர் சுட்டுக் கொன்றார். பலத்த சர்ச்சை உருவாக்கிய ஜான் எஃப். கென்னடி கொலை 1963இல் லீ ஹார்வி ஓஸ்வால்ட் என்பவரால் நடாத்தப்பட்டது.
இற்றைவரை மூன்று ஜனாதிபதிகள் படுகொலை முயற்சியில் காயமடைந்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் 1912, ஜான் ஷ்ராங்க் என்பவரால் காயமடைந்தார். பனிப்போர் காலத்தில் பிரபல்யமான ரொனால்ட் ரீகன் 1981, ஜான் ஹிங்க்லி ஜூனியர் என்பவரால் சுடப்பட்டு காயமடைந்தார்.
உளவுத்துறை கவலையீனம்:
தேர்தல் பிரச்சாரத்தில் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் மேடையில் இருந்து பாதுகாவலர்கள் புடை சூழ வெளியேறினார். இந்த தாக்குதலை அமெரிக்க நாட்டின் உளவுத்துறை உறுதி செய்து இருந்தாலும் மிகப்பெரும் வல்லரசு நாட்டின் உளவுத்துறையின் பலவீனத்தை காட்டியுள்ளது.
குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளரான முன்னாள் அதிபர் ட்ரம்ப், தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய போது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட வேளையில் உளவு அமைப்புகளின் பங்களிப்பை பலரும் விமர்சித்துள்ளனர்.
எனினும் ட்ரம்பின் வலது காது பகுதியில் காயம் ஏற்பட்டது. காதில் இருந்து ரத்தம் சொட்டிய நிலையில் தனது கையை உயர்த்தி காட்டினார். தொடர்ந்து பாதுகாவலர்கள் அவரை மேடையில் இருந்து பத்திரமாக அழைத்து சென்றனர். இந்தக் காட்சி ஊடகங்களில் அவருக்குரிய அனுதாப அலையை பாரியளவில் உருவாக்கியுள்ளது என்பதில் ஐயமில்லை.
 ஐங்கரன் விக்கினேஸ்வரா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button