கடைசி நேரத்தில் ரணில்- சஜித் இணைந்து வேட்பாளரை நிறுத்துவர்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கடைசி நேரத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் ஒன்றிணைந்து வேட்பாளர் ஒருவரை நியமிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று ஜே.வி.பி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் கூட்டமொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அதன்போது நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிவித்தலை வெளியிடும் அதிகாரம் இன்னும் மூன்று வாரங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கவுள்ளது. இதன்படி ஒக்டோபர் 5ஆம் திகதிக்குள் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கின்றோம்.
இந்நிலையில் ஜனாதிபதி மற்றும் அரசாங்க பக்கத்தில் தேர்தல் தொடர்பில் பலவாறு கூறப்படலாம் என்பதுடன், தேர்தலை நடத்தாதிருக்கவும் முயற்சிக்கலாம். ஆனால் அரசியலமைப்பின் பிரகாரம் தேர்தல் நடந்தே ஆக வேண்டும்.அரசியலமைப்பில் மாற்றத்தை மேற்கொண்டாலும் புதிதாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவரில் இருந்தே அது நடைமுறைப்படுத்தப்படும்.
ஜனாதிபதி வேட்பாளராவதற்கு திட்டமிடுகின்றார். ஆனால் அவர் மட்டும் தேர்தலில் போட்டியிடப் போகின்றாரா? அல்லது சஜித் மட்டும் போட்டியிடப் போகின்றாரா? அல்லது இருவரும் சேர்ந்து வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போகின்றனரா? என தெரியவில்லை. அந்த முகாம் பெரும்பாலும் அனைவரும் இணைந்து வேட்பாளர் ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்கலாம் என்றே எதிர்பார்க்கின்றோம் என்றார்.