நேட்டோ கூட்டணிப் பகுதிக்கு அருகே சீனாவின் ராணுவப் பயிற்சிகள்
நேட்டோ கூட்டமைப்பின் கிழக்கு எல்லைப் பகுதிக்கு அருகே சீனா, இந்த வாரம் பெலரூசுடன் சேர்ந்து ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நடவடிக்கை, பெய்ஜிங்குக்கும் அமெரிக்காவின் தலைமையிலான நேட்டோ கூட்டணிக்கும் இடையே பதற்றம் அதிகரிப்பதைக் குறிக்கும் அறிகுறியாகப் பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவின் பங்காளி நாடான பெலரூசில், போலந்து எல்லைக்கு அருகே பயங்கரவாதத் தடுப்பு நடவடிக்கை எனக் கூறப்படும் கூட்டு ராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நேட்டோ உறுப்பு நாட்டுத் தலைவர்கள், அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க ஒன்றுகூடும் நிலையில் இந்த ராணுவப் பயிற்சிகள் இடம்பெறுகின்றன.
நேட்டோ கூட்டத்தில் உக்ரேன் போர் குறித்த அம்சங்கள் முக்கிய அங்கம் வகிக்கும். இப்படிப்பட்ட வேளையில் ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டு அவற்றின் மூலம் நேட்டோ கூட்டணிக்கு எச்சரிக்கை விடுப்பது சீனாவின் எண்ணம் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
சீனாவும் பெலரூசும் இணைந்து முன்பு கூட்டு ராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டிருக்கின்றன. ஆனால் 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா, உக்ரேன் மீது படையெடுத்த பிறகு அத்தகைய பயிற்சிகள் நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.
போலந்து எல்லைக்கு மிக அருகில் இருக்கும் பிரெஸ்ட் நகரில் திங்கட்கிழமையன்று (ஜூலை 8) கூட்டு ராணுவப் பயிற்சிகள் தொடங்கின. புதன்கிழமையன்று (ஜூலை 10) சீனாவின் தற்காப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் இந்த விவரம் இடம்பெற்றுள்ளது.
பயிற்சிகள் ஜூலை மாதம் நடுப்பகுதி வரை நீடிக்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், குறிப்பாக எத்தனை சீன ராணுவ வீரர்கள் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர் என்ற தகவல் அறிக்கையில் இடம்பெறவில்லை.
தங்களுக்கிடையே சண்டை உத்திகளை மேம்படுத்துவது, ஒத்துழைப்பு, தொடர்பை வலுப்படுத்துவது ஆகிய முயற்சிகளில் இரு ராணுவங்களும் ஈடுபட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கூட்டு ராணுவப் பயிற்சிகள் குறிப்பிட்ட எந்த நாட்டையும் குறிவைக்கவில்லை என்று சீனா கூறியுள்ளது.
எனினும், இந்த வேளையில் பயிற்சிகள் மேற்கொள்ளப்படுவதற்கு எதிராக போலந்தின் தற்காப்பு அமைச்சு கண்டனம் தெரிவித்துள்ளது. நேட்டோ கூட்டம் நடைபெறும் அதே வேளையில் இந்த கூட்டு ராணுவப் பயிற்சிகள், பொய்த் தகவல்களைப் பரப்பவும் பிராசாரத்துக்காகவும் மேற்கொள்ளப்படும் சாத்தியம் இருப்பதாக போலந்து சாடியது.