மக்கள் போராட்ட முன்னணி – புதிய அரசியல் இயக்கத்தினை ஆரம்பித்தனர் அரகலய போராட்டக்காரர்கள்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை அடிப்படையாக அரகலய போராட்ட குழுவினர் மக்கள் போராட்ட முன்னணி என்ற புதிய அரசியல் இயக்கத்தினை ஆரம்பித்துள்ளனர்.
முன்னாள் மாணவ செயற்பாட்டாளர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் ஊடகவியலாளர்கள் அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களை உள்ளடக்கி மக்கள் போராட்ட முன்னணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அரகலய செயற்பாட்டாளர் லகிரு வீரசேகர அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியங்களிற்கு இடையிலான முன்னாள் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே முன்னணி சோசலிச கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சட்டத்தரணி நுவான்போபகே ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர மற்றும் இடதுசாரி கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த புதிய அரசியல் இயக்கத்தில் அங்கம் வகிக்கின்றனர்.
இன்று இந்த புதிய அரசியல் இயக்கத்தினை ஆரம்பிப்பது குறித்த செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவித்துள்ள வசந்த முதலிகே அரகலய போராட்டம் கடந்த காலத்தில் அமைப்புமுறை மாற்றத்தை கோரியே முன்னெடுக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்பார்த்த மாற்றங்கள் ஏற்படவில்லை என தெரிவித்துள்ள அவர் தற்போதைய ஜனாதிபதி தற்போதைய முறைமையை மேலும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.
ஸ்திரதன்மை இன்னமும் ஏற்படுத்தப்படவில்லை என குறிப்பிட்டுள்ள வசந்த முதலிகே நாளாந்த வாழ்க்கையில் மக்கள் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
இலங்கையின் எதிர்காலத்திற்கு புதிய அரசியல் அமைப்பினை அறிமுகப்படுத்தும் நோக்குடன் புதிய அரசியல் இயக்கத்தினை உருவாக்கியுள்ளதாக வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.