பலஸ்தீன அரசை நிறுவுவதற்கு இஸ்ரேல் எதிர்ப்பு: நாடாளுமன்றில் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
பலஸ்தீன அரசை நிறுவுவதற்கு எதிராக இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில் 68 மேலதிக வாக்குகளால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பலஸ்தீன அரசை நிறுவுவதற்கு எதிராக இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை (18.07) வாக்கெடுப்பு நடத்தாப்பட்டது.
இதன்போது இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 68 வாக்குகளும் எதிராக 09 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணியில் உள்ள கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் வலதுசாரி கட்சிகள் இணைந்து இந்த தீர்மானத்திற்கு ஆதரவளித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேலில் பலஸ்தீன அரசை ஸ்தாபிப்பது இஸ்ரேல் மக்களுக்கு பெரும் ஆபத்தாக அமைவதுடன் இஸ்ரேல்-பலஸ்தீன மோதலை நிரந்தரமாக்கும் என்றும் பிராந்தியத்தை சீர்குலைக்கும் என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 22 ஆம் திகதி காங்கிரஸின் கூட்டு அமர்வில் உரையாற்றுவதற்கும், ஜனாதிபதி ஜோ பைடனைச் சந்திப்பதற்கும் நெதன்யாகு அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொள்ளவிருந்த நிலையில் நாடாளுமன்றின் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எவ்வாறாயினும், அமெரிக்க ஜனாதிபதிக்கு கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் நெதன்யாகு மற்றும் பைடன் இடையேயான சந்திப்பு பாதிக்கப்படலாம் என கூறப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு பகுதியாக உள்ள 193 நாடுகளில் மொத்தம் 145 நாடுகள் பலஸ்தீனிய அரசை அங்கீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.