ஆஸ்திரேலியாவில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்குத் தட்டுப்பாடு
நடுவானில் விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்வதற்கான சாத்தியம் குறித்து ஆஸ்திரேலியாவில் விமானிகளிடம் கவலை எழுந்துள்ளது.
விமான நிலையக் கோபுரங்களில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதே இதற்குக் காரணம்.
வடக்கு ஆஸ்திரேலியாவின் டார்வின் நகரில் தற்போது இரவில் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுச் சேவைகள் இல்லை.
கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் நள்ளிரவில், தரைத்தளத்தில் இருந்து வழிகாட்டுதல் எதுவுமின்றி 12க்கும் அதிகமான விமானங்கள் தரையிறங்கவோ புறப்படவோ வேண்டியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு கரையோரம் உள்ள டவுன்ஸ்வில் விமான நிலையத்தின் கட்டுப்பாட்டுக் கோபுரத்தில் வாரயிறுதிகளில் ஊழியர்கள் இல்லை. ஞாயிற்றுக்கிழமை மட்டும் கிட்டத்தட்ட 50 விமானங்கள் தரையிறங்க அல்லது புறப்பட சொந்தமாக ஒருங்கிணைக்க வேண்டியுள்ளது.
விமான நிலையத்தில் ஓடுபாதையில் இடம்பெறும் கட்டுமானப் பணிகள், விமானங்கள் தரையிறங்கவும் புறப்படவும் இன்னும் சிக்கலாக்குவதாக விமானிகள் கவலையுறுகின்றனர்.