சமஷ்டிக்குத் தயாரா?; ஜனாதிபதி மெளனம்; சபையில் கஜேந்திரன் நேரடியாகக் கேள்வி
தமிழ் மக்கள் இந்த நாட்டினுடைய அபிவிருத்தியிலும் முன்னேற்றத்திலும் பங்கெடுத்து உலக வல்லரசுத் தரத்திற்கு இந்த தேசத்தை கொண்டு வருவதற்கான சமஷ்டி அரசியலமைப்பை கொண்டுவருவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தயாரா? என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எம்.பி.யான செல்வராசா கஜேந்திரன் ஜனாதிபதியிடம் நேரடியாகவே கேள்வி தொடுத்தார்.
பாராளுமன்றத்தில் பெண்களின் சமத்துவம் தொடர்பான சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் அறிவித்த வியாக்கியானம் குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்து தொடர்பிலேயே இவ்வாறு கேள்வி எழுப்பிய கஜேந்திரன் எம்.பி. மேலும் பேசுகையில்,
இன்றைய காலகட்டத்தில் இந்த நாட்டை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்க பல முயற்சிகளை அவர் செய்து வருவதாக தொடர்ச்சியாக கூறி வருகின்றார். இந்த நாட்டை பொருளாதார அழிவிலிருந்து மீட்டெடுக்கச் செய்ய வேண்டிய மிகப் பிரதானமான கடமை அவருக்கு இருக்கின்றது என்பதனை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன் .
இனங்களுக்கிடையில் 75 வருடங்களுக்கு மேலாக இருந்த உறவை சீர்குலைத்து துருவமயப்படுத்தியுள்ள ஒற்றையாட்சி முறையே இந்த நாட்டினுடைய பொருளாதாரத்தை வங்குரோத்து நிலைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த நாட்டினுடைய உயர் நீதிமன்றம் உட்பட அனைத்து நீதிமன்றங்களையும் முடமாக்கியுள்ள ஒற்றையாட்சி முறை ஒழிக்கப்பட்டு தமிழ் தேசமும் சிங்கள தேசமும் சமத்துவமாக இந்த நாட்டினுடைய முன்னேற்றத்தில் பங்கெடுக்கக்கூடிய ஒரு சமஷ்டி அரசியலமைப்பு கொண்டுவரப்படுவதன் மூலம் மட்டும்தான் இந்தத் தேசத்தில் முன்னேற்றத்தை நிரந்தரமாக ஏற்படுத்த முடியும் .
அவ்வாறான ஒரு முயற்சியை செய்வதற்கு ஜனாதிபதி தன்னுடைய காலத்தில் இந்த ஒற்றையாட்சி முறையை ஒழித்து தோல்விகளை எல்லாம் ஒப்புக்கொண்டு ,அதனை ஜனாதிபதியின் தோல்வி என நான் சொல்லவில்லை. ஒற்றையாட்சி முறையின் தோல்வியை ஒப்புக்கொண்டு தமிழ்தேசமும் சிங்கள தேசமும் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையில் ஒரு சமஷ்டி அரசியலமைப்பை கொண்டுவருவதற்கும் அதன் மூலம் தமிழ் மக்கள் இந்த நாட்டினுடைய அபிவிருத்தியிலும் முன்னேற்றத்திலும் பங்கெடுத்து உலக வல்லரசு தரத்திற்கு இந்த தேசத்தை கொண்டு வருவதற்கான சமஷ்டி அரசியலமைப்பை கொண்டுவருவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் அதற்கு அவர் தயாரா என கேள்வி எழுப்புகின்றேன் என்றார்.
கஜேந்திரன் எம்.பி.யின் உரையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேட்டுக்கொண்டிருந்த போதும் எந்தப் பதிலையும் அளிக்கவில்லை.