பொருளாதார மறுசீரமைப்புச் சட்ட நகல் இந்திய ஆதிக்கத்துக்கு வழி வகுக்குமா?
இலங்கை ஒற்றையாட்சி அரசின் வர்த்தமானியில் சமீபத்தில் வெளியிடப்பட்ட பொருளாதார மாற்றத்துக்கான சட்டமூலத்தின் சரத்துக்களை எதிர்த்து உயர் நீதிமன்றில் விசேட தீர்மான மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சட்டமூலத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை மாத்திரமல்ல வாக்கெடுப்பு மூலம் மக்களின் விருப்பம் அறியப்பட வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
சட்டமூலத்தில் முன்மொழியப்பட்டுள்ள சில பகுதிகளில் ”இலங்கை சோசலிச குடியரசு” என்ற அடிப்படையில் இருந்து ”புதிய தாராளமய அரசு” என்ற தன்மைக்கு மாற்ற முயற்சிப்பதாகவும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
தொழிற் சங்க நடவடிக்கை
அரச மற்றும் தனியார்துறையைச் சேர்ந்த முறையான மற்றும் முறைசாரா தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற் சங்கங்களின் பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்து இம் மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
பொருளாதார மறுசீரமைப்புச் சரத்துகள் தொழிலாளர்கள் மற்றும் குறிப்பாக இளம் தொழிலாளர்கள் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இச் சட்டமூலத்தன் நேரடி விளைவுகளை எதிர்கொள்ளும் தொழிற்சங்கங்கள், தொழிலாளர்கள் மற்றும் குறிப்பாக இளம் தொழிலாளர்களுடன் அரசாங்கம் கலந்தாலோசிக்கவில்லை என்றும் குறித்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் மூலதனத்தின் இலவச ஓட்டத்தை ஊக்குவிக்கிறது, கட்டுப்பாடற்ற வெளிநாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கிறது மற்றும் பொருளாதாரக் கொள்கை வகுப்பில் அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றத்தின் பங்களிப்பை குறைப்பதாகவும் மனுவில் ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
பொருளாதார ஆணைக்குழு
பொருளாதாரத்தை தீர்மானிக்கும் அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றத்துக்குரிய முழு அதிகாரங்களும் சட்ட மூலத்தின் பிரகாரம் உருவாக்கப்படவுள்ள பொருளாதார ஆணைக்குழுக்குக்கு மாற்றப்படவுள்ளது.
ஆகவே இச் சட்ட மூலம் இறைமையுள்ள இலங்கை அரசின் அடிப்படைத் தன்மையை மாற்றுவதால், அரசியலமைப்பில் உள்ள பொருளாதாரம் பற்றிய சரம் ஒன்றை மீறுவதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
என்ன அவசியத்துக்காக இந்தப் புதிய பொருளாதார மறுசீரமைப்புச் சட்டம் தேவை என்பது பற்றிய பொருள் விளக்கங்கள் சட்டமூலத்தில் இல்லை என்று மனுவைத் தாக்கல் செய்த பிரதிநிதிகள் கூறுகின்றனர்.
முன்னுரை மற்றும் பிரிவுகள் 2, 3 மற்றும் 4 இல் குறிப்பிடப்பட்டுள்ள சட்டமூலத்தின் நோக்கத்தை ரணில் அரசாங்கம் எவ்வாறு அடைய விரும்புகிறது என்பதைச் சட்டமூலம் தெளிவாகக் குறிப்பிடவில்லை என்றும் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வல்லுநர்களின் எச்சரிக்கை
அதேவேளை இச் சட்டமூலத்தின் உருவாக்கப்படவுள்ள புதிய பொருளாதார ஆணைக்குழு தொழில்நுட்பம் உள்ளிட்ட தகவல் தொழில் நுட்ப விடயங்களில் இந்தியாவின் ஆதிக்கத்துக்கு வழிவகுக்கும் என பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
இலங்கை மக்களின் குறிப்பாக இளம் சமூகத்தின் வேலை வாய்ப்பு விடயங்களிலும் மற்றும் பொருளாதாரம் சார்ந்த பதவிகளிலும் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளின் ஆதிக்கம் இருக்க வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
வர்த்தக மற்றும் கைத்தொழில் ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அமரசிங்க சுரஞ்சய, இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் அமரந்த் ரணஜன் சேனாநாயக்க, பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் கல்பா மதுரங்க, இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தரிந்து இரங்க ஜயவர்தன, தரிந்து அமில உடுவரகெதர, அநுரத்த அமில உடுவரகெதர, அனுரத்னந்தோ திஸாபாலக ஆகியோர் சட்டமா அதிபரை பிரதிவாதியாக பெயரிட்டு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.