ஜே.வி.பி.யின் ஆட்சியில் பௌத்தம் எஞ்சியிருக்காது
தேசிய மக்கள் சக்தி ஆட்சியை கைப்பற்றினால் இந்த நாட்டில் பௌத்தம் எஞ்சியிருக்காது எனவும் அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் ஆதரவுடன் மிஹிந்தலை புனித பூமியையும் பொசன் பண்டிகையையும் அழிக்க அரசாங்கம் பாரிய சதித் திட்டத்தை அமுல்படுத்தி வருவதாகவும் மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் தலைவர் வலஹங்குன்வெவே தம்மரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
திசைகாட்டியுடன்(தேசிய மக்கள் சக்தியின் சின்னம்) நேரடியாக இணைக்கப்பட்ட ஒரு தொல்பொருள் அதிகாரி தனது அதிகாரங்களை தவறாகப் பயன்படுத்துகிறார். பொசன் பண்டிகைக்கோ அல்லது வேறு எந்த அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கோ இடமளிக்கவில்லை. அனைத்து வேலைகளும் தடைபடுகின்றன.
பொசன் பண்டிகையில் பங்கேற்க வரும் மக்களுக்கு தண்ணீர் குழாய் பதித்தாலும், மின்விளக்கு பதித்தாலும் கொடி ஏற்றினாலும் கழிப்பறை குழாய் பதித்தாலும் வடிகால் அமைத்தாலும் அதற்கு எதிராக செயல்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிகாரம் இல்லாமல் ஜே.வி.பி. இவ்வாறு செயற்படுமாயின், அநுர குமாரர்கள் ஆட்சிக்கு வந்ததும், விகாரையில் புத்த பூஜையோ, அன்னதானமோ செய்ய அனுமதிக்க மாட்டார்கள் என்பதை உறுதியாகக் கூறலாம். தேசிய மக்கள் சக்தி தலைவர்கள் இன்றும் இணையத்தில் மதம் குறித்து அறிக்கை விடுகின்றனர். ஆட்சியைக் கைப்பற்றப் போகும் இவர்கள் இப்படி நடந்து கொண்டால், ஆட்சியைக் கைப்பற்றிய பின் இந்த நாட்டில் பௌத்தம் எஞ்சியிருக்காது.
தற்போது மிஹிந்தலை ரஜமஹா விகாரைக்கு சொந்தமான கோவில்கள் மற்றும் காணிகளை வேறு நபர்களிடம் ஒப்படைக்க அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. இந்த மிஹிந்தலை புனித தலத்திற்கு பாதுகாப்பையும் அரச ஆதரவையும் வழங்குமாறு மல்வத்து பீடாதிபதி ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.
ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை. கடந்த டிசம்பர் 10ஆம் திகதி முதல் மிஹிந்தலை விகாரைக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு நீக்கப்பட்டது. இப்போதும் அதே நிலைதான். இப்போது அரசாங்கம் பொசன் பண்டிகைக்கு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட 50 இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளதாகக் கூறி தம்மைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கின்றது.
அதனால்தான் அந்தத் தொகையை மறுத்துவிட்டேன். மிஹிந்தலை புனிதபூமி என்பது சுமார் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட புண்ணிய பூமியாகும். ஐம்பது லட்சம் ரூபாவில் என்ன செய்வது. இந்த விழாவை நடத்த சுமார் 02 – 03 கோடி ரூபா தேவைப்படுகிறது. இந்த நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இப்போது சிலர் வாக்குகளுக்காக பல வருடங்களாக போராடுகின்றனர். மற்றவர்கள் 2048 வரை காத்திருக்க முயற்சிக்கின்றனர். இவர்களை விரட்டியடிக்கும் வரை நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்மை ஏற்படாது. இவர்கள் இப்போது அரசையும் அதிகாரத்தையும் பதவியையும் வைத்து மக்களை மிதிக்கப் பார்க்கிறார்கள். இந்த பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.