மீண்டும் பிரதமராகும் மோடி ரணிலுக்குச் சொன்னது என்ன?
இந்தியப் பொதுத் தேர்தலில் தமது கூட்டணி வெற்றி பெற்றுள்ள நிலையில், இலங்கையுடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தனது வெற்றியைத் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோருக்கு நன்றிகளையும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து ‘எக்ஸ்’ தளம் ஊடாக அனுப்பிய செய்திக்கு பதிலளித்த மோடி, “இந்தியா-இலங்கை பொருளாதார கூட்டுறவில் எங்களது தொடர்ச்சியான ஒத்துழைப்பை நான் எதிர்பார்க்கிறேன்.” என்றார்.
பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியின் வெற்றிக்கு ஜனாதிபதி ரணில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார், இது மோடியின் தலைமையின் கீழ் முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றில் இந்திய மக்களின் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது என்று கூறினார்.
அத்துடன், “நெருங்கிய அண்டை நாடான இலங்கை இந்தியாவுடனான கூட்டுறவை மேலும் வலுப்படுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளது” என்றும் ஜனாதிபதி ரணில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்த மோடி, இலங்கையுடனான எமது உறவுகள் சிறப்பானது மற்றும் தனித்துவமான சகோதரத்துவமானது என்றார்.
எங்கள் அண்டை நாடு முதல் கொள்கைக்கு இணங்க எங்கள் பிரிக்க முடியாத பிணைப்புகளை மேலும் வலுப்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்,” என்று சஜித் பிரேமதாச வெளியிட்ட செய்திக்கு மோடி பதிலளித்துள்ளார்.
இதனிடையே, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நண்பர் என விளித்திருந்த மோடி, இந்தியா-இலங்கை கூட்டாண்மை புதிய எல்லைகளை பட்டியலிடுகையில், உங்கள் ஆதரவை தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்” என்று மோடி பதிலளித்தார்.
அத்துடன், சரத் பொன்சேகாவின் வாழ்த்து பதிவிற்கு பதிலளித்துள்ள மோடி, இலங்கையுடனான எமது உறவுகள் விசேடமானவை.
மேலும் அதை ஆழப்படுத்தவும் வலுப்படுத்தவும் நாங்கள் தொடர்ந்து மக்களுடன் இணைந்து பணியாற்றுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.