இந்தியாவின் புதிய பிரதமருக்கு வாழ்த்து கூற ஜனாதிபதி ஞாயிறு டெல்லி செல்கிறார்
இருநாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு செல்கின்றார். இந்திய தேர்தல் முடிவுகள் இன்று செவ்வாய்க்கிழமை வெளிவரவுள்ள நிலையில், இந்தியாவின் புதிய பிரதமருக்கு நேரடியாக சென்று வாழ்த்து கூறும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் டெல்லி விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்த விஜயமானது இருநாடுகளின் உறவுகளின் வலுவான நிலையையும் இலங்கையின் பொருளாதார மீட்சியில் இந்தியாவின் ஒத்துழைப்புகள் இன்றியமையாத ஒன்று என்பதையும் எடுத்துக்;காட்டும் வகையில் அமைந்துள்ளது. எனவே தான் இந்திய தேர்தல் முடிவுகள் வெளிவரவுள்ள நிலையில் யார் ஆட்சி அமைத்தாலும் அந்த அரசாங்கத்துடன் ஒன்றித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தல் மற்றும் புதிய பொருளாதார இணைப்புகளை துரிதப்படுத்தல் போன்றவற்றில் இலங்கையின் ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் டெல்லி செல்கின்றார்.
குறிப்பாக கோட்டாபய ராஜபக்ஷ தலைமைத்துவத்தின் கீழ் நாட்டில் ஏற்பட்ட அரசியல் பொருளாதார பெரும் நெருக்கடியின் பின்னர் இலங்கைக்கு இந்தியா பல உதவித்திட்டங்களை வழங்கியது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த போதும் கூட, எரிபொருள் தட்டுப்பாட்டை சீரமைக்க முழு அளவில் இந்தியா உதவிகளை செய்தது. மேலும், உணவு, மருந்து மற்றும் உரம் என பொருளாதார நெருக்கடிகளை தவிர்க்கும் வகையில் பல உதவித்திட்டங்களை இந்தியா வழங்கியது. அது மாத்திரமன்றி சர்வதேச அரங்கிலும் இலங்கைக்காக இந்தியா ஒத்துழைப்பு கோரியது.
நெருக்கடியின்போது மாத்திரம் சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர் உதவித்திட்டங்களை இந்தியா வழங்கியிருந்தது. எனினும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியேற்று சுமார் ஒரு வருடத்தை கடந்த பின்னரே டெல்லி விஜயத்திற்காக அழைப்பு கிடைக்கப்பெற்றது. ஆனால், பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான இருதரப்பு கலந்துரையாடலுக்காக இலங்கை பலமுனைகளில் முயற்சிகளை மேற்கொண்டது. இந்த தாமதத்திற்கு பல்வேறு காரணங்கள் அப்போது கூறப்பட்டன.
சீன உளவுக்கப்பல் விவகாரம், மாத்திரமன்றி இலங்கை மக்களின் எரிபொருள் நெருக்கடியை தீர்க்க இந்திய ஒத்துழைப்பு வழங்கிய போதிலும், சீன கப்பல்களுக்கு அவற்றை வழங்குவதாக கூறி டெல்லி அதிருப்தியை வெளியிட்டது. அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையில் 2017ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட கூட்டு இணக்கப்பாடுகளுடனான 15க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பில் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றாமல் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலான திட்டங்கள் இலங்கையில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் டெல்லி கவலை தெரிவித்தது.
இவ்வாறானதொரு நிலையில், சுமார் ஓருவருடத்திற்கு பின்னர் கடந்த வருடம் ஜுலை மாதம் உத்தியோகப்பூர்வ அழைப்பு விடுக்கப்பட்டு ஜனாதிபதி ரணிலுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. இதன் போது இருதரப்பு ஒத்துழைப்புகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு ஒத்துழைப்புகள் குறித்து கூடுதல் அவதானம் செலுத்தப்பட்டதுடன், புதுப்பிக்கதக்க ஆற்றல் சக்தி, இரு நாடுகளுக்கு இடையில் கடலூடான எரிபொருள் குழாய் மற்றும் மின்சார கேபில் இணைப்புகளை ஏற்படுத்தல், திருகோணமலையில் பொருளாதார வலயம், மருந்து பொருட்களை நேரடியாக கொள்வனவு செய்தல் மற்றும் பால் உற்பத்தி ஆகியவை தொடர்பான இருதரப்பு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு சீராகவும் செயல்திறன்மிக்கதாகவும் தற்போது காணப்படுகின்றது. இலங்கையில் இந்தியாவின் பல புதிய திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்தியா பொருளாதரத்துடன் இலங்கை இணைய வேண்டும் என்பதில் ஜனாதிபதி ரணில் ஆர்வம் கொண்டுள்ளார். இந்திய தேர்தலில் வெற்றிப்பெறும் தலைவருக்கு நேரடியாக சென்று வாழ்த்து கூறும் வகையில் ஜனாதிபதி ரணில் டெல்லி செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.