24 ஆண்டுகளின் பின்னர் வடகொரியா செல்லும் ரஷ்ய ஜனாதிபதி: அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ள கவலை
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், 24 ஆண்டுகளின் பின்னர் முறையாக வடகொரியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எதிர்வரும் செவ்வாய்கிழமை தலைநகர் பியோங்யாங்கில் வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னை சந்தித்துப் புடின் பேசுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு தலைவர்களும் கடைசியாக கடந்த ஆண்டு செப்டம்பரில் ரஷ்யாவின் தூர கிழக்கில் உள்ள வோஸ்டோச்னி காஸ்மோட்ரோமில் சந்தித்துப் பேசினர்.
இந்நிலையில், 2000ஆம் ஆண்டுக்கு பின்னர் புடினின் முதல் விஜயம் இதுவாகும்.
எவ்வாறாயினும், ரஷ்ய ஜனாதிபதியின் இந்த விஜயம் குறித்து அமெரிக்கா கவலைகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், இதனை “நட்புமிக்க அரசு விஜயம்” என்று கிரெம்ளின் விவரித்துள்ளது.
இதனிடையே, இருநாட்டு தலைவர்களும் பாதுகாப்பு பிரச்சினைகள் உட்பட ஒரு கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் எனவும் ஊடகங்களுக்கு கூட்டாக அறிக்கைகளை விடுப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிம் இல் சுங் சதுக்கத்தில் ஒரு பாரிய அணிவகுப்பு இடம்பெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் கடைசியாக 2019 ஆம் ஆண்டு வட கொரியாவிற்கு விஜயம் செய்தபோது தங்கியிருந்த பியாங்யாங்கில் உள்ள கும்சுசன் விருந்தினர் மாளிகையில் புடின் தங்குவார் என்று தகவல்கள் உள்ளன.
புடினின் இந்த விஜயத்தில் ரஷ்யாவின் புதிய பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரே பெலோசோ, வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் துணை பிரதமர் அலெக்சாண்டர் நோவாக் ஆகியோரும் இணைந்துகொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.