முச்சந்தி

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பான மனு: தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற உத்தரவு

ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் விளக்கமளிக்கும் வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஒரு இலட்சம் ரூபா நீதிமன்றக் கட்டணத்திற்கு உட்பட்டு நிராகரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

மேலும் ஒரு மாதத்திற்குள் நீதிமன்ற கட்டணத்தை செலுத்த மனுதாரருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்கள்

தற்போதைய அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக்காலம் ஐந்து வருடங்கள் என்பது தெளிவாக உள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்று (08) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையாகி பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கனிஷ்க டி சில்வா இதனைத் தெரிவித்தார்.

இந்நிலையில், குறித்த மனுவை தள்ளுபடி செய்யக் கோரி அடிப்படை ஆட்சேபனைகள் எழுப்பப்படும் என்றும் அவர் மன்றில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடையும் திகதிகள் தொடர்பில் உயர் நீதிமன்றம் விளக்கமளிக்கும் வரை தற்போது திட்டமிட்டபடி ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்க உத்தரவிடுமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரபல தொழிலதிபர், சி.டி. லெனாவா கடந்த புதன்கிழமை இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், குறித்த பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, விஜித் மலல்கொட, முர்து பெர்னாண்டோ, பிரிதி பத்மன் சூரசேன மற்றும் எஸ். துரைராஜா ஆகியோர் அடங்கிய ஐந்து பேர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button