இலங்கை

ஜே.ஆர். கூட மக்கள் ஆணைக்கு மதிப்பளித்தார்: ரணிலுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன தமது பதவிக்காலத்தை அதிகரிப்பதற்கு அரசியலமைப்புக்கு உட்பட்டே சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்தினார் என முன்னாள் நீதியரசர் சரத் என்.சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,

”ஜனாதிபதி முறையை உருவாக்கியது ஜே.ஆர். அவர்கூட இவ்வாறான கருத்துகளை கூறியதில்லை. சட்டத்திற்கு உட்பட்டே ஜே.ஆர். அனைத்து விடயங்களையும் செய்தார்.

நாடாளுமன்றத்தில் ஆறில் ஐந்து பெரும்பான்மை அவரிடம் இருந்தமையால் சட்டங்களை அவரால் உருவாக்க முடிந்தது. அவர் அரசியலமைப்பை மீறி செயல்படவில்லை.

ஜே.ஆர். தமது ஆட்சிக்காலத்தை நீடிக்காது குறைத்தே தேர்தலை நடத்தியிருந்தார். முதல் தேர்தலை அவர் தமது ஆட்சிக்காலத்தை குறைத்தே நடத்தினார். அவரால் நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை நீடித்திருக்கலாமே.

நாடாளுமன்றத்தின் காலத்தை நீடிக்க அவர் சர்வஜன வாக்கெடுப்புக்குச் சென்றார். அவ்வாறு இல்லாது பதவிக்காலத்தை நீடிக்க முடியாது. அவர் மக்களின் இறைமையை ஏற்றுக்கொண்டார்.

அவரது வரலாறுகள் கூட தெரியாதுதான் தற்போதுள்ளவர்கள் நடந்துகொள்கின்றனர். ஜே.ஆர்.கூட நீதிமன்றங்கள் குறித்து இவ்வாறான கருத்துகளை ஒருபோதும் வெளியிட்டதில்லை.

ரணில் விக்ரமசிங்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி அல்ல. அவரை நியமித்த பொதுஜன பெரமுனவின் எம்.பிகள்தான் அவரை கட்டுப்படுத்த வேண்டும்.

அவர்கள் வழங்கும் ஆதரவில்தான் அவர் செயல்படுகிறார். அதனால் மக்கள் பொதுஜன பெரமுனவைதான் விரட்டியடிக்க வேண்டும்.

எனவே, நீதிமன்றங்களை வெளியில் இருந்து விமர்சனம் செய்யாது கருத்துகள் ஏதும் இருந்தால் நீதிமன்றில் முன்வைக்க வேண்டும். சட்டத்தரணிகள்தான் அதிகமாக நீதிமன்றத்தை விமர்சிக்கின்றனர்.

நீதிமன்றங்களை அனைவரும் பாதுகாக்க வேண்டும். நீதிமன்றங்கள் வீழ்ச்சியடைந்தால் நாட்டின் சட்டவாட்சியும், சமாதானமும் வீழ்ச்சியடையும்.” என்றார்.

”நீதிமன்றங்களுக்கான அதிகாரம் நீதிமன்றங்களில் அல்ல உள்ளது. அவை நாடாளுமன்றத்திடம்தான் உள்ளது. சட்டவாக்க சபை மற்றும் நிறைவேற்றுத்துறையில் கைவைக்க வேண்டாம்.

அவ்வாறு கை வைத்தால் நான் நாடாளுமன்றத்துடன் செயல்படுவேன்.” இவ்வாறு அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கூறியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே முன்னாள் நீதியரசர் சரத் என்.சில்வா, ரணில் விக்ரமசிங்கவுக்கு கண்டனம் வெளியிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.