35 ராக்கெட்டுகள், ஏவுகணைகளை கொண்டு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய லெபனான்
லெபனானில் இருந்து ஏவப்பட்ட சுமார் 35 ராக்கெட்டுகள் மற்றும் ஏவுகணைகள் நேற்று மாலை வடக்கு இஸ்ரேலின் சபேட் நகரைத் தாக்கியதில் தீ விபத்து, மின்வெட்டு மற்றும் சொத்துகள் சேதம் அடைந்ததாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (ஐ.டி.எப்.) பெரும்பாலான ஏவுகணைகளை வெற்றிகரமாக இடைமறித்ததாக ராணுவம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இதற்கிடையில், லெபனான் ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லா ஒரு அறிக்கையில், தெற்கு லெபனானில் உள்ள நபாதி நகரம் மற்றும் கிழக்கு லெபனானில் உள்ள சோமோர் நகரத்தின் மீது இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு பதிலடியாக, சபேடில் உள்ள இஸ்ரேலிய விமான தளத்தை கத்யுஷா ராக்கெட் மூலம் தாக்கியதாக தெரிவித்துள்ளது. மேலும் சில ராக்கெட்டுகள் இஸ்ரேலிய அயர்ன் டோம் ஏவுகணைகளால் இடைமறிக்கப்பட்டதாவும் லெபனான் ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக ஹிஸ்புல்லாவிற்கு எதிராக “முழு அளவிலான” தாக்குதலை நடத்துவதற்கு தயாராக இருப்பதாக இஸ்ரேல் எச்சரித்ததால், இஸ்ரேல்-லெபனான் எல்லையில் பதற்றங்கள் அதிகரித்து வரும்நிலையில், இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.காசா பகுதியில் ஹமாஸ் போராளிகள் தெற்கு இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலுக்கு தனது ஆதரவைக் காட்ட ஹிஸ்புல்லா இஸ்ரேல் மீது நடத்திய ராக்கெட் தாக்குதலை தொடர்ந்து, லெபனான்-இஸ்ரேல் எல்லையில் அக்டோபர் 8, 2023 முதல் பதற்றம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.