கண்டியில் திடீர் சுற்றிவளைப்பு; 12 இந்தியர்கள் கைது – காரணம் என்ன?
கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று திங்கட்கிழமை இரவு கண்டி ஹல்லோலுவ பகுதியில் உள்ள வீடொன்றில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இணைய குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இந்திய பிரஜைகள் குழுவொன்றை கைது செய்துள்ளனர்.
அத்துடன், அவர்கள் பயன்படுத்திய உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மத்திய மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் பத்திநாயக்கவுக்குக் கிடைத்த தகவலின் பேரில் இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டதாகவும், இணையக் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 12 இந்திய பிரஜைகளைக் கொண்ட ஒழுங்கமைக்கப்பட்ட குழுவைக் கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சோதனையின் போது, 22 கணினிகள், 4 லப்டப்கள், 50க்கும் மேற்பட்ட அதிநவீன தொலைபேசிகள், 11 ஏடிஎம் அட்டைகள் மற்றும் பல உபகரணங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இரகசிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மாதம் 300,000 ரூபாய்க்கு வீட்டை வாடகைக்கு பெற்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவர்கள் இணையம் மூலம் சர்வதேச அளவில் பந்தயம் கட்டும் தொழிலை நடத்தி வருவதாக சந்தேகிக்கப்படுகிறது.
இவர்கள் உணவு தயாரிக்க இரண்டு இந்திய சமையல்காரர்களை வைத்துள்ளனர். மேலும், குழு உறுப்பினர்கள் எவரும் பகல் நேரத்தில் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் தொடர்பில் மேலதிக நடவடிக்கைகளுக்காக சைபர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.