ஆப்கானிஸ்தான் அகதிகள் வெளியேற முன்வராவிடின் உடனடி கைது: பாகிஸ்தானின் அடுத்த கட்ட நடவடிக்கை
உரிய ஆவணங்களின்றி பாகிஸ்தானில் தங்கியுள்ள ஆப்கானிஸ்தான் அகதிகளை அவர்களுடைய நாட்டிற்கு அனுப்பும் சர்ச்சைக்குரிய திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை பாகிஸ்தான் ஆரம்பிக்கவுள்ளது.
கடந்த வருடம் நவம்பர் மாதத்தில், முதல் கட்டமாக சுமார் 541,000 பேர் பாகிஸ்தானிலிருந்து வெளியியேறுவதற்கு நிர்பந்திக்கப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது 800,000 இற்கும் அதிகமான ஆப்கானிஸ்தானியகளை பாகிஸ்தானிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என எதிர்ப்பார்ப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவர்களாகவே வெளியேறுவதற்கு முன்வராவிடின் ஆப்கானிஸ்தான் அகதிகள் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு திருப்பியனுப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற் கட்டமாக, ஆப்கானிஸ்தானியர்கள் பாகிஸ்தானிலிருந்து வெளியேற்றப்படுவதற்கு முன்னர் அரசாங்கம் சுமார் 4.4 மில்லியன் ஆப்கானிஸ்தான் அகதிகள் இருப்பதாக அறிவித்தது.
அவர்களில் 1.73 மில்லியன் பேர் ஆவணமற்றவர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
பாதுகாப்புக் கவலைகள் மற்றும் போராடும் பொருளாதாரம் ஆகியவற்றை மேற்கோள் காட்டி அவர்கள் வெளியேற்றப்படுகின்றனர்.
பாகிஸ்தான் முழுவதும் ஆயுதமேந்திய தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் நாடுகளுக்கு திருப்பியனுப்பும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆப்கானிஸ்தானை தளமாகக் கொண்டவர்களே தாக்குதல்களுக்கு காரணம் என்று பாகிஸ்தான் அரசாங்கம் கூறியது, இந்த குற்றச்சாட்டை ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அரசாங்கம் நிராகரித்தது.
எவ்வாறாயினும், உரிய ஆவணங்களின்றி தங்கியுள்ள ஆப்கானிஸ்தானியர்கள் வெளியேற்றப்படுவதற்கு முன்னர் அவர்களின் சுயவிபரங்களை பாகிஸ்தான் சரிபார்க்க வேண்டும் என இஸ்லாமாபாத்தில் உள்ள ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையரின் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
அவர்களில் பலருக்கு “சர்வதேச பாதுகாப்பு தேவை” என அவர் மேலும் கூறியுள்ளார்.