ஓமன் கடற்பரப்பில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான கப்பல்; இலங்கையர் உள்ளிட்ட ஒன்பது பேர் மீட்பு
ஓமன் கடற்பரப்பில் எண்ணெய்க் கப்பல் ஒன்று கவிழந்து விபத்துக்குள்ளான நிலையில், அதிலிருந்த இலங்கையர் ஒருவர் உள்ளிட்ட ஒன்பது பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
ஐஎன்எஸ் டெக் என்ற இந்திய போர்க்கப்பலின் உதவியுடன் எட்டு இந்தியர்கள் உட்பட ஒன்பது பணியாளர்கள் மீட்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
மீட்கப்பட்டவர்களில் இலங்கை பிரஜை ஒருவரும் அடங்குவார். மீதமுள்ள பணியாளர்களை தேடும் மற்றும் மீட்பு பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
MT Prestige Falcon என்ற எண்ணெய்க் கப்பல் கவிழ்ந்ததில் காணாமல் மூன்று இலங்கைய்கள் உட்பட 16 பணியாளர்கள் காணாமல் போயிருந்தனர்.
இதனையடுத்து இந்தியாவின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகம், ஓமான் அதிகாரிகளுடன் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
ஓமானின் கடல்சார் பாதுகாப்பு மையம், குறித்தக் கப்பல் கொமொரோஸ் கொடியிடப்பட்ட எண்ணெய்க் கப்பல் என்று தெரிவித்ததோடு, அந்தக் கப்பல் “மூழ்கி, தலைகீழாக” இருந்ததாக ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தது.
இருப்பினும், கப்பலில் உள்ள எண்ணெய் அல்லது எண்ணெய் பொருட்கள் கடலில் கசிகிறதா அல்லது கப்பல் கவிழ்ந்து நிலைபெற்றுள்ளதா என்பதை அந்த மையம் உறுதிப்படுத்தவில்லை.