இலங்கை

அனைத்து தமிழ் தலைவர்களுக்கும் சிலை அமைக்கப்படும்!

தேசிய நல்லிணக்கமும் அணுகுமுறைகளும் மட்டுமல்லாது, எமது தற்துணிவுமே இன்று சிவகுமாரன் சிலை கம்பீரமாக நிமிர்ந்திருக்க காரணம் என சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எதிர்காலத்தில் கட்சி மற்றும் இயக்க வேறுபாடுகளின்றி, ஈழப் போராட்டத்தினை முன்னெடுத்த அனைத்து தலைவர்களுக்கும் சிலைகளை அமைத்து, அவர்கள் அனைவரையும் வரலாற்றில் நிலைநிறுத்த எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

ஈழப் போராட்ட வரலாற்றில் உயிர்த் தியாகம் செய்த முதல் போராளி பொன் சிவகுமாரனின் 50ஆவது ஆண்டு நினைவுதினத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உரும்பிராயிலுள்ள பொன் சிவகுமாரனின் திருவுருவச்சிலை அமைவிடத்தில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ந்து கூறுகையில்,

“ஈகைச் சுடரேற்றி மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் நடைபெற்ற நினைவுக் கூட்டத்தில் தொடர்ந்தும் தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடிய தமிழ் தலைவர்கள், போராளிகள், மக்கள் என பலரும் நினைவுகூரப்பட வேண்டியவர்களாக உள்ளனர். அவர்களது நினைவேந்தல்களும் குறிப்பாக அவர்களது நினைவுச் சிலைகள் நிறுவப்படுவதும் அவசியமாகும். இதில் கட்சி பேதங்களோ இயக்க வேற்றுமைகளோ இருக்கப்போவதில்லை.

பொன் சிவகுமாரனது உருவச்சிலை தற்போதுள்ள உருவச்சிலை நிறுவப்படுவதற்கு முன்னர், மூன்று தடவைகள் உடைத்தெறியப்பட்டது. இதற்கு சரியான புரிதல் இன்மையே காரணம் என்று நினைக்கின்றேன்.

ஆனால், 1999களில் அன்றைய அரசுடன் எமக்கிருந்த நல்லுறவு, எமது தேசிய நல்லிணக்க வழிமுறை என்பவற்றுடன் எமக்கிருக்கும் தற்துணிவுமே இந்த சிலையை அமைப்பதற்கும் தலைநிமிர்ந்திருக்கவும் முக்கிய காரணமாக உள்ளது.

அதுபோலதான் யாழ். மணிக்கூட்டு கோபுர சுற்றுவட்டத்திலுள்ள மன்னர்களது சிலைகள், முத்திரைச் சந்தியிலுள்ள சங்கிலியன் சிலை, யாழ். மடத்தடியில் உள்ள தனிநாயகம் அடிகளார் சிலை போன்றனவும் நிறுவப்பட்டன.

இதேவேளை, பொன் சிவகுமாரனது நினைவு நாளான இன்று தமிழர் அரசியல் பரப்பில் உள்ள பல கட்சியின் தலைவர்கள், முக்கியஸ்தர்கள், பிரமுகர்கள் என ஒன்றாக கூடியிருப்பது இந்நாளை அனைவரும் எமது இனத்தின் ஒரு பொதுவான நாளாக அடையாளப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

இருப்பவற்றை பாதுகாத்துக்கொண்டு இழந்தவற்றை ஈடு செய்யும் வகையில் முன்னோக்கி நகர வேண்டும் என்று அடிக்கடி வலியுறுத்துவதை போல, எமது மக்களின் உரிமைசார் விவகாரங்களிலும் நடைமுறை சாத்தியமான முன்னெடுப்புக்களை அனைத்து தரப்பினரும் இணைந்து முன்னெடுக்க முடியும்.

அதேபோன்று, எமது மக்களின் இருப்புக்கள் மற்றும் வரலாறுகள் அடுத்த சந்ததிக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கான முயற்சிகள் அனைத்துக்கும் நாம் முழுமையான ஒத்துழைப்புகளுடன் முயற்சிகளையும் மேற்கொள்ள தயாராக இருக்கின்றோம்” எனவும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.