ரி.ஐ.டி.,சி.ஐ.டி போன்றவற்றின் அடாவடியால் வட, கிழக்கில் அரசின் மறைமுக நிகழ்ச்சி நிரல்
தமிழர்கள் அவர்களின் தாயகப் பகுதியான வடக்கு,கிழக்கில் ஜனநாயக ரீதியாக அரசியல் செய்ய முடியாதவாறு ரி.ஐ.டி.சி.ஐ.டி போன்ற பிரிவுகளினால் .அச்சுறுத்தப்படுவதாக குற்றம்சாட்டிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட எம்.பி.யான எஸ் .ஸ்ரீதரன்,காணிகளை பறித்தல் , அச்சுறுத்துதல்,கைது செய்தல், விசாரணைகளுக்கு அழைத்தல் .அங்கு வாழும் மக்களின் எண்ணங்களை சிதைத்தல் எனதமிழர் பகுதியில் இந்த அரசு ஒரு மறைமுக நிகழ்ச்சி நிரலை முன்னடுப்பதாகவும் சாடினார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மகளிர் வலிவூட்டல் சட்டமூல விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குற்றம்சாட்டிய அவர் மேலும் பேசுகையில்,
தமிழ் இளைஞர்கள் ,தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள் தொடர்ந்தும் விசாரணைகளுக்குட்படுத்தப் படுகின்றார்கள். அச்சுறுத்தப்படுகின்றார்கள் .தமிழர்கள் அவர்களின் தாயகப் பகுதியான வடக்கு,கிழக்கில் ஜனநாயக ரீதியாக அரசியல் செய்ய முடியாதவாறு ரி.ஐ.டி.சி.ஐ.டி போன்ற பிரிவுகளை சேர்ந்தவர்கள் அதிகமான விசாரணைகளை மேற்கொண்டு அச்சுறுத்தி வருகின்றனர் அதேவேளை இன்னும் பலரின் பெயர்களையும் அவர்கள் விசாரணைகளுக்கு அறிவித்துமுள்ளனர்.
அவர்கள் சொல்லும் சுருக்கமான வசனம் விடுதலைப்புலிகளை மீள் உருவாக்கம் செய்கின்றார்கள் என்பது. இறந்துபோன ஆத்மாக்களை நினைவு கூர நாம் அனுமதிக்கின்றோம் என்று 2015 ஆம் ஆண்டு ஐ.நா. வில் அப்போதைய அரசு ஏற்றுக்கொண்டிருந்தது. 2016 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நீங்கள் வணக்கம் செலுத்த எந்த தடையும் இல்லை என எமக்கு உறுதியளித்திருந்தார். ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை வடக்கு,கிழக்கில் உள்ள பொலிஸாரும் புலனாய்வுத்துறையினரும் இடையூறுகளை ஏற்படுத்துவதுடன் விசாரணைகள், கைதுகளையும் மேற்கொள்கின்றனர். இதனால் தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள் ,மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
காணிகளை பறித்தல் , அச்சுறுத்துதல்,கைது செய்தல், விசாரணைகளுக்கு அழைத்தல் .அங்கு வாழும் மக்களின் எண்ணங்களை சிதைத்தல் எனதமிழர் பகுதியில் இந்த அரசு ஒரு மறைமுக நிகழ்ச்சி நிரலை முன்னடுக்கின்றது .இது மிக மோசமானது.
இதேவேளை மாவிட்டபுரத்திலுள்ள சித்தர்களின் வாழ்விடமான 105 பரப்பு காணியை ஒரு தனியாருக்கு வழங்குவதற்காக அதனை பறிப்பதற்கு அரசு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது .அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சென்றபோது நல்ல ஆதீனத்தை சந்தித்தபோதும் அங்கு சிவபூமி அறக்கட்டளை பணிப்பாளர் ஆறு திருமுருகனாலும் நல்லை ஆதீன முதல்வராலும் இந்தக்காணியை விடுவித்து தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டபோது விடுவிக்கிறேன் என உறுதியளித்துவிட்டு வந்த ஜனாதிபதி இதுவரையில் விடுவிக்க வில்லை.
கடந்த ஞாயிறு ,திங்கட்கிழமைகளில் அந்த 105 பரப்புக்காணியில் இராணுவத்தினரால் கற்கள் பரப்பப்பட்டு வேலிகள் அமைக்கப்படுகின்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக சிவபூமி அறக்கட்டளையை சேர்ந்தவர்களும் மக்களும் என்னிடம் முறைப்பாடு செய்துள்ளார்கள். எனவே இது விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த 105 பரப்புக்காணியை திருப்பி கையளிக்க வேண்டும்.அந்தக்கனியை விடுவிக்குமாறு சிவபூமி அறக்கட்டளை ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தையும் இந்த சபையில் சமர்ப்பிக்கின்றேன் என்றார்.