அமைச்சுப் பதவியை துறக்கும் விஜேதாச; அடுத்த திட்டம் என்ன?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக அமைச்சர் விஜேதாச ராஜபக்ச போட்டியிடுவார் என அக்கட்சி தொடர்ச்சியாக தெரிவித்து வருகிறது.
சுதந்திரக் கட்சியின் உரிமை தொடர்பில் சில வழக்குகள் நீதிமன்றில் தொடரப்பட்டுள்ள நிலையில், விஜயதாச ராஜபக்ச சு.கவின் சார்பில் வேட்பாளராக களமிறங்குவார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் அறிவித்துள்ளார்.
விஜயதாச ராஜபக்ச வேட்புமனுவை கையளிப்பதற்கு முன்னதாக தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ய உள்ளதாக சு.கவின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.
மைத்திரிபால சிறிசேன சு.கவின் தலைமை பதவியில் தொடர முடியாதென நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பின்னர் அவர் தமது தலைமை பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
தற்காலிகமாக பதில் தலைவராக விஜேதாச ராஜபக்சவை அக்கட்சி நியமித்தது. என்றாலும், அதற்கும் நீதிமன்றம் இடைக்கால தடையை விதித்தது.
என்றாலும், நீதி அமைச்சுப் பதவியை விஜேதாச ராஜபக்ச தொடர்ந்து வகித்து வருவதுடன், அரசாங்கத்துக்கு எதிரான சில விமர்சனங்களையும் முன்வைத்து வருகிறார்.
இந்த நிலையில், சு.கவின் ஜனாதிபதி வேட்பாளராக விஜேதாச ராஜபக்ச போட்டியிட உள்ளதால் அவர் தமது அமைச்சுப் பதவியை இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் நடுப்பகுதிக்கு முன்பு இராஜினாமா செய்வார் எனவும் சு.கவின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.
![]()